பள்ளி மாணவர்கள் எளிதாகப் பயின்று இன்புற புணர்ச்சி இலக்கணம் எளிய வடிவில் பாகம் 3

பள்ளி மாணவர்கள் எளிதாகப் பயின்று இன்புற
புணர்ச்சி இலக்கணம் எளிய வடிவில்
பாகம் 3
வழங்குபவர்

திருமதி ஸ்ரீ விஜயலஷ்மி
தமிழாசிரியை
கோயம்புத்தூர் 22

அன்பு மாணவர்களே! கடந்த பதிப்பில் வெளியிட்டிருந்த புணர்ச்சி விதிகள் உங்களுக்குப் புரிந்தும், பிடித்தும் இருக்கும் என்ற நம்பிக்கையில் இதோ இந்த மூன்றாம் பாகத்தினை உங்களுக்காக வெளியிடுகின்றேன்.
பயில்வோமா! வாருங்கள்: ஐயம் இருப்பின் தெளிவு பெற இதோ என் கைப்பேசி எண்கள் உங்களுக்காக. 9843297197 / 9043069396
தொடர்ந்து உங்கள் ஒத்துழைப்பினையும் நல்லாதரவையும் தர அன்புடன் பணிகின்றேன். இந்த நூல்கள் அனைவற்றையும் என் அன்பு பெற்றோர்களின் பொற்பாத கமலங்களுக்குக் காணிக்கையாக்குகின்றேன்.

