மருத்துவ வெண்பா – பட்டாணி – பாடல் 49

வைத்திய வித்வன்மணி சி.கண்ணுசாமி பிள்ளை இயற்றிய சித்தவைத்திய பதார்த்த குண விளக்கம் (1956) என்ற புத்தகத்திலிருந்து சில மருத்துவ சம்பந்தமான நேரிசை வெண்பாக்களையும், அவைகளின் பொருளும் குணமும் புத்தகத்தில் உள்ளபடி வெண்பாக்களின் நயத்திற்காகத் தருகிறேன்.
நேரிசை வெண்பா
துய்யநுரை யீரலுக்கும் தோன்றுநடு மார்புக்கும்
உய்யபலந் தந்திடினு மொன்றுகேள் – தையலே
சாற்றுங் குடலதனிற் சாரும் வலிமந்தம்
ஏற்றதிரள் பட்டாணிக் கே. 49
குணம்:
பட்டாணி நுரையீரலுக்கும், இதயத்திற்கும் பலம் கொடுக்கும்; ஆனால், சிறிது வாயுவையும், மந்தத்தையும் உண்டாக்கும்.
உபயோகிக்கும் முறை:
உலர்ந்த பட்டாணியை வறுத்து உண்பதுண்டு. அல்லது இதை நன்றாய் ஊறப்போட்டுக் காய்கறிகளில் கூட்டிப் பொறியலாக உண்பதுண்டு.
பச்சைப் பட்டாணி அல்லது ஊறப்போட்டு எடுத்த உலர்ந்த பட்டாணியையாவது வேக வைத்துத் தாளித்துச் சுண்டலாக்கியும் உண்ணலாம்.
எளிதில் சீரணிக்கக் கூடிய இதனால் நுரையீரலுக்கும், இதயத்திற்கும் பலமுண்டாகும்.
இதனை அதிகமாக உண்டால், குடலில் வலியையும், மந்தத்தையும் உண்டாக்கும்.