கூர்ந்து கருதிக் குறிக்கோளை ஓர்ந்து புரியின் உயர்வாகும் - விநயம், தருமதீபிகை 548

நேரிசை வெண்பா

கூர்ந்து கருதிக் குறிக்கோள் உடனெதையும்
ஓர்ந்து புரியின் உயர்வாகும் - தேர்ந்து
புரியாத வாழ்வு புலையாய் இழிந்து
பரிதாபம் ஆகும் பரிந்து. 548

- விநயம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

எதையும் நுணுகி உணர்ந்து கருத்தோடு வாழ்வை நடத்தி வரின் அது உயர்ந்து சிறந்து ஒளி மிகுந்து விளங்கும்; கருதிச் செய்யாத வாழ்வு புலையாய் உலைந்து பரிதாபமாய் இழிந்து போகும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், வினைகளை விநயமாய்ச் செய் என்கின்றது.

அறிவு மனிதனைப் பெருமைப்படுத்துகிறது. அதனைச் சரியாக உரிமை செய்து கொண்டவன் பெரிய பாக்கியவானாய் அரிய மகிமைகளை அடைகிறான். எல்லாக் காரியங்களையும் சீர்மையாக நடத்துவதற்கு அது கூர்மையான கருவியாய் நீர்மை சுரந்துள்ளது. கருமங்களின் மருமங்கள் கருதியுணர வுரியன.

எண்ணுதல், பேசுதல், செய்தல் என்னும் இவை மனிதனிடமிருந்து எப்பொழுதும் இயல்பாக நடந்து கொண்டிருக்கின்றன. நிகழுகின்ற செயல்கள் நல்ல அறிவோடு கலந்து வெளி வரின் அவை இனிய பயனுடையனவாய் நல்வினையாகின்றன.

அங்ஙனம் இல்லையாயின் பொல்லாதனவாய்ப் புலையுறுகின்றன. இந்த இருவகையிலும் சேராமல் வேறு வினைகளாகவும் சில விளைந்து விளிகின்றன.

மனம்மொழி மெய்அறி(வு) ஆகிய நான்கன்
அசைவே ஆகியும் அவ்வசைவு இன்றியும்1
நல்வினை தீவினை வெறுவினை எனநடந்து2
அறிந்து செய்வினை அறியாது செய்வினை
அசேதனம் செய்வினை எனவே அமர்ந்து3
தீவினை நல்வினை சிலமுறை திறம்பிச்4
செய்யா வினையே செய்வினை ஆகிச்5
செய்இரு வினையே செய்யா வினையாய்6
இன்னும் பலவாம் இலக்கணம் பெறுமே. - இலக்கணக் கொத்து

செயல்கள் விளைகின்ற நிலைகளையும் வகைகளையும் இது உணர்த்தியுள்ளது. இயல்பான இயக்கங்கள் எங்கும் இயங்கி நிற்கின்றன. நினைவின் அலைகள் நிலையாயலைகின்றன.

மனம் எப்பொழுதும் சலிக்கும் இயல்புடையதாதலால் அதிலிருந்து செயல்கள் கலித்தெழுகின்றன. பழகி வந்த வாசனைகளுக்குத் தகுந்தபடி அவை அமைந்து வருகின்றன.

தன்னுடைய இயல்புக்கும் தகுதிக்கும் தக்கபடியே மனிதன் காரியங்களைச் செய்து வருகிறான். ஒருவன் செய்துவரும் செயல்கள் அவனுடைய நிலைகளைத் தெரியச் செய்கின்றன.

’கூர்ந்து கருதிக் குறிக்கோளுடன் ஓர்ந்து புரிக’ என்றது கருமங்களைத் திருத்தமாகச் செய்யும் திறங்களை யுணர்த்தியது. கருத்தை ஊன்றிச் செய்யின் அந்தக் காரியம் எவ்வழியும் செவ்வை ஆகின்றது. அங்ஙனம் செய்யாதது சிதைந்து படுகிறது. கருத்து வளைந்த அளவே திருத்தம் விளைந்து வருகிறது.

நாட்டு நலம் கருதி அரச காரியங்களை நடத்தும் அதிகாரிகள் சிறிது தவறினாலும் அது பெரிய கேடாகுமாதலால் அவர் கொடிய பழிகளை அடைய நேர்கின்றனர். காரியக்கேடு நேராமல் கருதிச் செய்பவரே சீரியராகின்றனர். அல்லாதவர் சீரழிகின்றனர்.

The vices of authority are chiefly four: delays, corruption, roughness and facility. - Bacon

அரசாங்க அதிகாரிகளின் முக்கிய குற்றங்கள் நான்கு: தாமதம், தவறு, கவனியாமை, முக தாட்சணியம்’ என பேக்கன் என்னும் பேராசிரியர் இங்ஙனம் குறித்திருக்கிறார்.

காலம் கடத்தாமல், இலஞ்சம் வாங்காமல், கருத்தூன்றி யாண்டும் நேர்மையுடன் உறுதியாய் நின்று காரியங்களைச் செய்து வரின் அந்த அதிகார முறை மரியாதை பெறுகின்றது; அவ்வாறு .செய்யாதது பரிதாபமாய் இழிகின்றது.

செய்துள்ள கருமங்களைக் கொண்டுதான் மனிதன் மதிக்கப்படுகின்றான். உருவத்தாலும் பேச்சாலும் எவரையும் பெரிதாக மதிப்பதில்லை. ‘கருமமே கட்டளைக்கல்’ என்ற வள்ளுவர் வாக்கு யாவரையும் நிறுத்து நிலை தெரிதற்கு நிலையான அளவு கோலாய் யாண்டும் நிலைத்து நிற்கிறது.

A man of words and not of deeds is just like a garden full of weeds.

நல்ல செயல்கள் இல்லாமல் வெறும் வார்த்தைகளுடைய மனிதன் களைகள் நிறைந்த தோட்டம் போல் உள்ளான்” என்னும் இது இங்கே உணரவுரியது. இந்த உவமை சிந்திக்கத்தக்கது. அரிய கருமங்களைச் செய்யாமல் வறிதே திரிந்து வருபவன் பெருமைகளை இழந்து பிழைமிகப் படுகிறான்.

உரிமையுடன் ஓர்ந்து ஊக்கிச் செய்கிற கருமங்கள் மனிதனுக்கு ஆக்கமும் ஆண்மையும் அருளி வருகின்றன. செயலின் அளவே உயர்வாதலால் உன்னதமான காரியங்களைச் செய்து கொள்ள வேண்டும். கரும வீரனுடைய வாழ்வை யாவரும் அருமையாகப் புகழ்ந்து போற்றுகின்றனர்.

A life spent worthily should be measured by a nobler line: by deeds, not years. - Sheridan

உயர்ந்த நிலையில் கழிந்த ஒரு மனித வாழ்வு சிறந்த அளவால் மதிக்கப்படுகிறது; அந்த அளவு வயதாலன்று, செயல்களாலேயாம்' என ஷெரிடன் என்பவர் இங்ஙனம் உரைத்திருக்கிறார். அரிய காரியங்களைச் செய்து பெரிய மேன்மை பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Dec-19, 6:16 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 60

மேலே