தொடர்வோம்…..
1. இந்தப் பகுதியில் முதலில் திசைப் பெயர் புணர்ச்சி என்றால் என்ன என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். வாருங்கள்.
திசைகள் நான்கு என்பதை அனைவரும் அறிவோம். அவை முறையே கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்பன ஆகும்.
இத்தகைய திசைகள் ஒன்றோடு ஒன்று புணர்தலையே திசைப் பெயர் புணர்ச்சி என்கிறோம். இதில் திசையோடு திசை மட்டுமே அன்றி வேறு சொற்கள் வந்தால் அவை எவ்வாறு புணரும் என்பதனையும் காணலாம்.
நூற்பா 1
“திசையொடு திசையும் பிறவும் சேரின்
நிலையீற்று உயிர்மெய் கவ்வொற்று நீங்கலும்
றகரம் னலவாத் திரிதலும் ஆம் பிற” நன்னூல் - 186
விளக்கம்:
ஒரு திசைப் பெயர் நிலைமொழி ஈற்றில் வந்திருந்து பிரிதொரு திசைப்பெயர் வருமொழியில் வரும்பொழுதோ அல்லது வருமொழியில் வேறு சொல் ஏதேனும் வரும்பொழுதோ,
 நிலைமொழி ஈற்றில் உள்ள க் என்ற ஒற்று(மெய் எழுத்து) எழுத்தும் அதனை அடுத்து வரும் உயிர் மெய் எழுத்தும் கு என்ற எழுத்தும் நீங்கிவிடும்.
 நிலைமொழியில் உள்ள, ற் என்ற மெய் எழுத்து, ன் என்ற மெய்யெழுத்தாகவோ, அன்றி ல் என்ற மெய்யெழுத்தாகவோ மாற்றம் அடையும்.
 “ஆம்பிற” எனில், விதிவிலக்காகத் தேவைக்கு ஏற்ப வேறுவழியிலும், புணரும் என்பதாகும்.
இனி அவற்றை, சில எடுத்துக்காட்டுகள் வழி நின்று காண்போம்.
முதலில் திசைப்பெயருடன் மற்றொரு திசைப்பெயர் புணரும் முறையைக் காணலாம்.
எடுத்துக்காட்டுகள் சில:
நூற்பா : “நிலையீற்று உயிர்மெய் நீங்கலும்”
1. வடக்கு + கிழக்கு = வடகிழக்கு
இதில் நிலைமொழி ஈற்றில் உள்ள க்கு ஆகிய இரண்டு எழுத்தும் நீங்கியிருப்பதைக் காணலாம்
நூற்பா: “நிலையீற்று உயிர்மெய் நீங்கலும்”,
2. தெற்கு + மேற்கு = தென்மேற்கு
நூற்பா: றகரம் ‘ன’ வாத் திரிதலும்,
தெற் (ன்) மேற்கு
அவ்வாறு திரிந்த பின் புணர்ந்தமுறை தென்மேற்கு என்பதாகும்.
(இதில், முதலில் நிலைமொழி ஈற்றில் உள்ள கு என்ற உயிர் எழுத்து, நீங்கியிருப்பதைக் காணலாம். பின்னர், ற் என்ற மெய் எழுத்து ன் என்று மாறியிருப்பதைக் காணலாம்.)
இனி பிறபெயரோடு புணரும் முறையைக் காணலாம்
தெற்கு + குமரி
(இதிலும் முதலில் நிலைமொழி ஈற்றில் உள்ள, ‘கு’ என்ற உயிர் எழுத்து, நீங்கியிருப்பதைக் காணலாம். பின்னர், ‘ற்’ என்ற மெய் எழுத்து ‘ன்’ என்று மாறியிருப்பதைக் காணலாம்.)
நூற்பா: “நிலையீற்று உயிர்மெய் நீங்கலும்”
2. தெற்கு + குமரி
நூற்பா : றகரம் ‘ன’வாத் திரிதலும்
தெற் (ன்) குமரி
அவ்வாறு திரிந்த பின் புணர்ந்தமுறை தென்குமரி என்பதாகும்.
குறிப்பு: கிழக்கு திசையை குடக்கு என்ற மற்றொரு பெயராலும்,
மேற்கு திசையை குணக்கு என்ற மற்றொரு பெயராலும், வழங்கப்பட்டு வருவதை மாணவர்கள் தெரிந்திருத்தல் மிக மிக அவசியம்.
தேர்வில் எழுதும் முறை:
தென்குமரி = தெற்கு + குமரி
“திசையொடு பிறவும் சேரின் நிலையீற்று உயிர்மெய் நீங்கலும்”;
தெற்கு + குமரி
“திசையொடு பிறவும் சேரின் றகரம் னவாத் திரிதலும்”
தெற் - தென்+ குமரி
என்றவாறு தென்குமரி என்ற சொல் புணர்ந்தது.
பயிற்சிபெற சில எடுத்துக்காட்டுகள்:
1. வடகிழக்கு
2. வடமேற்கு
3. வடதிசை
4. தென்கிழக்கு
5. தென்மேற்கு
6. தென்குமரி
7. தென்வீதி
8. தென்மலை
9. மேனாடு
10. குடநாடு = குணக்கு + நாடு
11. குணகடல்
அடுத்து, “மற்று பிற” என்பதற்கான சில சான்றுகளைக் காணலாம்.
கிழக்கு + நாடு = கீழைநாடு
விளக்கம்:
நூற்பா: “திசையோடு பிறவும் சேரின் நிலையீற்று உயிர்மெய் கவ்வொற்று நீங்கலும்”;
என்பதற்கிணங்க முதலில்
நிலைமொழியில் கிழக்கு என்பதில் உள்ள க்கு ஆகிய இரண்டு எழுத்துகளும் நீங்கிவிடும்
அவை நீங்கிய நிலையில் கிழ + நாடு என்று இருக்கும்
பின்னர் முதலில் உள்ள கி என்ற குறில் எழுத்து கீ என நீண்டும்,
அதாவது கீழ + நாடு என்றும்,
(ழ் + அ)
அதனை அடுத்து, வரும் ழ என்ற எழுத்தில் உள்ள அகரம் நீங்கி (ழ் + அ) (ழ்+ ஐ = ழை) என ஐகாரமாகியும்,
கீழை + நாடு
(ழ்+ ஐ = ழை) என்று மாற்றம் பெற்று,
இறுதியாகக் கீழைநாடு என்றும் புணரும்.
குறிப்பு:
தமிழ் மொழியில் குற்றெழுத்துக்களுடன் கரம் சேர்த்தும் நெட்டெழுத்துடன் காரம் சேர்த்தும் வழங்குதல் மரபு. அதாவது அகரம். இகரம் . உகரம் என்றும்….. ஆகாரம் ஈகாரம் ஐகாரம் என்றும் வழங்குவது மரபாகும். இதனை மாணவர்கள் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
பயிற்சி பெற சில சான்றுகள்:
1. மேற்றிசை
2. மேலைநாடு
3. கீழ்த்திசை
4. கீழைநாடு
5. கீழ்மேற்தென்வடல்
இவற்றையும் பிரித்து புணர்ச்சிவிதி கண்டு இன்பம் துய்க்கவும்.
என்ன மாணவர்களே திசைப் பெயர் புணர்ச்சி எளிதாக இருந்ததா?
----------------------------
2. அடுத்து பல சில புணர்ச்சியைப் பற்றி காண்போம்.
நூற்பா:
“பலசில எனுமிவை தம்முன் தாம்வரின்
இயல்பும் மிகலும் அகரம் ஏக
லகரம் றகரம் ஆகலும் பிறவரின்
அகரம் விகற்பம் ஆகலும் உளபிற” நன்னூல் - 170

