மருத்துவ வெண்பா – இலவங்கப்பட்டை – பாடல் 48

வைத்திய வித்வன்மணி சி.கண்ணுசாமி பிள்ளை இயற்றிய சித்தவைத்திய பதார்த்த குண விளக்கம் (1956) என்ற புத்தகத்திலிருந்து சில மருத்துவ சம்பந்தமான நேரிசை வெண்பாக்களையும், அவைகளின் பொருளும் குணமும் புத்தகத்தில் உள்ளபடி வெண்பாக்களின் நயத்திற்காகத் தருகிறேன்.

இலவங்கப்பட்டை (Cinnamomum Aromaticum)

நேரிசை வெண்பா

தாதுநட்டம் பேதி சருவவிட மாசியநோய்
பூதகிர கஞ்சிலந்திப் பூச்சிவிடஞ் – சாதிவிடம்
ஆட்டுமிறைப் போடிருமல் ஆதியநோய்க் கூட்டமற
ஓட்டு மிலங்கத் தறி. 48

குணம்:

இலவங்கப்பட்டை சுக்கில நட்டம், அதிசாரம், பற்பல விடங்கள், வாயை அநுசரித்த வாதம், தேவ பூதமாகிய கிரகங்கள், சிலந்தி, பாம்பு விடம், சுவாச காசம் முதலிய நோய்களை நீக்கும்.

இது பெரிய இலவங்கப்பட்டை என்றும், சன்ன இலவங்கப்பட்டை என இரண்டு வகையுண்டு. இப்பாடலில் கண்ட குணங்களெல்லாம் பெரிய இலவங்கப்பட்டைக்கு உடைத்தானதாகும்.

உபயோகிக்கும் முறை:

இதைச் சிறிது வறுத்திடித்துச் சூரணம் செய்து வேளைக்கு 5 – 10 குன்றியெடை தேனில் கொடுக்கலாம். அல்லது இதர சரக்குகளுடனும் கூட்டிக் கொடுக்கலாம். இது மூளை, இருதயம் முதலிய உறுப்புகளுக்குப் பலம் கொடுக்கும்.

சந்நி, சயித்தியம், நடுக்கல், கண் துடிப்பு முதலியவற்றை நீக்குவதுடன் வாயுவையும் கண்டிக்கும்.

பெண்களுக்கு மாத விலக்குக் காலத்தில் தடைப்பட்டுள்ள உதிரத்தை விரைவில் வெளிப்படுத்தும்.

இச்சூரணத்தைப் பற்பொடியில் சேர்த்து உபயோகிக்க வாய் நாற்றம், பல்லீற்றின் சுரப்பு, பல்வலி முதலியவற்றைக் கண்டிக்கும்.

இது வயிற்று வாயுவைக் கண்டித்து மலக் கழிச்சலைக் கட்டுகிற சுபாவம் உடையது. ஆதலால் குழந்தைகளுக்கு விசேடமாக உபயோகிக்கப்படுகிறது.

இதனைக் கறி மசாலாவாகப் பதார்த்தங்களில் இட்டு உண்ண அதிக சுகத்தைக் கொடுக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Jan-20, 9:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 45

சிறந்த கட்டுரைகள்

மேலே