48 மன்னன் இன்றேல் குடிகள் மனை செல்வம் இன்றி மாள்வர் – குடிகளியல்பு 2

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடங்களில் காய்ச்சீர் அருகி வரலாம்)

நம்மனை மைந்தர் கிரகவாழ் வெல்லாம்
..நரபதி யாலவ னிலனேல்
அம்மனை தீயர் கைவச மாவள்
..அருநிதி கொள்ளையாம் நாளும்
வெம்மையோ டொருவ ரொருவரை யுண்பார்
..மேலவர் அசடரான் மெலிவர்
அம்மஈ தெல்லா முணர்ந்தர சாணைக்
..கமைதனற் குடிகளி னியல்பே. 2

- குடிகளியல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”நமது மனைவி, பிள்ளைகள், வீடு வாழ்வு எல்லாம் மன்னவனாலேயே நிலைக்கும். அவன் இல்லா விட்டால் அந்த மனைவி தீயவர்களால் பாதிக்கப் படுவாள். மக்கள் சேர்த்து வைத்த செல்வம் கொள்ளையடிக்கப்படலாம். தினமும் கடுமையாக ஒருவரை ஒருவர் துன்புறுத்துவர். உயர்ந்தவரைக் கீழ்மையான குணமுடையவர் துன்புறுத்துவர்.

அதனால், இவைகளையெல்லாம் உணர்ந்து அரசன் ஆணைக்கு அடங்கி நடப்பதே குடிமக்களுக்குப் பெருமை” என்றும், சட்டம், ஒழுங்கு நல்லபடியாக நிலைத்திருக்க நல்ல அரசாங்கம் வேண்டும் என்றும் சொல்கிறார் இப்பாடலாசிரியர்.

வெம்மை – கடுமை,
அசடர் – கீழ்மையான குணமுடையவர்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jan-20, 6:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

மேலே