நூற்பா விளக்கம்:
1 பலசில ஆகிய சொற்கள் நிலைமொழி ஈற்றில் இருந்து, வருமொழியிலும் அதே சொற்கள் வந்து புணரும் போது (சேரும் போது)
 சிலபொழுது இயல்பாகப் புணரும்
 சிலபொழுது ஏதேனும் ஓரு எழுத்து மிகுந்து வந்து புணரும்.
 அல்லது நிலைமொழி ஈற்றில் உள்ள ல (ல் + அ = ல)என்ற உயிர்மெய் எழுத்து (ற் + அ = ற) என்ற உயிர்மெய் எழுத்தாக மாற்றம் அடையும்.
2. பலசில ஆகிய சொற்கள் நிலைமொழி ஈற்றில் இருந்து. வருமொழியில் வேறு ஏதேனும் சொற்கள் வந்து புணரும் போது (சேரும் போது)
• நிலைமொழி ஈற்றில் ல என்ற உயிர் மெய் எழுத்தில் இருக்கும் அகரம் மட்டும் கெடும். (ல்+அ=ல)
• அல்லது வேறு எழுத்தாக மாற்றம் அடையும்.
3. ‘உளபிற’ - என்றால் தவிர்க்க இயலாத சூழலில் இந்த விதிகளுக்கு உட்படாமல் சில மாற்றங்களைப் பெற்றும் புணரும் என்பதாகும்.
இனி சில எடுத்துக்காட்டுகளையும் தேர்வில் எழுதும் முறையையும் காண்போம்.
எடுத்துக்காட்டு 1.
1. பல + பல = பலபல (இயல்பாய் புணர்ந்தது)
2. பல + பல = பற்பல (இயல்பாய் புணர்ந்தது)
3. பல + பல = பலப்பல (வல்லொற்று மிக்குப் புணர்ந்தது)
4. சில + சில = சிலச்சில (வல்லொற்று மிக்குப் புணர்ந்தது)
எடுத்துக்காட்டு 2
1. பல + மொழி = பல்மொழி (மெல்லினம் வந்து புணர்ந்தது)
2. பல + மொழி = பன்மொழி (மெல்லினம் வந்து புணர்ந்தது)
3. சில + அழகு = சிலவழகு (மெல்லினம் வந்து புணர்ந்தது)
4. பல + கலை = பல்கலை (மெல்லினம் வந்து புணர்ந்தது)
5. பல + சாலை = பல்சாலை (மெல்லினம் வந்து புணர்ந்தது)
6. பல + தாழிசை = பஃறாழிசை (ஆய்தம் மிக்கு விகற்பமாகிப் புணர்ந்தது)
7. பல + அணி = பல்லணி (மெல்லினம் வந்து புணர்ந்தது)
8. பல + யானை = பல்யானை (மெல்லினம் வந்து புணர்ந்தது)
----------------------------------
தேர்வில் எழுதும் முறை: (எடுத்துக்காட்டுகள் முதல் பகுதிக்கு)
(அதாவது தம் முன் தாம்வரின் என்பவற்றிற்கு)
1 “பலசில எனுமிவை தம்முன் தாம்வரின் இயல்பாய் நிற்றலும்”
பல + பல = பலபல
சில + சில = சிலசில
2. “பலசில எனுமிவை தம்முன் தாம்வரின் மிகலும்”
பல + பல = பலப்பல (வல்லொற்று மிக்குப் புணர்ந்தது)
சில + சில = சிலச்சில (வல்லொற்று மிக்குப் புணர்ந்தது)
(அதாவது, இரு சொற்களுக்கு இடையே வல்லின மெய்யெழுத்துகளாகிய ப்,ச் ஆகியவைத் தோன்றிப் புணர்ந்துள்ளது).
3. “பலசில எனுமிவை தம்முன் தாம்வரின் அகரம் ஏக லகரம் றகரம் ஆகலும்”
பல + பல
(ல்+அ=ல)
பற்பல
சில + சில = சிற்சில
தேர்வில் எழுதும் முறை: (எடுத்துக்காட்டுகள் இரண்டாம் பகுதிக்கு)
(அதாவது தம் முன் பிறவரின் என்பவற்றிற்கு)
“பலசில எனுமிவை தம்முன் பிறவரின்”;
அதாவது பலசில ஆகிய சொற்கள் நிலைமொழி ஈற்றில் இருந்து. வருமொழியில் வேறு ஏதேனும் சொற்கள் வந்து புணரும் போது (சேரும் போது)


