இரவுகளின் பகல்

------------------------------------------------

இந்த இடம் புனிதமானது.

இடம் பற்றிய தோராயமான முடிவை மனம் நன்றாக உருவகித்து பின்னர்தான் அதை அப்படியே ஏற்றுக்கொண்டது.

நண்பர்கள் எனப்பட்ட உறவினர்கள் எனப்பட்ட குடும்பத்தினர் எனப்பட்ட எவரும் தத்தம் குறுகிய அந்தஸ்தினை என்னுள் பாய்ச்ச முடியாத இடம் இது.

மலைக்குகை போன்ற அமைப்பில் அதன் ஒவ்வொரு அங்குலமும் புதிர் மிகுந்த செவ்வகத்தால் மூடப்பட்டு இருந்தது.


நடப்பவர்களுக்கு குறுக்கே நடப்பவர்கள் என்றும் நான் யாருக்கும் குறுக்கே நடக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லாத நீள்வட்டமான பாதை அது.

ஒரு வாழும் வாழ்வில், வாழ்க்கை என்பது காரியமற்ற அபத்தத்தை கண்டறிவது.

நான் கண்டறிய இங்கு வந்தபோது எனக்கு அருகில் யாரும் இல்லை.

அருகில் என்றால்....

மனதின் அருகில் அல்லது மனதில்.

ஒரு நீரோடையின் சப்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அதில் மீன்கள் தவழும் சப்தமும் கேட்டது.


அந்த குகை எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. அதன் வடிவமும் வண்ணமும் வாசனையும் மாறிக்கொண்டே இருக்கும்.

மாற்றம் அழிவில் இருந்து அழிவை உருவாக்கும் சிலீரென்ற சத்தத்தில் மட்டுமே உருவாகும்.

நான் பொறுமையாக பார்த்து கொண்டிருக்க வேண்டியதுதான் என் வேலை அல்லது ஒரே ஒரு விதி.

வேலை விதி என்று சொன்னாலும் அது அப்படி அல்ல. ஒரு காட்சி மட்டுமே.

யாரும் எங்கே என்னை நோக்கி வர முடியாது என்பதுபோல் யாரையும் நோக்கி நான் செல்லவும் முடியாது.


தேடவும் கண்டறியவும் ஒன்றுமே இல்லை.

நான் அங்கிருந்து என் பயணத்தை துவங்கினேன்.

இந்த பயணத்தில் காலம் எழுப்பும் கூச்சல்கள் உங்கள் காதுகளுக்கு கேட்காது. பருவ கால மாற்றங்கள் எந்த அசைவையும் உடலுக்குள் ஏற்படுத்தாது என்றும் கூறி இருந்தனர்.

சொன்ன அவர்கள் புகையை போல் மறைந்து போகும் வரை காத்திருந்து பின் அங்கிருந்து நான் விரையலானேன்.

நான் விடைபெறுவதற்கு யாரும் இல்லை என்பதால் நான் மனிதன் என்பதை அக்கணத்தில் மறந்து போனேன்.

உண்மையில் கேட்க கூசும் விசித்திரமான தத்துவங்கள் மொழியப்பட்ட, கண்டறிந்த நாட்டின் மைய பகுதியில் பிறந்தவன் நான்.

இருப்பின் மீது வாழ்க்கையின் மீது கேள்விகளை நீட்டித்துக்கொண்டே போகும் அந்த நாட்டின் தத்துவமும் தேடலும் இறுதியில் எப்படியேனும் பொருளாதாரத்தில் சென்று அழுக ஆரம்பிக்கும்.

அங்கிருக்கும் ஜனநாயக பாசிச நாசிச சோசலிச கம்யூனிச மற்றும் பல கட்சிகள் ஒவ்வொன்றும் தலைக்கு மூன்று பொருளாதார கொள்கைகள் வைத்து பேசி கொண்டிருக்கும்.

