வேட்டை
________________________________
"ஆம் என்பதற்கு மன்னிக்க வேண்டும். இந்த ஒரு நாள் ஒரே ஒருநாள் மட்டுமே உங்களுக்கு உரியது. விதி, திட்டம், நல்வாய்ப்பு மற்றும் சாமர்த்தியத்தின் மூலம் உங்களை காப்பற்றிக்கொள்ளவும் இந்த ஒருநாள் மட்டுமே உள்ளது. ஒரு தோட்டா, ஒரு விஷ ஊசி, ஒரு விபத்து, ஒரு கத்தி எதுவென்றும் யூகிக்க முடியாத வண்ணம் உங்கள் மரணம் நிச்சயிக்க பட்டு விட்டது. மீண்டும் என்னை மன்னித்து விடுங்கள்".
போன் அணைந்தது.
அந்த பெரு நகரத்தின் மையத்தில் அவன் இருந்தான்.
அமைதி என்பது சற்றும் இல்லாத வாகனங்களும் மனிதர்களும் விலங்குகளும் ஒன்றையொன்று ஒலியால் தாக்கிக்கொண்டு சிதறியும் இணைந்தும் எங்கெங்கோ விரைந்தன.
அவன் அந்த போனை விட்டெறிந்தான்.
அது சாக்கடைக்குள் அமிழ்ந்தபோது நடக்கத்துவங்கினான்.
🔷🔷🔷🔷🔷
முப்பத்தியேழு வருடங்களுக்கு பின் அவனிடம் ஒரு மனைவி இரண்டு குழந்தைகள் அம்மா அப்பா ஒரு தம்பி மற்றும் தங்கை இருந்தனர்.
ஆனால் இந்த நொடி முதல் அவன் உயிர் யாராலோ குறி வைக்கப்பட்டு விட்டது.
🔷🔷🔷🔷🔷🔷
கூட்டம் அதிகமில்லாத ஒரு தாழ்வு நிலை பேருந்தில் ஏறிக்கொண்டான்.
இனி யாரிடமும் பாதுகாப்பு கேட்கவும் அடைக்கலம் செல்லவும் எந்த வழியும் இல்லை. அவர்கள் அவன் நிழலில் இருந்து பூத்து மரணத்தை மலர செய்யும் வல்லமை கொண்டவர்கள்.
பேருந்து நகரத்தின் ஊடாக மெதுவாக சென்று கொண்டிருந்தது. நடத்துனன் மட்டும் தன் மெரூன் நிற குல்லாவை அசைத்து அவனுக்கு வணக்கம் கூறி சீட்டை கையில் திணித்தான்.
🔷🔷🔷🔷🔷
வாழவேண்டும் என்ற விருப்பம் அப்போதும் அவனுக்கு இருந்தது. தன் குன்றாத செல்வத்தின் மீது தன் குடும்பத்தின் மீது தன் அதிகாரத்தின் மீது அந்த ஒரே விருப்பம் பசை போல் ஒழுகி கொண்டிருந்தது.
எந்த குறுக்கு வழியும் இப்போது இல்லை.
வெகு தூரத்தில் ஒரு பிஸ்டல் அவன் வருகைக்கு காத்திருக்கிறது. திட்டம் தீட்டி தப்பிக்க அவகாசம் இல்லை. உடல் வலு முன்பு போல் இல்லை.
ஆயினும் வாழ வேண்டும்.
எப்படி எப்படி என்று கேட்டு கொண்டிருக்கும் அவன் மனதை அவனால் அப்போது வெறித்து பார்க்கவே முடிந்தது.
சாலையில் இருந்த மக்கள் கூட்டம் பேருந்தில் புகும் போது மனம் எச்சரித்தது. வேண்டாம் இறங்கி விடு.
இறங்கி பாலம் கடந்து சென்று ரயில் நிலையம் செல்ல அங்கே கிளம்ப யத்தனித்த ஒரு ரயிலில் சென்று அமர்ந்தான். அங்கு அவனுடன் யாரும் அப்போது இல்லை.