எடுத்துக்காட்டுகள்:
1 “பலசில எனுமிவை தம்முன் பிறவரின் அகரம் விகற்பம் ஆதலும்”
பல + மொழி
(ல்+அ)
பன்மொழி

பல + அணி
பல்லணி
(அதாவது நிலைமொழி ஈற்றில் ல என்ற உயிர் மெய் எழுத்தில் இருக்கும் (ல்+அ=ல்)அகரம் மட்டும் கெட்டோ,
அல்லது வேறு எழுத்தாக மாற்றம் அடைந்தோ புணர்ந்திருப்தைக் காணலாம்.)
3. ‘உளபிற’ -
பல + தாழிசை = பஃறாழிசை
(இங்கு நிலைமொழி ஈற்றிலுள்ள உயிர் மெய் எழுத்தும், வருமொழி முதல் எழுத்தும் ஆகிய அனைத்துமே மாற்றம் அடைந்திருப்பதைக் காணலாம் )
அடுத்து நாம் காண இருப்பது லகர. ளகரப் புணர்ச்சி குறித்து.
நூற்பா எண் 1
“லளவேற் றுமையில் றடவும் அல்வழி
அவற்றோடு உறழ்வும் வலிவரின் ஆம்மெலி
மேவின் னணவும் இடைவரின் இயல்பும்
ஆகும் இருவழி யானும் என்ப.” நன்னூல் 227

நூற்பா விளக்கம்:
 லகரம், ளகரம் ஆகிய இரண்டு எழுத்துகளும் நிலை மொழி ஈற்றில் வந்து, வருமொழி முதலில் வல்லினம் எழுத்து வந்து புணர்ந்தால்(சேர்ந்தால்) அது வேற்றுமைப் புணர்ச்சியாக இருக்கும் பொழுது, நிலைமொழி ஈற்றில் உள்ள லகரம் றகரமாகவும் (அதாவது ‘ல்’ என்ற மெய் எழுத்து ‘ற்’ என்ற மெய் எழுத்தாகவும்). ளகரம் டகரமாகவும் (அதாவது ‘ள்’ என்ற மெய் எழுத்து ‘ட்’ என்ற மெய் எழுத்தாகவும்) மாற்றம் அடையும்.
(எ.டு) கல்+குறை =கற்குறை
முள்+குறை = முட்குறை

 லகரம், ளகரம் ஆகிய இரண்டு எழுத்துகளும் நிலை மொழி ஈற்றில் வந்து, வருமொழி முதலில் வல்லினம் எழுத்து வந்து புணர்ந்தால்(சேர்ந்தால்) அது அல்வழிப் புணர்ச்சியாக இருக்கும் பொழுது, நிலைமொழி ஈற்றில் உள்ள லகரம் றகரமாகவும் (அதாவது ‘ல்’ என்ற மெய் எழுத்து ‘ற்’ என்ற மெய் எழுத்தாகவும்). ளகரம் டகரமாகவும் (அதாவது ‘ள்’ என்ற மெய் எழுத்து ‘ட்’ என்ற மெய் எழுத்தாகவும்) உறழ்ச்சி(மாற்றம்) அடையும்.
(எ.டு) கல்+குறிது = கற்குறிது
முள்+குறிது = முட்குறிது