பிரத்யேகமாய் அந்த நாட்டிற்கென்றே ஒரே ஒரு பொருளாதார கொள்கையும் உண்டு.

கட்சிகள் தம்முள் வகை வகையாக சாடி கொண்டிருந்தாலும் நாட்டின் பிரத்யேக கொள்கையில் கை வைக்காது.

அந்த கொள்கை...

எப்போதும் பிச்சைக்காரர்களை தானொரு அரசன் என்று நம்ப வைப்பது.

அந்த நாட்டில் காரில் பயணிக்கும், பயணிக்கும்போது தன் செழிப்பான ராஜ பார்வையோடு ஜன்னல் வழியே உலகை அவதானிக்கும் காட்சிகளை ரசித்து இன்புறும் நாய்கள் நிறைய உண்டு.

அந்த நாய்களை பார்த்து தானும் அதே நாய்தான் என்று நினைத்துக்கொண்டு ஓட்டை சைக்கிள் பின்னே விரட்டி விரட்டி ஓடிக்கொண்டிருக்கும் பல கோடி நாய்கள் இருக்கின்றன.


விரட்டி விரட்டி ஓடும் நாய்கள்தான் கொள்கை, கோட்பாடுகள், சித்தாந்தங்கள், கட்டுப்பாடுகள், கடமைகள், கண்ணிய உணர்வுகளால் சூழப்பட்டும் பின்னப்பட்டும் அலம்பி விடப்பட்டும் பின் தானொரு அரசன் என்பதால் தானே அரசன் என்ற கற்பனையில் வளர்க்கப்படுபவை.

அந்த நாய்கள் ஆண் மனம் என்றும் பெண் மனம் என்றும் பிரிக்கப்பட்டவை. அதன் நிறங்களுக்கு ஏற்ப பல பல அடுக்குகள் கொண்டவை.விலைகள் கொண்டவை.

கார் நாய்களை பார்க்கும்போது சைக்கிள் நாய்கள் தம்முள் அழிச்சாட்டியம் செய்து ஒன்றினை ஒன்று குதறிக்கொள்பவை.


வாக்களிக்கும் உரிமை அதற்குண்டு.

நாய் வாழ்க்கை பிடித்து போனவர்கள் நிறைய திறமைகளை வளர்த்து கொண்டு நிறைய திட்டங்கள் பற்றி தெரிந்து கொண்டும் நிறைய நாட்கள் வாழ முடியாமல் செத்து கொண்டே இருந்தனர்.

அந்த நாட்டில் உண்மையான நான்கு கால் நாய்கள் இதுபற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது இருந்தன. காரணம் அவை வாழ்க்கையை வாழ்க்கையாக வாழ்ந்து முடித்து விடுவதுதான். அவைகள் தங்களை கூவிக்கூவி விற்பனை செய்து கொள்வதும் இல்லை.

நான் என் தலையை வேகமாக உதறிக்கொண்டேன்.


இப்போது எதற்காக சிந்தனைகள்? வேண்டாம். நிறுத்தி கொள்வோம்.

விரைந்து நடக்க ஆரம்பித்தேன்.

அது வெறும் பாதைதான். வேறொன்றும் இல்லை. வெயிலும் நிழலும் கலந்து கூர்மை மழுங்கி வரவிருக்கும் புதிய சப்தத்தை எந்த ஆரவாரம் இல்லாத கவனத்துடன் பார்த்து கொண்டிருப்பதை நானும் கவனித்தேன்.

இயற்கையை பொருட்காட்சியாக்கிய ஒரு நாட்டில் இருந்து வந்தவன் நான் என்ற குற்ற உணர்வு அப்போதும் அதிகரித்தது.

அந்த இடத்தில் என் உடைகளை களைந்து நிர்வாணம் ஆனேன்.

மீண்டும் நடந்தேன்.

நடப்பது என்பது அந்த மலைக்குகையில் மிக எளிதாக இருந்தது.  எந்த கூட்டத்திலும் நான் இல்லை. ஓய்வை நான் நாடவில்லை. பசி அறியவில்லை.

