முகிலும் கதிரும் அவளின் அழகால்
அம்புலி மாமா அம்புலி மாமா
ஆறுதல் தருவாயா
அழகி ஒருத்தி ஓடி வந்தாள்
அவளை அறிவாயா
அன்பால் என்னை வீழ்த்தி விட்டாள்
அதனை அறிவாயா
அகில அழகில் மேன்மை அழகை
அவளில் கண்டாயா
முகிலும் கதிரும் அவளின் அழகால்
மயங்கியதை பார்த்தாயா
முத்து வியர்வை முகத்தில் வழிய
மூர்ச்சை அடைந்தவளை
கடத்திச் சென்று கைப்பற்ற நினைத்த
காற்றை கண்டாயா
தங்கம் முத்து பவழக் குவியலால்
அங்கத்தை அழகுபடுத்த
விண்வெளித் தேச வீரர்கள் வந்த
அணிவகுப்பை கண்டாயா
எவ்வகை வேந்தர் எவர் வந்தாலும்
என் மனம் புகுந்தவளை
என் உடைமையாக்கி பெருமிதம் கொள்ள
என் துணைக்கு வந்திடவே
அம்புலி மாமா அம்புலி மாமா
அதிவிரைவாய் வந்து விடு
அத்தையின் தத்தையை அணைத்திட எனக்கு
அரிய வழியைச் சொல்லி விடு.
----- நன்னாடன்.