யாரேனும் வந்தால் தாக்கி விட வேண்டும் என்ற முன்னெச்சரிக்கையை வளர்க்க பெரும்பாடு பட வேண்டி இருந்தது.
🔷🔷🔷🔷🔷
வாழ வேண்டும் என்ற ஆசை இப்போது அவனுக்கு ஒரு நம்பிக்கையாக மாறி இருந்தது. இந்த இரவை கடந்தால் போதும். ஒருவேளை அவர்கள் முடக்கப்பட்டு விடலாம். ஆனால் இப்போது அது சாத்தியமாகி வருகிறதா என்று அவனால் யூகிக்க முடியவில்லை.
தன் நம்பிக்கையை உற்றுப்பார்த்தான். அது அவனுக்கு இருக்கும் கடமைகள் வழியாக கட்டளைகள் வழியாக ஆசைகளை வளர்த்து கொண்டிருந்தது.
அந்த நம்பிக்கை அவனோடு பேச விரும்பியது.
அது யார் யாரோ எழுதி வைத்திருந்த யாராலோ கற்பிக்கப்பட்ட வாசகங்களை உச்சரிக்க ஆரம்பித்தது.
"நீ நம்பு. பரிபூரணமாக நம்பு. வழி கிடைக்கும்."
நம்பிக்கை இதை மட்டுமே அவனுக்கு சொல்லி கொண்டிருக்க அவனோ அதை சலனமின்றி கவனித்தான்.
இந்த வாசகங்கள் யாவுமே உலக மதங்களில் இருந்தும் பரிணாம கொள்கைகளில் இருந்தும் பெறப்பட்டவை என்று தோன்றியது. உண்மையில் மனதை நம்பத்தூண்டும் உற்சாகமூட்டும் எல்லா வாசகமும் அவநம்பிக்கையின் தெய்வீக வடிவமோ என்று அவனுக்கு தோன்றியது.
எனக்கு குடும்பம் உள்பட சகலமும் இருக்கிறது. உண்மை. இந்த கணம் எனக்கு யார் இருக்கிறார்கள் என்று சிந்திக்க சிந்திக்க குழப்பம் வந்தது.
🔷🔷🔷🔷🔷
மதத்தின் பெயரில் எத்தனையோ தூதுவர்களும் மதத்துக்கு எதிராய் எத்தனையோ தூதுவர்களும் அவனிடம் இருந்தது போல் இருந்துவிட்டு இப்போது அவனிடமிருந்த் மறைந்து விட்டனர்.
அவன் மரணம் அவனருகில் அமர்ந்து கொண்டு இதை எல்லாம் ஆசுவாசமாய் வேடிக்கை பார்ப்பது போல் உணர்ந்தான்.
என் மரணம் என்னுடையது. அது பிறரால் தரப்பட்டாலும் நானே வலிந்து உண்டாக்குவதும் கேவலம் என்று சொல்லிவிட்டு அதில் ஒரு திருப்தியை அடைந்தான்.
ஆயினும் எப்படி தப்பிக்க முடியும்?
நேரத்தை நிறுத்த முடியாது.
🔷🔷🔷🔷🔷
ஆள் அரவமற்ற ஏதோ ஒரு ஸ்டேஷனில் ரயில் நின்றது. மெயின் வாசலை நோக்கி செல்லாமல் தண்டபாளம் வழியே விரைந்து நடந்தான். பசித்தது.
இந்த பசிதான் அவனை பிறக்க வைத்தது. பின் அவனுக்கும் பசித்தது. பசியின் உண்மையான உணவு மரணமோ?
அவன் குடும்பம் நாளை அவனுக்காக ஏங்கி தவிக்கும் என்ற நம்பிக்கை எள் அளவும் அவனுக்கு இல்லை. யாரும் இறந்தவருக்கு ஏங்கி தவிக்க முடியாது.
அவர்களுக்காக அவர்களே அழ முடியாதபோது யாரின் மரணமோ அழ வைத்து விடுகிறது.
அப்போது அவர்கள் அவர்களுக்காக அழுது தீர்க்கின்றனர்.
🔷🔷🔷🔷🔷
மரணம் தெய்வங்களை நினைவூட்டியது.
