பொன்மனச்செம்மல் எம்ஜிஆர்

நான் ஆணையிட்டால்
அது நடந்துவிட்டால்
இங்கு ஏழைகள்
வேதனை படமாட்டார்... என்று
சினிமாவில் பாடி நடித்தார்...
அப்படியே ஆட்சி பிடித்தார்...
அவர் மக்கள் திலகம் எம்ஜிஆர்...

சினிமாவிலும் ஆட்சியிலும்
எம்ஜிஆர் எனும் ஏழைகள் தலைவர்..
எதிரிகளையும் மதித்து
வாழ்ந்த மனிதநேயர்...
மனிதர்களோடு
வாழ்ந்ததில் தனித்துவமாய்
இருந்தாலும்
தன்னைத் தனிமைப்
படுத்தத் தெரியாதவர்...

எது செய்தாலும்
சம்பந்தப் பட்டோரிடம்
ஆலோசனை கேட்டு
ஆட்சி செய்தவர்..
உணவுக்குக் கூட
கஷ்டப்பட்ட காலத்தை
கஷ்டமில்லாமல் சொன்னவர்..
ஏழை மாணவனுக்கு
சத்துணவு தந்தவர்...

என் சிறுவயதில்
அவரைப்போலவே
மனதிற்குள் என்னை
நினைக்கச் செய்தவர்
ஏழாம் வகுப்புப்
படிக்கும்போதே
சக மாணவர்களிடம்
நடிகன் நாடாண்டால்
என்ன தப்பு எனும்
வாதம் செய்யுமளவிற்கு
அரசியல் தெரிய வைத்தவர்...

அறிஞர் அண்ணாவின்
இதயக்கனியாய்த் திகழ்ந்தவர்
காஞ்சித் தலைவர்
கொள்கைகள் கொண்ட எம்ஜிஆர்
ஆனார் காவிய நாயகராய்...
மக்கள் மனங்களைக்
கொள்ளை கொண்டார் நல்ல
புரட்சித் தலைவராய்...

அரசியல் நாகரிகம் தெரிந்த
அற்புத மனிதர் எம்ஜிஆர்...
ஒருசமயம் கவிஞர்
புலமைப்பித்தனோடு
உரையாடிக்கொண்டே
சட்ட மேல்சபை வளாகத்தில்
நடந்து வந்தபோது
எதிரே எதிர்கட்சித்
தலைவர் கலைஞர்
வரக்கண்டு புலமைப்பித்தனிடம்
கலைஞருக்கு வணக்கம்
சொல்லி உரையாடிவிட்டு
வாருங்கள்... அதுதான்
உங்களுக்கும் அவருக்கும்
உள்ள நட்புக்கு மரியாதை
என்று கூறி அவரும்
கலைஞருக்கு வணக்கம்
சொல்லிவிட்டுச் சென்ற
அரசியல் நாகரிகம் தெரிந்தவர்..

அடிமையின் உடம்பில்
ரத்தம் எதற்கு
நீ கொண்டு வந்ததென்னடா
மீசை முறுக்கு
என்று கூறி நீதிக்கு மட்டும்
தலைவணங்கி யார்காலிலும்
விழா தொண்டர் கூட்டம்
தலைவர்கள் கூட்டம்
உருவாக்கிய வெற்றி
விழா நாயகர் அவர்...

முப்பது பைசாவில்
ரசிகர்களை சினிமாக்
கொட்டகைகளில்
மூன்றுமணி நேரம்
கட்டிப் போட்டவர்...

அவரது ஆட்சியின்
அத்தனை அமைச்சர்களும்
நாஞ்சில் மனோகரன்
நெடுஞ்செழியன் ஆர்எம்வீரப்பன்
கேஏகிருஷ்ணசாமி
திருநாவுக்கரசு ஜிஆர்எட்மண்ட்
எஸ்டிசோமசுந்தரம்
பன்ருட்டி ராமச்சந்திரன்
குழந்தைவேலு சௌந்தரராஜன்
காளிமுத்து ராகவானந்தம்
பி.டி.சரஸ்வதி சுப்புலட்சுமி
ராஜாமுகம்மது பொன்னையன்
சத்தியவாணிமுத்து
ஹண்டே சௌந்தரபாண்டியன்
அரங்கநாயகம் முத்துசாமி என
இன்றளவும் அவர்களின்
துறைகளோடு நினைக்கச்
செய்யும் முக்கியத்துவம்
பெறச் செய்தவர்...