என் மனம் தன் இருப்பை உணர்த்த எந்த முயற்சியும் செய்யவில்லை. ஒரு காலத்தில் இது "கேவலம்" பெண்களை கூட காவியம் போல் சிந்தித்து கொண்டிருந்தது.

மனம் குளிர்ந்த உறைபனியில் ஒரு அணு துகள் போல் சுருண்டு தூங்கி கொண்டிருந்தது. அதை நான் இத்தனை காலமும் பாறையை போல் கனக்க வைத்திருந்தது என் குற்றம்தான்.

சதுரமான மூன்று வளைவுகள் தாண்டி ஒரு அரைக்கோள வளைவை தாண்டிய போது எதிரில் இருந்தது மூன்று பாதைகள்.

நான் தொடர்ந்து செல்ல இப்போது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

காத்திருக்க வேண்டும்.

நான் வலப்பக்கம் இருந்த பாதையில் சட்டென்று புகுந்து விட்டேன்.

காத்திருத்தல் வாழ்வின் அபாயமான நேரம். துணை என்ற பெயரில் மனித உருவில் நிறைய மனங்கள் அப்போது என்னை விழுங்கி விடலாம்.

நாட்டில் கணந்தோறும் நிகழ்வதுதானே.

விரைந்து சென்றேன்.

எதிரில் பச்சை நிறத்தில் எதுவோ தெரிந்தது. அது அசையவும் நிற்கவும் போராடுவது போல் இருந்தது.

என் மனம் விழித்தது.

கற்றறிந்த சகல சிந்தனைகளையும் திரட்டி ஆராய விரும்பியது.

என் மனம், அது யாருக்காகவோ பணி புரிகிறது என்று நினைத்து கொண்டேன்.

மனம் பச்சை நிறத்தில் படர்ந்து உருகியது. வண்ணத்தை விழுங்கி வெவ்வேறு வடிவம் பூண்டு அதன் அறிவில் இருந்த எல்லா சித்தாந்த கோட்பாடுகளிலும் நனைந்தது.

எந்த முடிவும் எட்ட இயலாமல் தோற்று சறுக்கி உறைபனியில் உறைந்தது.

நான் சொல்லும் செயலும் அற்று பயணத்தை நிறுத்தி கொண்டேன்.

அந்த பச்சை நிறமி என்னை அணுகி வந்தது.

அது ஒரு மனிதன்.

துறவி.

அவர் பேச ஆரம்பித்தார்.

நான் அவரை பார்த்து கொண்டிருந்தேன்.

உங்கள் மனம் தவம் புரிகிறது. நீங்கள் அலைவது தொலைந்த ஒன்றை மீண்டும் தொலைக்க மட்டுமே. அதை கள்வர் கவர்ந்து செல்லும்போது அவர்களோடு நீங்களும் இருந்தீர்கள். அவர்கள் உங்களை வெறுமையாக்கும்போது நீங்கள் எந்த மறுப்பும் சொல்லவில்லை.
ஆயினும் வாசனையால் துன்புற்று நீங்கள் மீண்டும் மீண்டும் பயணிப்பது நீங்கள் விரும்பி தவறவிட்ட அனைத்தையும் உங்களிடமே கொண்டு வந்து சேர்க்கிறது என்றார்.

நீங்கள் யார்?

துறவி. புத்தர். கோடிக்கணக்கான புத்தர்களில் நானும் ஒருவன். இந்த நான் என்ற சொல் உங்களை குறிக்கிறது.

உங்கள் வண்ணம் பச்சையாக இருக்கிறதே என்றேன்.

நான் பால்வினை நோய்கள் கொண்டவன் என்றார்.

துறவிக்கு எப்படி வரும் என்றேன்.

துறவி என்பவன் இறைவனை எதிர்ப்பவன் என்றார்.

இருப்பினும்....நீங்கள்...

பின் நான் யாரையும் காணவில்லை.

அது வரையிலும் இருந்த தெளிவு இப்போது என்னிடம் இல்லை என்ற உணர்வு வந்தது.

அமைதியாக அமர்ந்துகொண்டு கண்களை மூடிக்கொண்டேன்.

எதையும் சிந்திக்க கூடாது இருப்பினும் தியானம் செய்ய கூடாது என்று முடிவு செய்து கொண்டேன்.

கண்களை மூடிக்கொண்டதும் கருமை படர்ந்தது. அது திரை. இனி காட்சிகள் விரியும்.

காட்சிகள் விரிந்தன.

உலகின் அத்தனை துறவிகளும் போரிட்டு கொண்டிருந்தனர்.

அவர்கள் எப்போதும் தங்களுக்காக மட்டுமே தங்களுக்கு வெளியில் இருந்தனர்.

காற்றை உடைத்துக்கொண்டும் மழைத்துளிகளை பிளந்து கொண்டும் எந்த சப்தமும் இன்றி ஒவ்வொரு மனமாக அரைத்து கொண்டே சென்றனர்.

வெண்ணிறமான ஒரு துகில் சூரிய ஒளியில் இன்னும் நிறமேறி அசைந்து கொண்டிருந்தது.

கடந்து சென்றது நாட்களா வருடங்களா என்பது தெரியாமல் நான் அமர்ந்திருக்கிறேன் என்று புரிந்தது.

இறுதியில் அந்த எண்ணம் உதித்தது. இனி கடவுளை நான் தரிசித்து விடலாம் என்பதுதான் அது.

இப்போது கண்களை நான் திறக்க கூடாது. இது தவம்.

காட்சிகள் முடிந்து போனது. மீண்டும் அதே கருமை. அதற்கு முன்பிருந்த எந்த உணர்ச்சியும் இல்லை. அது தன் அனைத்து வலிமையையும் இழந்து விட்டு
ஒரு கூளாங்கல் போல் மாறிவிட்டது.

அதை நோக்கி ஓர் எறும்பு வந்தது.

எறும்பு என்னவோ பேசியது போல் இருந்தது.

ஒரு வினாடி மட்டும்...

இப்போது எறும்பின் கர்ஜனையை கேட்டேன்.

என் உடல் அதிர்ந்து நொறுங்குவதுபோல் தள்ளாடி கொண்டிருக்க நான் என்னை மறக்க விரும்பினேன்.

கடவுள் தெரிய வேண்டிய நேரத்தில் மீண்டும் காட்சிகள்....

அமைதி என்ற சொல்லுக்கு எந்த அர்த்தமும் இல்லை. அமைதி தகிக்கும் ஒளி. அது தாங்க முடியாத தகிப்பு.

புத்தரை சந்திக்கும் ஆவல் வந்தது.

ஆவல்கள் எப்போதும் புத்தரிடம் நம்மை கூட்டி போவது இல்லை.

அழுகை வந்தது. கடவுளை வெறுத்தேன்.

எங்கோ நாய்கள் கூட்டம் கூட்டமாக ஊளையிட்டு தற்கொலைகள் செய்து கொள்ளும் காட்சி வந்தபோது என்னை அறியாது விழித்தேன்.

விழித்து கொண்டபோதும் அங்கே கருமை மட்டுமே இருந்தது.

எண்ணங்கள் கடவுளை அழிக்கிறது. புத்தர் என்போர் மரத்தின் இலைகள். இலைகள் வெப்பத்தில் திளைக்கின்றன. அதனால் மட்டுமே புத்தர்கள் நிழல்களாக இருக்கிறார்கள்.

நான் மீண்டும் நாயாக மாறிவிட்டேன்.


===============================

எழுதியவர் : ஸ்பரிசன் (7-Jan-20, 11:35 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : iravugalin pagal
பார்வை : 229

மேலே