மருத்துவ வெண்பா – நாரை, ஆரை, கபிலைப் பசுக்களின் பாற்குணம் – பாடல் 52

இந்திய மண்ணுக்குச் சொந்தமான முப்பதுக்கும் மேற்பட்ட ரகங்களில் கபிலையும் ஒன்று. இதைப் 'புனிதப் பசு’ என்றும் சொல்வார்கள். பார்வைக்கு காராம்பசுவைப் போல இருக்கும்.
இந்த இன மாடுகள், கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் அதிகம் உள்ளன. அழிந்து வரும் இனங்களில் இதுவும் ஒன்று. குறைந்த அளவுதான் பால் கொடுக்கும். இதன் பாலில் மருத்துவ குணம் உள்ளது என்று கண்டுபிடித்துள்ளார்கள். இதன் சிறுநீர் மற்றும் சாணம்கூட மருத்துவப் பயன்பாட்டில் உள்ளன.
இவ்வளவு சிறப்புகள் கொண்ட இந்த ரகத்தை, இன்றைக்கு காசர்கோடு பகுதியில்கூட பார்ப்பது அரிதுதான்.
கர்நாடக மாநிலம், சிமோகாவில் உள்ள ராமச்சந்திரபுரம் மடத்தில் இந்தப் பசுக்களைக் காக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள பண்ணையில், இந்தப் பசுக்களைப் பராமரித்து வருகிறார்கள்.
உண்மையிலேயே பசுக்களின் மீது பரிவும், பாசமும் கொண்டு கேட்டு வருபவர்களுக்கு கன்றுகளையும் கொடுக்கிறார்கள்
நாரை – ஆரை – கபிலைப் பசுக்களின் பாற்குணம்
நேரிசை வெண்பா
நாரைப் பசுவின்பால் நாளுமுய னோயகற்றும்
ஆரை நிறப்பசும்பால் வாய்த்திடினோ – வேரையுறு
முப்பிணியும் போகும் மொழிகபிலை யின்பாலுக்(கு)
எப்பிணியும் போமிறங் கி. - தேரையர்
பொருளுரை:
நாரை வகைப் பசுக்களின் பால் (முயனோய்) முயல்வலி எனும் வலிப்பு நோய்க்கு உதவும்.
ஆரை வகைப் பசுக்களின் பால் முத்தோஷங்களையும் (வாதம், பித்தம், கபம்) போக்கும்.
கபிலைப் பசுக்களின் பால் எல்லாப் பிணிகளுக்கும் உதவும்.