மலர் மஞ்சில் மதுத் தேடும் தேனீ

மலர் மஞ்சில் மதுத் தேடும் தேனீ !!
மலர் மஞ்சில் புரண்டெழுந்து மகரந்தம் தேனருந்தி,
மலர்தோறும் விளையாடும் தேனீ - மலரின்,
மதுவருந்திச் சிறகுலர்த்தும் தேனீ,
மகரந்தம் கருவிணைந்து மலர்க்கருவில் விதைதோன்றி,
மனமினிக்கும் செங்கனியாய் மாற - நாளும்,
மாந்தர்க்கு உண்டாக்கும் தீனி !!
மலரெல்லாம் கனியாக்கி விதையாக்கி உணவாக்கும்,
மாவள்ளல் பூந்தேனீ ஈங்கு - இன்றேல்,
மாந்தருக்குக் கிடைக்காது தீனி !!
கதிரெழுந்த தும்மெழுந்து காடுகளில் தானலைந்து,
கணமேனும் ஓய்வின்றித் தேனீ - மலரின்,
மணமதுவைத் தான்சேர்க்கும் தேனீ !!
மலர்மதுரத் துளிதம்மை மலர்தோறும் போய்த்தேடி,
முதிர்தேனை அடைசேர்க்கும் தேனீ - தனக்கு,
நிகரில்லாக் கொடைவள்ளல் தேனீ !!
- செல்வப் ப்ரியா - சந்திர மௌலீஸ்வரன் ம கி.
21 டிசம்பர் 2019 -- சனிக் கிழமை.