கல்விமான் என்ன ஒருவன் எழின் அறிவுபலர் துன்ன வருவர் - கல்வி, தருமதீபிகை 558

நேரிசை வெண்பா

செல்வன் எனஒருவன் சேரவரின் ஆயிரம்பேர்
அல்லல் வறுமை அடையவரும்; - கல்விமான்
என்ன ஒருவன் எழினோ அறிவுபலர்
துன்ன வருவர் தொடர்ந்து. 558

- கல்வி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

ஒருவன் செல்வனாய் உயர்ந்தால் ஆயிரம் பேர் அல்லல், வறுமைகள் அடைந்து தாழ நேர்வர், கல்விமான் என ஒருவன் சிறந்து எழுந்தால் பல்லாயிரம் பேர் நல்ல அறிவையடைந்து தொடர்ந்து உயர்ந்து வருவர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

செல்வம் மனித வாழ்க்கைக்கு இனிய துணையாய் அமைந்திருக்கிறது. கல்வி அரிய மகிமையாய் மருவியுள்ளது. இந்த இரண்டு செல்வங்களும் எவ்வழியும் விழைந்து ஈட்டப் படுகின்றன. அந்த ஈட்டங்களில் அதிசய விளைவுகள் கோட்டி கொண்டுள்ளன. மாறுபாடுகளின் கூறுபாடுகள் கூர்ந்து காணவுரியன.

செல்வம் உலக நிலையில் பருப்பொருள்களாய் உருண்டு வருகிறது. கல்வி உயிர் நிலையில் நுண்பொருளாய்ப் பண்பமைந்து மிளிர்கிறது. முன்னது ஒரு நிலையுமின்றிச் சுழன்று திரிகிறது; பின்னது என்றும் நிலையாய் நின்று திகழ்கிறது. அது உடலளவில் நின்று ஒழிகிறது; இது என்றும் உயிரோடு ஒன்றி யாண்டும் ஒருவாமல் உறைந்து நிற்கிறது. அது எடுக்குந் தோறும் குறைந்து படுகிறது; இது கொடுக்குந் தோறும் நிறைந்து வருகிறது. அது பொறி நுகர்வுகளை வளர்த்து வெறிகளை விளைக்கிறது; இது அறிவின் அமிர்தமாய் ஆனந்தம் அருளுகிறது. இன்னவாறு பல வேறுபாடுகள் இந்த இருவகைத் திருவுகளுள் மருவியிருத்தலோடு வரவு நிலையிலும் மாறுபாடுகள் பெருகி யுள்ளன.

செல்வன் என ஒருவன் சேரவரின் ஆயிரம்பேர் அல்லல் வறுமை அடையவரும். பெரிய செல்வன் என ஒருவன் பெருகி எழுவானாயின் அங்கே மருவியுள்ள பிழைபாடுகளைக் கருதியுணரும்படி இது காட்டியருளியது. உண்மைக் காட்சி நுண்மையுடையது.

மேட்டின் உயரம் பள்ளங்களைக் காட்டுதல் போல் ஒருவனுடைய செல்வத்தின் ஈட்டம் பலபேர்களை வறுமையாக்கிச் சிறுமை செய்துள்ள நிலைமைகளை நேரே நீட்டியுள்ளது.

புதிய பணக்காரன் ஒரு பெரிய விடு கட்டியிருந்தான். மூன்று அடுக்குகள் உள்ள அந்த மாளிகையைப் பார்த்ததும் ஒரு நீதிமான் நெடிது பரிந்து நின்றார். ’எத்தனை குடிகளைக் கெடுத்து இந்த வீடு இப்படி எழுந்திருக்கிறது!’ என்று அவர் வெப்போடு மொழிந்து போனார். கள் முதலிய மதுபானங்களைக் குடித்துப் பலர் வறியராய்க் குடி கெட்டழிய அவற்றை விற்றவன் பெரிய செல்வனாகி அரிய மாடங்கள் கட்டிப் பெருமை பாராட்டி நிற்கிறான்.

வட்டியால் கரவால் வஞ்சனை வகையால்
..மாயசா லங்களால் ஈட்டிப்
பெட்டியை நிரப்பிப் பெருந்திரு வாளர்
..எனப்பலர் பெருகியுள் ளனரே;

என ஒரு பெரியவர் மறுகியுள்ளதும் ஈண்டு அறிய உரியது

“Some treasures are heavy with human tears.” - Ruskin

’சில நிதியறைகள் மக்களுடைய கண்ணீரால் நிறைந்திருக்கிறது’ என ரஸ்கின் என்னும் ஆங்கில அறிஞர் இங்ஙனம் கூறியிருக்கிறார். பொருளில் ஆசை மிகுந்தபொழுது அருள் நாசம் அடைந்து போகிறது; எனவே எவ்வழியும் இரக்கமின்றி அதனை அடைய நேர்கின்றனர்.

“The ways to enrich are many, and most of them foul.” (Васon)

’பெரும்பாலும் கெட்ட வழிகளாலேதான் செல்வம் ஈட்டப் படுகின்றது’ என பேக்கன் இவ்வாறு குறித்திருக்கிறார். ஒருவன் செல்வன் ஆக நேரின் அது பலரை வறியர் ஆக்கி வருதலால் அந்த ஆக்கத்தின் போக்கும் நோக்கும் புலனாய் நின்றன.

கல்விமான் என்ன ஒருவன் எழின் பலர் அறிவு துன்ன வருவர். என்றது கல்வி ஈட்டத்தின் விளைவைக் கருதியுணர வந்தது.