பாவம், அவைகளால் என்ன செய்ய முடியும்? தெய்வங்கள் இதயத்தை குறித்து விசனப்பட்டதை எல்லாம் தொழில் கருத்துகளாக மாற்றி அறிவின் விரையை நசுக்கி கொண்ட மனிதனுக்கு சற்றும் மாற்றம் கொண்டவன் அல்ல தானும் என்பதை என்று புரிந்து கொண்டானோ அன்றே அவன் தெய்வங்களிடம் கை குலுக்கி விடை பெற்று விட்டான்.
மரணம் அவனிடம் உனக்கு யாசிப்பதில் விருப்பம் இல்லையா என்று கேட்பது போல் உணர்ந்தான்.
🔷🔷🔷🔷🔷
இருப்புப்பாதை நீண்டு சென்று கொண்டே இருந்தது. அது எதை துரத்தி செல்கிறதோ அது அவனுக்கு இலக்கு இல்லை. எனினும் இருவரும் ஒன்றாக இப்போது பயணிக்க ஆரம்பித்து விட்டதை எண்ணி வியப்பு வந்தது.
இப்படித்தான் நம் பயணம் பிறந்தது முதல் எந்த குறிக்கோளும் இன்றி கடந்திருக்கிறது என்று நம்ப ஆசை வந்தது. ஒரு கணம்தான். இல்லை எண்ணங்கள் மாயை என்று சொல்லி கொண்டான் அவன்.
🔷🔷🔷🔷🔷
எண்ணங்களை விட ஞாபகங்கள் சக்தி கொண்டவை. அவை உறவுகள் மூலம் வளர்கின்றன. ஞாபகங்கள் என்பது வெறும் ஓசைகளால் ஆனது. அதை பெயராலும் உறவாலும் என்றென்றும் அழிக்க முடியாத அளவுக்கு குறித்து வைத்திருக்க பழக்கப்படுத்தி கொண்டதன் விளைவே இப்போது இந்த மரணத்துக்கு அஞ்சி பதுங்க சொல்கிறது.
இப்படியெல்லாம் அவன் நினைத்து கொண்டே விரைந்து நடந்தான். மதியம் மிகுந்த சூட்டில் தரையும் வானமுமாய் எரிந்து கொண்டே இருந்தது. தொலைவில் ஒரு சிறுவன் சில ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தான்.
அவனுக்கு அருகில் ஒரு மரமும் ஒரு பெரிய பாறையும் இருந்தது.
அங்கே சென்று அமர்ந்து கொண்டான்.
🔷🔷🔷🔷🔷
இனி என்ன செய்யலாம்?
தன் உயிர் வேட்டையாடப்படுவது அரசியல் வணிகம் கொண்டது. இன்று தவறினால் அது தப்பிக்க சில வாய்ப்புகளை உருவாக்கும். ஆனால் அது வலிமையான ஒன்றா என்று சொல்ல முடியாது. தன்னைத்தானே அழித்து கொள்ள விருப்பமும் இல்லை.
ஆக வாழ வேண்டும். அது மட்டுமே தன் மரணத்தை பெருமை செய்யும் செயல் என்று அவனுக்கு தோன்றியது.
ஏதோ நம்பிக்கைக்காக ஏதோ சில ஆசைகளுக்கு வாழ்வது வெறும் பாசாங்கு. உண்மையில் அந்த நேரத்தில் நம் மூலம் வேறு யாரோ ஒருவரே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்று நினைத்தான்.
🔷🔷🔷🔷🔷
அவன் முன்பு எதற்காவும் யாருக்காகவும் வாழவில்லை.
இரக்கம் பரிவு கனிவு என்ற சொற்களை கேள்விப்படுவது போலவேதான் நேர்மை ஒழுக்கம் நியாயதர்மங்கள் என்ற சொற்களையும் கேள்விப்பட்டு இருக்கிறான்.
இவை யாவும் ஒன்று போல் ஒன்று இருக்கும் என்பதைவிடவும் ஒன்றுக்கொன்று எப்படியோ தொடர்பில் இருக்கும் என்பதைவிடவும் இவைகளை மனிதன் என்பதனாலேயே நீ ஏற்று கொள்ளவே வேண்டும் என்ற சட்டங்கள் கொண்ட நாட்டில் பிறந்தவன் அவன்.
