பூட்சிநிலை கருதி ஒழுகின் உயிர்க்குறுதி சேர்ந்து பெருகும் - விநயம், தருமதீபிகை 545

நேரிசை வெண்பா

மூச்சு நிலையை முதலறிந்து மூலமாம்
பேச்சு நிலையைப் பெரிதுணர்ந்து - பூட்சிநிலை
ஓர்ந்து கருதி ஒழுகின் உயிர்க்குறுதி
சேர்ந்து பெருகும் சிறந்து. 545

- விநயம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உள்ளிருந்து வெளிவருகிற மூச்சையும் பேச்சையும் பெரிதும் போற்றி உடல் நிலையை ஓர்ந்து பாதுகாத்து ஒழுகி வருக; அதனால் உயிர்க்கு உயர்ந்த நலங்கள் உளவாம் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் மூச்சும் பேச்சும் அறிக என்கின்றது.

உயிர் உடலில் வாழ்ந்து வரும் நிலையைக் கருதியுணரின் அது ஒரு பெரிய அதிசய வியப்பாம். ஆன்மா, சீவன், பிராணன் என இன்னவாறு பேசி வருவது எதை? அது என்ன உருவில் உள்ளது? எனின், இக் கேள்விகளுக்கு எளிதில் பதில் சொல்லுவது அரிது.

மூக்கிலிருந்து வெளி வருகிற மூச்சைக் கொண்டு உயிருள்ளது என்னும் பேச்சு வழங்கி வருகிறது. உயிர்ப்பு என்று மூச்சுக்கு ஒரு பெயர். உயிரையுடையது, உயிர்க் காற்று என்னும் பொருள்களை அது உணர்த்தியுள்ளது. உயிராதாரமாய் நின்று உடலில் உலாவி வருகிற அதன் நிலையை இதனால் உணர்ந்து கொள்ளலாம்.

தன்னை அறிய நேர்ந்த மகான்கள் முன்னதாக இந்த மூச்சு நிலையை அறிந்து கொள்ளுகின்றனர். மூச்சை அறிந்தான் முடிவை அறிந்தான் என்பது பழமொழி. அதன் அதிசய நிலைமையையும் தலைமையையும் இம் முதுமொழி மதி தெளியச் செய்துள்ளது.

தன் நாசியிலிருந்து வெளிவருகிற சுவாசத்தில் கருத்தைச் செலுத்தி அதனோடு பழகி வருபவன் நாளடைவில் விழுமிய ஆன்ம தரிசனம் செய்தவனாகிறான். ஆகவே அவன் ஈசனோடு வாசி பேச நேர்கின்றான்.

சரநிலை, பிராணாயாமம், இராசயோகம் என மேலான நிலைகளில் பேசி வருவனவெல்லாம் மூச்சை நோக்கிச் செய்யும் தவ ஒழுக்கங்களேயாம்.

மனம் ஓயாமல் அலையும் இயல்பினது. மூச்சை ஒழுங்காக வசப்படுத்தின் மனம் அங்கே எளிதாய் வசப்பட்டு நிற்கும். மனத்தை அடக்கியருளுதலால் சுவாசத்தை மான வீரன் என ஞான தீரர் கூறி வருகின்றனர். –

கடிவாளத்தில் குதிரை அடங்கி நிற்றல்போல் சுவாசத்தில் மனம் அடங்கி நிற்கிறது. அந்நிலை யோகம் ஆகிறது; ஆகவே அதனை யுடையவர் யோகிகள் ஆகின்றனர்.

மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறிகளுக்கும் மூலமுதலாயுள்ள மனம் இனிமையாய் அடங்கவே அங்கே மேலான இன்பம் தனியே விளைந்து வருகிறது. அந்த ஆனந்த போகம் பிராணாயாமத்தால் அமைந்து வருதலால் இது ஞான யோகமாய் விளங்கி நிற்கின்றது.