 வேற்றுமை மற்றும் அல்வழி ஆகிய இரு புணர்ச்சிகளிலும் நிலைமொழி ஈற்றில் லகர, ளகரங்கள் வந்திருந்து வருமொழி முதலில் மெல்லின மெய்யெழுத்துகள் வந்தால் லகரம் னகரமாகவும்,(அதாவது ‘ல்’ என்ற மெய் எழுத்து ‘ன்’ என்ற மெய்யெழுத்தாகவும்) ளகரம் ணகரமாகவும் (அதாவது ‘ள்’ என்ற மெய் எழுத்து ‘ண்’ என்ற மெய்யெழுத்தாகவும்) மாற்றம் அடையும்.
(எ.டு) கல்+நெரிந்தது = கன்நெரிந்தது
முள்+ நெரிந்தது = முண்நெரிந்தது
 வேற்றுமை மற்றும் அல்வழி ஆகிய இரு புணர்ச்சிகளிலும் நிலைமொழி ஈற்றில் லகர, ளகரங்கள் வந்திருந்து வருமொழி முதலில் இடையின மெய்யெழுத்துகள் வந்தால் அவை எவ்வித மாற்றங்களும் அடையாமல் இயல்பாகப் புணரும்(சேரும்).
(எ.டு) கல்+ யாப்பு = கல்யாப்பு
முள்+ யாப்பு = முள்யாப்பு


 அல்வழிப் புணர்ச்சியில் சில பொழுது நிலைமொழி ஈற்றில் உள்ள லகர, ளகரங்களுக்கு முன்பாக வருமொழி முதலில் வல்லின மெய்யெழுத்துகள் வரும்பொழுது, அவற்றுடன் முதலெழுத்துக்கள் திரிந்தும்(மாறுபட்டும்) புணரும்.

(எ.டு)
1. கல்+ தீது = கற்றீது
இனி எடுத்துக்காட்டிற்கான விளக்கத்தைக் காணலாம்.
(அதாவது ல்’ என்ற மெய் ‘ற்’ என்ற மெய்யாக மாற்றம் அடைந்ததைப் போன்றே ‘தீ’ என்ற உயிர்மெய் எழுத்தும் ‘றீ’ என்ற உயிர்மெய் எழுத்தாக மாற்றம் அடைந்துள்ளதைக் காணுங்கள்.

2. முள்+ தீது = முட்டீது
(இதில் ‘ள்’ என்ற மெய் ‘ட்’ என்ற மெய்யாக மாற்றம் அடைந்ததைப் போன்றே ‘தீ’ என்ற உயிர்மெய் எழுத்தும் ‘டீ’ என்ற உயிர்மெய் எழுத்தாக மாற்றம் அடைந்துள்ளதைக் காணுங்கள்.

நூற்பா எண் 2
“குறில்வழி லளத்தவ் அணையின் ஆய்தம்
ஆகவும் பெறூஉம் அல்வழியானே. நன்னூல் 228

நூற்பா விளக்கம்:
 நிலைமொழியில், தனிக்குறிலுக்குப் பின்பாக, இறுதியில் வரும் லகர, ளகரங்கள்(ல், ள் என்ற எழுத்துக்கள்) வருமொழி முதலில் தகரம் வருமாயின் (த, தா, --- தௌ வரை உள்ள எழுத்துகளில் ஏதேனும் ஒன்று வந்தால்) ஆய்த எழுத்தாகவும் (ஃ)மாற்றம் அடைந்தும் பொருந்தும் என்பதாகும்.

என்ன மாணவர்களே சற்று கடுமையாக இருக்கின்றதா? கவலைப்படாதீர்கள் எடுத்துக்காட்டில் விளக்கமாகப் பார்க்கும் பொழுது எளிதாகப் புரிந்துவிடும் சரிதானே!
(க- குறில், கா - நெடில்)
தனிக்குறில் என்றால் ‘க’ என்ற எழுத்தைத் தொடர்ந்து ‘ல்’ என்ற எழுத்திற்கு முன்பாக வேறு ஒன்றும் இல்லையல்லவா? கடல் என்ற வார்த்தையை எடுத்துக் கொண்டால் ‘ல்’ என்ற எழுத்திற்கு முன்பாக ‘க’ ‘ட’ போன்ற எழுத்துகள் உள்ளன. இவ்வாறு வருவது குறில் இணை எனப்படும் (அதாவது க என்ற குறில் எழுத்தும் ட என்ற குறில் எழுத்தும் இணைந்து வந்துள்ளமையைக் காண்க.)
அதன் விளக்கத்தைக் காணலாம்
1. கல்+ தீது = கஃறீது