செல்வம் பிறரை வறியராக்கி ஒருவனிடம் வருகிறது.
கல்வி பலரை அறிவுடையராக்கி உயர்கிறது.

ஒருவன் கல்விமான் ஆனால் அவனுடைய சொல், செயல்கள் யாவும் நல்லறிவை ஊட்டி வருதலால் பலர் அறிவாளிகளாய் வருகின்றனர்.

நேரிசை வெண்பா

கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர் - தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு. 139 கல்வி, நாலடியார்

கல்லாதவரும் கற்றவரைச் சார்ந்தால் நல்லறிவுடையராய் நலம் பல பெறுவர் என இது உணர்த்தியுள்ளது. உவமை நிலையை ஓர்ந்து பொருள் நயங்களை உணர்ந்து கொள்ளுக.

பிறர்க்குச் சொல்லிக் கொடுக்குந்தோறும் கல்வியறிவு உள்ளே பெருகி வருதலால் கற்றவர் யாண்டும் யாருக்கும் அதனை உவந்து வழங்கி வருகின்றனர். வெளியே அள்ளி அருளுவது உள்ளே வெள்ளமாய்ப் பெருகிவருவது அதிசய விளைவாயுள்ளது.

நேரிசை வெண்பா

வாரிப் பிறர்க்கு வழங்குந் தொறும்பெருகி
வாரி எனவே வளருமால் – நேரில்
கலைச்செல்வம் என்கின்ற கற்பகமே என்றும்
தலைச்செல்வம் ஆகும் தழைத்து.

கல்வி இவ்வாறு அற்புத நிலையில் வளர்ந்து வருதலால் அது பல விளக்குகள் கற்பகத் தருவென வந்தது. ஒரு விளக்கிலிருந்து பல விளக்குகள் உளவாகி அளவின்றி விரிந்து யாண்டும் ஒளிகள் புரிந்து வருதல் போல் ஒரு கல்விமானால் பல்லாயிரம் பேர் கல்வியாளராகின்றனர். தன்னையுடையவனுக்கு எழுமையும் இன்பம் தந்து சீவர்களுக்குத் திவ்விய நலங்களை அருளி வருதலால் கல்வி என்றும் அழியாத தெய்வீக நிதி என நின்றது.

‘ய்’ ஆசிடையிட்ட எதுகையமைந்த கட்டளைக் கலித்துறை

வைக்கும் பொருளுமில்வாழ்க் கைப்பொரு ளும்மற் றுளப்பொருளும்
பொ’ய்’க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல, பூதலத்தின்
மொ’ய்’க்கும் பொருளும் அழியாப் பொருளும் விழுப்பொருளும்
உ’ய்’க்கும் பொருளும் கலைமான் உணர்த்தும் உரைப்பொருளே. 26

- சரசுவதியந்தாதி – கம்பர் இயற்றியது

பொன், மணி முதலிய செல்வங்கள் பொய்ப் பொருள்கள்; கல்வி ஒன்றே அழியாத மெய்ப்பொருள் என இது உணர்த்தியுள்ளது. உயிர்க்கு உய்தி தருதலால் மெய் என வந்தது.

'கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.’ என ஒளவையார் இவ்வாறு செவ்வையாக அருளியுள்ளார்.

கல்விச் செல்வமாகிய கருவூலம் அதிசய நிலையது; கொடுக்குந்தோறும் விருத்தியடைந்து வருகிறது; கொடாது வைத்திருந்தால் தேய்ந்து போகிறது’ என்னும் இது இங்கே ஆய்ந்து அறியவுரியது. செலவு வரவாய் வளர்ந்து வருகிறது.

கல்வியாகிய இந்த அரிய திருவைப் பருவமுள்ள பொழுதே உரிமை செய்து கொண்டவர் யாண்டும் பெருமை மிகப் பெறுகிறார்.

செல்வத்தினும் கல்வி எல்லா வகையினும் மேலானது, அதனை ஒல்லையில் ஈட்டிப் பல்லோரும் பயன் பெற நல்லன புரிக.

உன்னைப் பொருளென் றுரைக்குந் தொறும்வளர்வாய்
பொன்னைப் பொருளென்னப் போதுமோ - கன்னமிட்டு 87

மன்னர் கவர்ந்தும் வளர்பொருளே கைப்பொருள்கள்
என்ன பொருளு னைப்போ லெய்தாவே 88 - தமிழ் விடுதுாது

இன்னிசை வெண்பா

வைப்புழிக் கோட்படா; வாய்த்தீயிற் கேடில்லை;
மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்;
எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற் றல்ல பிற. 134 கல்வி, நாலடியார்

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

நிதிசெல வாய்க்கெடு நீசர் வவ்வுவர்
மதியினை மயக்கிவெம் மறம்வி ளைத்திடும்
கொதியழல் நரகிடும் குணமும் கல்வியும்
விதிதரும் பதிதரும் வீடு நல்குமே. 8

- மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும், மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல், நீதி நூல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் மா தேமா)

வெள்ளத்தால் அழியாது; வெந்தழலால் வேகாது;
..வேந்த ராலும்
கொள்ளத்தான் இயலாது; கொடுத்தாலும் குறையாது;
..கொடிய தீய
கள்ளத்தார் எவராலும் களவாட முடியாது;
..கல்வி என்னும்
உள்ளத்தே பொருளிருக்க உலகெங்கும் பொருள்தேடி
..உழல்வ தென்னே! - விவேகசிந்தாமணி

இவை ஈண்டு உள்ளி உணர வுரியன என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Dec-19, 6:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 154

மேலே