குடியோம்பிக் கொள்ளுமா கொள்வோர்க்குக் காண்டும் மாநிதியம் - நீதிநெறி விளக்கம் 29
நேரிசை வெண்பா
குடிகொன்(று) இறைகொள்ளுங் கோமகற்குக் கற்றா
மடிகொன்று பால்கொளலும் மாண்பே - குடியோம்பிக்
கொள்ளுமா கொள்வோர்க்குக் காண்டுமே மாநிதியம்
வெள்ளத்தின் மேலும் பல. 29
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
குடிமக்களை வருத்தி வரி வாங்கும் அரசனுக்கு கன்றையுடைய ஆவின் மடியினை வருத்திப் பால் கறப்பதும் நல்ல செயலாகும்.
இவ்வாறு வருத்தி வரி வாங்கும் அரசனிடத்தில் செல்வம் சேர்ந்திருக்கிறதோ என்றால் அதுவுமில்லை.
ஆனால் குடிமக்களை அவர்கள் நலத்தில் கருத்து வைத்துப் பாதுகாத்து நல்ல முறையில் வகையாக வரியினை வாங்கும் அரசர்க்கு பெருமையுடைய பணம் வெள்ளத்தினும் மேலும் பலவாகப் பெருகுவதைக் காணலாம்.
விளக்கம்:
கொன்று - வருத்துதல். கொலை செய்தது போன்ற அத்துணை மிகுதியான வருத்தத்தைச் செய்தலாம். மடி கொன்று என்றதற்கும் அதுவே கருத்து.
மடியைக் கொல்லுதல் – பசுவின் மடிக்காம்புகளை கசக்கி உயிரோடு தோலுரிப்பதே போல அதனை நோவ மிக அழுத்தி நீட்டி இழுத்தல்.
‘பால்கொளல்’ என்னுங் குறிப்பினாலேயே அப்பசுவிற்குக் கன்றிருப்பது பெறப்படுமாயினும், பாலருந்தக் கன்றொன்று இருக்கின்றதே என்பதையும் நோக்காமல் அவ்வாறு நோகச் செய்வான் என்பதைக் குறிக்கக் ‘கற்றா’ என்றார். கன்று ஆ என்பது வலித்துக் கற்றாவாயிற்று.
வருத்தி வரி வாங்கும் அரசனுக்கு வருத்திப் பால் கறக்கும் செயற்கையும் நல்லதாய் தோன்றும் என்று கூறினார்.
எத்துணைத் தீய செய்கையைச் செய்தற்கும் அவன் நெஞ்சம் ஒருப்படுமென்று அவன் கொடுமையை உணர்த்துதற்கும், பால்கொளல் வரி கொள்ளுதற்கு உவமையாகிறது. இறை - வரி;
“குடியோம்பிக் கொள்ளுமா கொள்வோர்க்கு மாநிதியங் காண்டும்” என்பதனால் குடிகொன்று இறை கொள்ளுங் கோமகற்கு அச்செல்வம் இல்லை என்பது குறிப்பெச்சமாகப் பெறப்படும்;
மாநிதியம் - பெரும் பணமன்று; பெருமையுடைய பணம்.
மிகுதியைக் குறித்தற்கு ‘வெள்ளத்தின் மேலும் பல’ வென்று பின் வருதலாலும் வருத்தாது வாங்குவான் பணம் மிகுதியாதலோடு பெருமையுமுடைய தென்பதை இங்குக் குறித்திடல் இன்றியமையாத தாதலாலும் என்க.
கொள்ளுமாறு கொள்வார் பணம் பெருமையுடையதாம். எனவே, அங்ஙனங் கொள்ளாதார் பணம் குறைந்து போனதோடு பெருமையும் இலதாம்.
வெள்ளம் ஓர் எண்ணென்றுங் கூறுப. ’வெள்ளத்தின் மேலும் பல’ என்னும் மூன்று சொற்களையும் மேலும் மேலும் மிகும் என்பதாகக் கொள்ளப்படும்.
கருத்து:
குடிகளை வருத்தாது வரி வாங்குதல் அரசன் கடன்.