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக்கொண் டேறுங் குதிரைமற் றொன்றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே. 1

புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்;
கள்ளுண்ண வேண்டா; தானே களிதரும்;
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே. 3

வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியனும் வெட்ட வெளியனு மாமே. 6

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே. 8, மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம்

நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவனவன் ஆமே. 7 மூன்றாம் தந்திரம் - 8. தியானம், திருமந்திரம், பத்தாம் திருமுறை

நாசியிலிருந்து வெளிவருகிற சுவாச நிலையைக் கருதியுணர்ந்து அதனோடு மனத்தை இணைத்துப் பிணைத்து இனிது லயப்படுத்திப் புனிதமான ஆத்தும ஆனந்தத்தை அனுபவிக்கிற யோக நீர்மைகளைத் திருமூலர் இங்ஙனம் குறித்திருக்கிறார்.

உயிரின் உயிர்ப்பாயுள்ளமையால் மூச்சு பிராணவாயு என வந்தது. வலது நாசி வழியாயும், இடது நாசி வழியாயும் மாறி மாறி ஓயாமல் இது ஒடிக்கொண்டேயிருக்கிறது. ஒரு விநாடிக்கு ஆறு மூச்சுகள் நேருகின்றன. ஒரு நாழிகைக்கு முந்நூற்று அறுபது சுவாசங்கள் நிகழ்தலால் ஒரு நாளைக்கு 21600 ஆகின்றன. மூக்கிலிருந்து வெளிவருகிற சுவாசம் பன்னிரண்டு அங்குலம் நீண்டு செல்லுகிறது, மீண்டு உள்ளே திரும்பும் பொழுது எட்டு அங்குலமே சேருகிறது. இந்தக் கழிவுதான் ஆயுள் அழிவாய் அமைகிறது. சீவ ஆவியாயுள்ள இதனை யோகிகள் நன்கு பேணி வருதலால் நலம்பல பெறுகின்றனர்.

நயந்து சமாதியில் இயங்கும் பன்னிரண்டங் குலிதான்
நடந்திடில் ஈரெட்டுவிரல் இயங்கியிடும்; நவையார்
துயங்க விரைந்(து) ஓடிடில் ஐயாறுவிரல் இயங்கும்;
துயிலுறில் எண்ணைந்து விரற்கிடை யுடல்விட் டகலும்;
தயங்கிய வேல்விழி யாரை முயங்கியிடும் பொழுதில்
தரியா(து)எண் ணெண்விரலின் அளவுயிர்விட் டியங்கும்.
பயங்கொ ளிடைபிங் கலைகள் ஒருவழிப்பட் டிடவே
பரிந்தநற் குண்டலி யோகம் பொருந்திடுமங் குறவே. – சிவஞான தீபம்

இன்ன இன்ன வகையில் சுவாசங்கள் இவ்வளவு கழிவாம் என இது உணர்த்தியுள்ளது. உயிராதாரமான உயிர்ப்பை உரிமையோடு பேணி வருபவர் உயர்ந்த உறுதி நலங்களை அடைந்து மகிழ்கின்றனர்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

வாயு நிற்ப மனம்நின்று,
..மனந்தான் நிற்பப் பொறிநின்று,
பாய பொறிகள் நிற்பயிடர்
..படுபுன் புலன்கள் நின்றனவால்
ஆய புலன்கள் நின்றமையால்
..அகிலம் தோன்றா(து) உள்ளத்தே
தூய பரமா னந்தபரஞ்
..சோதி தோன்றக் கண்டிருந்தார். - பிரபுலிங்க லீலை

வாசியைக் கைக்கொண்டு ஈசனைக் கண்டுள்ளவர்களை இது காட்டியிருக்கிறது. உயிர்ப்பின் வழியே சென்றவர் உயிரை உயர்த்தி உயர் பேரின்பம் எய்துகின்றனர். பந்தம் நீங்கிக் சொந்த ஆன்மாவை அடைந்து கொள்ளுதலால் பெரியோர் இதனைப் பிறவிப் பேறாகக் கருதுகின்றனர். இந்தப் பேற்றை இழந்திருப்பது பெரிய பேதைமையாக மறுகியுள்ளனர்.

