காளமேகம் யானே

⁠அதிமதுரக் கவியும் பிறரும் காளமேகத்தின் கவித்துடுக்கைக் கண்டு ஆத்திரம் கொண்டனர். நீவிர் யாவரோ?' என அவர்கள் கேட்கத் தம்மை இவ்வாறு அவர்கட்கு அறிமுகப்படுத்துகிறார் கவிஞர். இது, மன்னவனின் அவையிலே நிகழ்ந்தது ஆகலாம்.

பன்னிரு சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

⁠தூதைந்து நாழிகையி லாறுநா
ழிகைதனிற் சொற்சந்த மாலைசொல்லத்
துகளிலா வந்தாதி யேழுநா
ழிகைதனிற் றொகைபட விரித்துரைக்கப்

பாதஞ்செய் மடல்கோவை பத்துநா
ழிகைதனிற் பரணியொரு நாள்முழுதுமே
பாரகா வியமெலா மோரிரு
தினத்திலே பகரக் கொடிகட்டினேன்!

சீதஞ்செ யுந்திங்கண் மரபினா
னீடுபுகழ் செய்யதிரு மலைராயன்முன்
சீறுமா றாகவே தாறுமா
றுகள்சொல் திருட்டுக் கவிப்புலவரைக்

காதங் கருத்துச் சவுக்கிட்
டடித்துக் கதுப்பிற் புடைத்துவெற்றிக்
கல்லணையி னொடுகொடிய கடிவாள
மிட்டேறு கவிகாள மேகநானே. 4 - கவி காளமேகம்

பொருளுரை:

தூது என்னும் வகைப் பிரபந்தத்தை ஐந்து நாழிகைகட்கு உள்ளாகவும், சொல்லப்படும் சந்தமாலை என்பதனை ஆறு நாழிகைகட்கு உள்ளாகவும் சொல்லவும்,⁠ குற்றமற்ற அந்தாதி வகைகளை ஏழு நாழிகைப் பொழுதிலே, அவை தொகைப்பட்டு வருமாறு விரிவாக உரைக்கவும்;

பகுதிப்படச் செய்வனவான மடல் கோவை ஆகியனவற்றைப் பத்து நாழிகைகட்குள்ளாகவும், பரணியை ஒரு நாள் முழுவதற்குள்ளாகவும், பெரிய காவியங்களை எல்லாம் ஒன்றிரண்டு நாட்களுக்குள்ளாகவும் சொல்வதற்கும், விருதுக்கொடி கட்டி வந்துள்ளேன் யான்.

குளிர்ச்சி செய்யும் சந்திரனின் மரபினனும், நெடிதான புகழினை உடையோனும், செங்கோன்மை யாளனுமான திருமலை ராயன் என்னும் இம்மன்னவனின் முன்பாக, சீற்றமென்றும் மாற்றம் என்றும் மிகுதியாகத் தாறுமாறான செயல்களைச் செய்து கொண்டிருக்கின்ற திருட்டுத்தனம் உடைய கவிராயரான புலவர்களாவோரை,

இவ்விடத்தே காதுகளை அறுத்தும், சவுக்கினாலே அடித்தும், கன்னங்களிற் புடைத்தும், என் வெற்றியாகிய கல்லான சேணத்துடனே, கொடிய கடிவாளத்தை இட்டும், அவர்கள் மீது ஏறிச் செலுத்தும் கவிஞனாகிய காளமேகம் என்பவன் நானேதான்.

கவிபாடுதலிலே தமக்குள்ள பேராற்றலைக் கூறி, மன்னனின் பெருமையைச் சொல்லி, புலவர்களின் தவறான போக்கை இடித்துரைத்து, அவர்களை வெற்றி கொண்டு அவமானப்படுத்த வந்திருக்கும் கவி காளமேகம் தானே என்றும் கூறுகிறார் கவிஞர்.

தூது முதலியவை சிறு பிரபந்த வகையைச் சார்ந்த நூல்கள்.

நீடு புகழ் - நெடிது பரந்த புகழ், செய்ய - செம்மை வாய்ந்த, செங்கோன்மை சிறந்தது, சீறுமாறென்று தாறுமாறுகள் செய்தல். – சீற்றங் கொள்ளல் என்றும், மாறுபட்டு உரைத்தல் என்றும் புலவர்க்கு மாறுபட்ட செயல்களைச் செய்தல், 'குதிரையேறி நடத்துவேன்' என்றது, அவமானப் படச் செய்வேன் என்றதாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Jan-20, 7:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 50

மேலே