அவன் உயிர் இன்று யார் துணையின்றி மரணத்தின் முன் நிற்கிறது.
சட்டங்களின் கைதிகள் மனிதர்கள். அவர்கள் சட்டங்கள் மீது நம்பிக்கையும் அவஸ்தையும் கொள்கின்றனர். விதிகள் மீது மேய்ந்து கொண்டிருக்கும் மனம் யாருக்கும் மரணத்தின் புனிதத்தை அது விளக்கி சொல்வது இல்லை.
அவர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் இன்னொருவர்க்காக மலிவாக பிச்சை எடுப்பதன் மூலம் வாழ்க்கையில் இருந்து கத்தரித்து கொள்கின்றனர் என்று அவன் நினைத்து கொண்டான்.
இவ்வளவுக்கு பின்பும் அவன் மரணத்தை நேர்மையாக காண முடிந்தும் அதில் அர்த்தமுள்ள சிக்கல்கள் விரிந்து சென்றன.
🔷🔷🔷🔷🔷
கேள்விகளும் தேடலும் இப்போது அவனை சந்தேகங்களின் கீழே புதைத்து வைத்திருக்கும் உணர்வை அடைந்தான்.
மனிதன் மனிதனுக்கு சந்தேகங்களை பயிற்றுவிக்கிறான். பள்ளியில் துவங்கி பணி புரியும் இடம் வரை.
அவனுக்கே உரிய பெருமையில் மதிப்பில் கௌரவங்களில் உறவுகளில் சந்தேகம் நீட்டிக்கொண்டே இருக்கிறது.
சந்தேகத்தின் மூலம் சந்தோஷப்படும் ஒரே மிருகம் மனிதன் மட்டுமே.
அவன் இப்படி யோசிக்கும்போது அந்தி நேரம் விழுந்தது.
இனி இந்த காட்டில் இருக்க முடியாது.
கிளம்பினான்.
🔷🔷🔷🔷🔷
சில பாதைகள் கடந்து அந்த ஊருக்குள் வரும்போது அது நடுத்தர நகரம் என்று புரிந்து கொண்டான்.
காரில் இருந்து இறங்காமல் பலமுறை கடந்து சென்ற நகரம்தான் இது.
இன்று அவனுக்கு அது மிக புதிதாக இருந்தது.
பெண்களும் ஆண்களும் சிரித்து பேசி கவர்ச்சியாக கடந்து சென்றனர். அழுக்கும் புழுதியும் பற்றிய எந்த ஃப்ரக்ஞையும் அவர்களிடம் இல்லை. எல்லா பெண்களும் சிரிப்பினூடே சதா தங்கள் முலைகளை ஓரப்பார்வையில் கவனித்துக்கொண்டே இருந்தனர்.
அவன் மீது ஒரு துப்பாக்கியின் நிழல் விழ ஆரம்பித்து மணி நேரங்கள் முடிந்து இருந்தது. இனி இரவில் எதுவும் நிகழ வாய்ப்புகள் உண்டு.
பேசாமல் இந்த ஊரிலேயே தங்கி விடலாமா என்று யோசித்தான். ஒருவேளை தங்கினால் இவர்களின் நன்மதிப்பை இரண்டு வருடங்களில் பெற்று விட முடியுமா என்று மனம் கணக்கிட்டது.
இப்படித்தான் வாழ்க்கை முழுவதும் கன கச்சிதமாக திட்டங்கள் போட்டு கொண்டே வந்திருந்தான். முதலில் அச்சு பிசகாத அந்த சூத்திரம் இறுதியில் நூல் விட்டு நிலை குலைந்து போய்விட்டது.
உண்மையில் அப்படியொரு பாவியாக அவன் ஒருபோதும் இல்லை.
எல்லோருக்கும் இருக்கும் அவசரம் இவனுக்கும் இருந்ததில் என்ன குற்றம்?
மெதுவாக பிறந்தாலும் அவசரமாக வளர்க்கப்பட்ட எல்லா பிள்ளைகளில் இவனும் ஒருவன்.