தமிழ் நாட்டில் மக்களைப்
பார்த்து பேசச்செல்லும்
மாலை நேரப்பயணங்களின்
போது இடையே வயல்
காடுகளில் கார்களை
நிறுத்தித் தொண்டர்களோடு
சரிசமமாய் தரையமர்ந்து
உணவு உண்டவர்...
மக்களால் பாதுகாக்கப்பட்டவர்..
பாதுகாப்பு வளையங்கள் தெரியாதவர்..

பொன்னகை ஒத்த
புன்னகைக்குச் சொந்தமான
மக்கள் திலகம்
பொன்மனச் செம்மல்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
தனக்கு வழங்கப்பட்ட
அடைமொழிகளுக்கு
அர்த்தம் கொடுத்தவர்...
சாமானியர்களும்
கதாநாயகர்களாய் வாழச்
சொன்ன வாத்தியார்...

தமிழகம் ஆள மக்கள்
எம்ஜிஆருக்கு அரியாசனம்
கொடுப்பதற்கு முன்பே
தங்கள் மனங்களில்
கொடுத்துக் கொண்டாடினார்கள்...

எம்ஜிஆரின் தோற்றமும் குரலும்
மக்களை வசப்படுத்தியது...
குண்டடிபட்டு குரல்
மாறிய பின்பும் வழக்கம் போலவே
அது கொண்டாடப்பட்டது...

எம்ஜிஆர் வானொலி மூலம்
உரையாற்றும் போதெல்லாம்
தமிழகம் எங்கிலும்
தேநீர் கடைகளின்
வானொலி ஒவ்வொன்றும்
குறைந்தது இருநூறு முந்நூறு
பேரை வசப்படுத்தும்
அதிசயம் நிகழ்ந்தது...

குடிசைகளுக்கும் விவசாயத்திற்கும்
இலவச மின்சாரம் வழங்கி
இன்ப அதிர்ச்சி கொடுத்தார்...
மக்கள் துன்பங்கள் களைந்தார்...

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பென
மக்களுக்காக ஆண்டாண்டுகால
மரபுகளை உடைத்தெறிந்தவர்..
மாணவர்கள் உயர்கல்விக்கு
வெளிமாநிலம் செல்லும்
நிலை மாற்றியவர்...

இன்று தமிழக மாணவர்கள்
இந்தியாவில் எல்லா
மாநிலங்களுக்கும்
உலகில் எல்லா
நாடுகளுக்கும் சென்று
பல்வேறு பொறியியல் துறைகளில்
பணிபுரிந்திடுவதன் மூலமும்
பன்னாட்டு நிறுவனங்கள்
சென்னை வந்து
தொழிற்சாலைகள்
அமைப்பதின் மூலமும்
இந்தியப் பொருளாதாரம்
வளர அன்றே வித்திட்டவர்...

பிறந்தாலும் இறந்தாலும்
எம்ஜிஆர் பேர் சொல்கிறது ஊர்...
இவர்போல யாரென்று
மூக்கின் மேல் விரல் வைத்து
வியக்கிறது உலகம்...

எம்ஜிஆர் பிறந்தநாளின்
சிறப்பு... புகழ் எல்லாம்
ஆயிரமாயிரம் ஆண்டுகள்
தாண்டியும் நிலைக்கும்
எம்ஜிஆரின் அபிமானிகளுக்கும்
தற்காலத்தில் வாழும்
எம்ஜிஆர் காலத்து
நண்பர்களுக்கும்
வாழ்த்துக்கள் பல.

அன்புடன்... நண்பன்...
இரா.சுந்தரராஜன்.
🙏😀👍💐🌹👏

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (17-Jan-20, 4:59 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 87

மேலே