சோளக்காட்டுப் பொம்மையின் உண்மை
.
=========================================
கதிரறுத்த வயல்வெளியில்
யாருமற்ற தனிமையில்
கடமை தவறாமல்
கால்கடுக்கக் காவலிருக்கும்
சோளக்காட்டுப் பொம்மை.
**
அச்சமின்றி வந்துபோகும்
பறவைகளின் இளைப்பாறலுக்குத்
தன்னை அர்ப்பணிக்கும்
அற்பச் சுகத்தில் ஆயுள்
விமோசனம் அடையும்.
**
வழிதெரியாமல் வந்துபோகும்
அயலூர்க்காரனை ஒருகணம்
அச்சத்தில் உறையவிடும்
**
சட்டி மண்டைக்குள்
குருவிகள் குடும்பம் நடத்த
இடங்கொடுத்து மகிழும்
**
கடமையைச் செய்
பலனை எதிர்பாராதே என்றக்
கோட்பாட்டை வலியுறுத்தும்
விளம்பரதாரியாகவும் இருக்கும்
**
ஊருக்கு வெளியே
யாருமில்லா இடமென்று
ஒதுங்கிய சோடியொன்றின்
அந்தரங்கம் அறியும்
**
சாதிச் சாக்கடையில் மூழ்கிய ஊரில்
ஒரே கோப்பையில்
கள்ளச்சாராயம் குடித்துப்போனவர்களின்
சமத்துவம் கண்டுச் சிரிக்கும்
**
இன்னும் என்னென்னவோ
அநியாயங்களை கண்ணெதிரே கண்டு
வெளியே சொல்ல முடியாமலும் தவிக்கும்
*
யார் கண்டது
ஆவியாகித் திரியும் மனிதர்களை
நள்ளிரவில் பீதிக்குள்
மூழ்கவிட்டிருக்கவும் கூடும்.
**
மேல்வர்க்கங்களின் இச்சைக்கு
இரையாகி தலைகுனிந்த
கீழ்வர்க்கமொன்றிற்கு
பஞ்சாயத்து திண்ணைகளில்
நாட்டாமைகள் வழங்குகின்ற
தீர்ப்புகள் பொய்யென்று
தெரிந்து வைத்திருக்கும்
சோளக்காட்டுப் பொம்மைகளின்
பின்னால் மறந்திருக்கும் உண்மைகள்
மைபோட்டுப் பார்க்கும் மாந்தரீகனுக்கும்
புரிவதில்லை
மதிகெட்ட மனிதனுக்கும் தெரிவதில்லை
*
அப்பொம்மைகள்
வெறும் பொம்மைகளல்ல
ஊராரின் உண்மை என்பதுமட்டும்
உண்மையிலும் உண்மை.
**