ஆகவே, எல்லோரையும் போல் தென்னை மரம், நாய், பூனை, அவரைக்காய், வீட்டு வரி, கிஸ்தி போன்ற எல்லாமும் மற்ற எல்லோரைப்போலவே பார்த்து பார்த்து கடந்து வந்து விட்டான்.
அவர்களுக்கு இல்லாத மரணம் மட்டும் இப்போது இவனுக்கு.
ஏன்?
கேள்விகள் மீண்டும் அதே சந்தேகத்தில் இவனை புதைக்க ஆரம்பித்தபோது
வெறுப்பை அடைந்தான்.
🔷🔷🔷🔷🔷
மகரிஷிகள், ஞானிகள், முனிவர்கள் எல்லோரும் இவனை பார்த்து சிரிப்பது போல் தோன்றியது.
இப்படி எவ்வளவு தூரம் எவ்வளவு நாட்கள் மறைத்து கொண்டும் மறைந்து கொண்டும் நடக்க போகிறோம் என்று நினைக்கவே கஷ்டமாக இருந்தது.
இனி பிழைக்க வாய்ப்பு இருந்தாலும் கடந்த முப்பத்தியேழு வருடம் வாழ்ந்த அதே வாழ்க்கையை மட்டும்தான் வேறு வடிவில் வாழ முடியும். சாகும் வரை...
வாழ்ந்தால் என்ன?
உண்மையில் நாம் எப்படி வாழ்கிறோம் என்ற சுரணை மனிதனுக்கு வந்து விட்டால் எத்தனை விஷயங்கள் உடனே அவனிடமிருந்தும் இந்த உலகில் இருந்தும் இல்லாமல் போய் விடும். அப்படி ஒரு உணர்ச்சியை உண்டாக்கி கொள்ளவும் பழகி கொள்ளவும் மனிதனுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?
அவன் ஒன்றுமில்லாது வருவது உண்மை என்றாலும் தன் வெறுமையை கொண்டே பிறரை நிரப்பி விடுகிறான். மொழி அறிவில்லாத மிருகங்கள் இப்படி செய்ய முடியுமா? அல்லது நினைக்குமா?
அவன் சலித்து கொண்டான். என்னதான் செய்வது?
ஊரின் பிரதான சாலைக்கு வந்தான். ஒரு பேருந்தில் ஏறினால் மீண்டும் அவன் நகரத்துக்கு அவன் குடும்பத்துக்கு சென்று விட முடியும். இல்லையேல்...
மரண நினைவுடன் எங்கோ எப்படியோ அலைய வேண்டியதுதான்.
மரண நினைவுகள்...
மரணத்தை பற்றி ஏன் இத்தனை நாட்கள் நாம் இன்றுபோல் சிந்திக்கவில்லை என்ற எண்ணம் வந்தது. குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பெரிய நோயை பற்றியாவது இப்படி யோசித்து இருப்போமா என்று நினைத்து பார்த்தான்.
நோய்கள் பற்றி இவன் குடும்பம் நிறைய சிந்தித்து இருக்கிறது. அதாவது, இவனுக்கு வரக்கூடும் என்று சிந்தித்து வேண்டிய அளவு பிரீமியம் கட்டி கொண்டிருக்கிறது.
இருந்தாலும் பணம். செத்தாலும் பணம்.
நம் சொந்த மரணத்தை எவ்வளவு அவமானப்படுத்தி இருக்கிறோம் என்று நினைக்க இன்னும் கஷ்டமாக உணர்ந்தான்.
ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் மனதுக்கும் மரணமே உண்மையான தூதுவன் என்று நினைத்து கொண்டான்.
நம் மரணத்துக்காக ஏன் நாம் மரணத்துடனே வாழ கூடாது என்று நினைத்து பார்த்தான்.
அது சாத்தியமா?
அவனுக்கு சாத்தியம் என்றே நான் நினைக்கிறேன்.
அவன் ஊருக்கு செல்லும் பேருந்தில் எந்த கலக்கமும் இன்றி ஏறி அமர்ந்து விட்டான்.
===============================