தனிக்குறில் தகர வரிசை
இந்த எடுத்துக்காட்டில் ல் என்ற மெய் எழுத்து ஆய்த ஃ எழுத்தாகவும், தீ என்ற மெய் எழுத்து றீ என்ற மெய் எழுத்தாக மாற்றம் அடைந்திருப்பதைக் காணலாம்.
இதைப் போன்றே,
2. முள்+ தீது = முஃடீது - இந்த எடுத்துக்காட்டில் ள் என்ற மெய் எழுத்து ஆய்த ஃ எழுத்தாகவும், ‘தீ’ என்ற மெய் எழுத்து ‘டீ’ என்ற மெய் எழுத்தாக மாற்றம் அடைந்திருப்பதைக் காணலாம்.
இவ்வாறு அல்வழிப்புணர்ச்சியில் நிலைமொழி ஈற்றெழுத்து மற்றும் வருமொழி முதல் எழுத்து ஆகிய இரண்டுமே மாற்றம் அடைந்துள்ளதைக் காணுங்கள்.

நூற்பா: 3
“குறில்செறி யாலள அல்வழி வந்த
தகரம் திரிந்பின் கேடும் ஈரிடத்தும்
வருநத் திரிந்தபின் மாய்வும் வலிவரின்
இயல்பும் திரிபும் ஆவன உளபிற” நன்னூல் 229

நூற்பா விளக்கம்:
 தனிக்குறிலைச் சாராது(சேராது) வருகின்ற நிலைமொழி ஈற்று லகர, ளகரங்கள் அல்வழிப் புணர்ச்சியில் வருமொழி முதலில் தகர வரிசையில் (அதாவது த,தா,தி, தீ…..தௌ) ஏதேனும் ஓர் எழுத்து வரும்பொழுது, அந்த தகரம் (த என்ற எழுத்து) திரிந்தோ (மாற்றம் பெற்றோ) அல்லது கெட்டோ (முற்றிலும் நீங்கியோ) புணரும்.
 இதுபோன்றே, வேற்றுமை மற்றும் அல்வழிப் புணர்ச்சியில் வருமொழி முதலில் நகர வரிசையில் (அதாவது ந, நா, நி. நீ……. நௌ முதலியவற்றில்) ஏதேனும் ஒன்று வந்தால் அந்த எழுத்தும் திரிந்தோ (மாற்றம் பெற்றோ) அல்லது கெட்டோ (முற்றிலும் நீங்கியோ) புணரும்.
 வருமொழி முதலில் வல்லின மெய் வந்தால் (க,ச,த,ப ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்று வந்தால்) அல்வழி மற்றும் வேற்றுமை ஆகிய இரண்டு புணர்ச்சிகளிலும் மாற்றம் அடையாமல் இயல்பாய் புணரும்.

இனி ஒவ்வொன்றிற்கும் தனித்தனி எடுத்துக்காட்டுகளைக் காணலாம்:

(எ.டு)
1. தோன்றல் + தீயன் = தோன்றறீயன்
வேள் + தீயன் = வேடீயன்

2. தோன்றல் + நல்லன் = தோன்றனல்லன்
வேள் + நல்லன் = வேணல்லன்

3. கால் + கடிது = கால்கடிது
மரங்கள் + கடியன = மரங்கள் கடியன
குறிப்பு: இங்கு தோன்றல், வேள் முதலியன ஒருவரின் பெயரைக் குறிக்கும் சொல் ஆகும்.

இனி பயிற்சி பெற சில எடுத்துக்காட்டுச் சொற்கள் கீழே தரப்பட்டுள்ளன.
மாணவர்கள் அவற்றில் உரிய முறையில் பயிற்சி மேற்கொள்ளவும்.
1. கடற்கரை
2. உடற்பருமன்
3. பொருட்காட்சி
4. உட்பூசல்
5. தொழிற்சாலை
6. மணற்குன்று
7. தொழிற்பயிற்சி
8. கற்கண்டு
9. நெற்கதிர்
10. சொற்போர்




















































புணர்ச்சி இலக்கணம் தொடரும்

எழுதியவர் : ஸ்ரீ விஜயலக்ஷ்மி (21-Dec-19, 11:12 pm)
பார்வை : 582

மேலே