ஆணிலே பெண்ணிலே என்போல ஒருபேதை
அகிலத்தின் மிசையுள்ளதோ
ஆடிய கறங்குபோ லோடியுழல் சிந்தையை
அடக்கியொரு கணமேனும்யான்
காணிலேன் திருவருளை யல்லாது மௌனியாய்க்
கண்மூடி யோடுமூச்சைக்
கட்டிக் கலாமதியை முட்டவே மூலவெங்
கனலினை எழுப்பநினைவும்
பூணிலேன் இற்றைநாட் கற்றதுங் கேட்டதும்
போக்கிலே போகவிட்டுப்
பொய்யுலக னாயினேன் நாயினுங் கடையான
புன்மையேன் இன்னம்இன்னம்
வீணிலே யலையாமல் மலையிலக் காகநீர்
வெளிப்படத் தோற்றல் வேண்டும்
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தகச் சித்தர்கணமே. 7 சித்தர்கணம், தாயுமானவர்

மூச்சைக் கட்டி மூலக்கனலை எழுப்பிச் சந்திர மண்டலத்தை வெதுப்பி அங்கிருந்து பெருகி வருகிற அமிர்த தாரையைப் பருகி ஆனந்தமுறாமல் காலத்தை அவமே போக்கி விட்டேனே! என்று தாயுமானவர் பரிதபித்திருக்கும் நிலையை இதில் கருதிக் காண வேண்டும்.

கால்பிடித்து மூலக் கனலைமதி மண்டலத்தின்
மேல்எழுப்பில் தேகம் விழுமோ பராபரமே.

என அவர் உருகியுள்ளதும் ஈண்டு அறிய வுரியது.

உடலில் உயிர் வாசம் செய்து வரும்படி மூச்சு இயங்கி வருதலால் அது சுவாசம் என வந்தது. உள்ளே தோய்வது உசுவாசம், வெளியே பாய்வது நிசுவாசம் என நேர்ந்தது. மூக்கின் வலப்புறம் இயங்குவது பிங்கலை, இடப்புறம் நடப்பது இடகலை. இந்தச் சுவாசங்களை ஒருமுகப் படுத்திப் புருவ மத்தியில் நிறுத்தின் அது ’சுழுமுனை’ எனப்படும். இரேசகம், பூசகம்: கும்பகம் என்பன யோக வகையின் தொகை மொழிகள்.

உயிர் நிலையமான சுவாசத்தை இனிது கவனித்துத் தனது வாழ்வைப் புனிதமாகச் செய்யின் அந்த மனிதன் அதிசய நிலையை அடைகிறான். மூச்சொடு தோய்பவன் முனிவனாகிறான்,

மூக்கில் இயங்குகிற மூச்சை அறிதல் போலவே வாயிலிருந்து வருகின்ற பேச்சையும் பரிசுத்தமாகப் பேணி ஒழுக வேண்டும். மூச்சும் பேச்சும் உயிர் நிலையங்கள்; அவற்றைப் பழுது படுத்தாமல் விழுமிய நிலையில் ஒடுக்கி வருபவர் வியன் பயன் பெறுகின்றனர். மூக்கும் வாயும் நோக்கின் அது ஆக்கமாய் வருதலால் ஆனந்த போகமாகிறது.

மூச்சற்றுச் சிந்தை முயற்சியற்று மூதறிவாய்ப்
பேச்சற்றோர் பெற்ற ஒன்றைப் பெற்றிடுநாள் எந்நாளோ? - தாயுமானவர்

வண்டு தேனை நுகரும் பொழுது ஒலி அடங்கி நிற்கிறது; சீவன் பரமானந்தத்தை அனுபவிக்கும்போது செயல்கள் ஒடுங்கி விடுகின்றன. உள்ளம் உயிருள் திரும்பின் பேரின்ப வெள்ளம் பெருகுகிறது. அந்த இன்பப் பெருக்கை எய்தி மகிழ்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Dec-19, 9:38 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே