தமிழர் திருநாள் தன்னிகரில்லாத் திருநாள்

உலகத்துக்குச் சோறிடும்
ஒட்டுமொத்த உழவர்களுக்கும்
கால்நடைச் செல்வங்களுக்கும்
நன்றி சொல்லும் தமிழனின் திருநாள்
அது இனிய பொங்கல் திருநாள்...

உண்ண உணவும்
உடுத்த உடையும்
ஊருக்குக் கொடுக்கும்
விவசாயி தன்னைத்தானும்
அவனைப் பிறரும்
போற்றும் பொன்னாள் இது..

பூமிக்கும் பூமிவாழ்
உயிரினங்களுக்கும்
சக்தி வழங்கும் சூரியனைக்
காய்கனி கரும்பு
கிழங்கு வகைகளை
விளக்கின் முன்வைத்து
பச்சரிப் பொங்கல்
சமைத்துக் கொண்டாடும்
சூரியத்திருநாள் இது...

தன்னை... தன் வீட்டை
அழகுபடுத்தி தன்
ஊரையே அழகுபடுத்தும்
தைத் திருநாள் இது...

பொங்கல் நாள் கொண்டாட்டம்
அது தமிழர்கள் அனைவரும்
ஒன்று சேர்ந்து
தமக்கும் பிறருக்கும்
வருடா வருடம்
எழுதிக்கொள்ளும்
கலாச்சாரக் கவிதை...

உலக ஒற்றுமைக்கு
தமிழன் பங்களிப்பின்
அடையாளச் சின்னம்...
அது கடந்தகாலப் பண்பாடு
நம்மைவிட்டு என்றும்
கடந்து போய்விடாத
அந்தந்த காலத்தின்
நிகழ்கால ஏற்பாடு...

எதிர்காலம் தன் வேர்களை
என்றும் கொண்டாடச்செய்யும்
நிரந்தர நிகழ்ச்சி நிரல்...
தமிழ்வளர்த்த முன்னோர்கள்
விட்டுச் சென்ற
பண்பாட்டு சாசனம்...

கடமையைச் செய்து
கடமையைப் பாராட்டி
எல்லோரும் கொண்டாடுகிறார்கள்
நாமும் கொண்டாடுகிறோம்
என்றில்லாமல்
ஏன் கொண்டாடுகிறோம்
எனத் தெரிந்து கொண்டாடும்
பகுத்தறிவுத் திருநாள்
பொங்கல் பெருநாள்...

விடுமுறை எடுக்க
வாய்ப்பே இல்லை
எனச் சொல்லாமல்
எல்லோரும் வீடுவந்து
கூடிப் பேசியது
ஒன்றாய் உட்கார்ந்து
உண்டது சாத்தியமாயிற்று..
டைனிங் டேபிளின்
அனைத்து நாற்காலிகளும்
ஆக்கிரமிக்கப் பட்டன
நீண்ட நாட்களுக்குப் பிறகு...

தன்னலத்தில் பொதுநலம்
பார்த்து வாழ்வதில்
நாடெல்லாம் நலம் பெறட்டும்..
வளம் பெறட்டும்...
வாழ்வது ஒருமுறை
வாழ்த்தட்டும் தலைமுறைகள்...

யாதும் ஊரே... யாவரும் கேளீர்...
என்று உலகத் தமிழர்கள்
ஒட்டுமொத்தமாய்க் கொண்டாடுகிறார்கள்
பொங்கல் திருநாளை இன்று
படி அரிசி பொங்கலிட்டு... அதில்
ஒட்டுமொத்த உலகமும்
பலபடிகள் ஒற்றுமையாய் முன்னேறட்டும்...

கரும்பின் இனிப்பில்
பாலின் சுவைப்பில்
பொங்கலின் தித்திப்பில்
சந்தனம் சாம்பிராணி
அகர்பத்தி மலர்கள்
இவற்றின் வாசத்தில்
நட்பு உறவுகளின் நேசத்தில்
மனம் பாடும் புதிய
ராகத்தில் சக்தி கிடைக்கட்டும்
அது என்றும் நிலைக்கட்டும்...

அனைவருக்கும்
இனிய பொங்கல் திருநாள்
நல் வாழ்த்துக்கள்...

அன்புடன் நண்பன்...
இரா.சுந்தரராஜன்
👍😀🙏🙋🏻‍♂🌹🌺🌷🕺🏼

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (15-Jan-20, 11:14 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 160

மேலே