கலகக்காரி

எப்போதும் உரைத்ததே இல்லை
உன் காதலை..

நட்பென்றாய்
அன்பென்றாய்
அதற்கும்மேலென்றாய்
கனா கண்டேனென்றாய்
கையில் புதைந்தேனென்றாய்
உச்சிமுகர்ந்து
முத்தமிடாமல் சென்றேனென்றாய்..
அணு போல்
ஆழிபோல்
ஊடுருவிப்பிணித்த
உயிர்போல் தானென்றாய்..

காடுமலை கடந்து சென்றால்
காண்பதெல்லாம்
நானென்றாய்
வானவில்லில் ரகசியமாய்
கண்டுகொண்டேனென்றாய்..
சிற்றோடை மழைச்சாரல்
இளந்தென்றல்
மஞ்சள் வெயில்
இவற்றிலெவை கண்டிடினும்
அடுத்தநொடியென் நினைவென்றாய்..

உண்கையிலும்
உறங்கையிலும்
ஓயாதுன் கனவென்றாய்
பாடலெதுவும்பார்க்கையிலே
அனிச்சையினாய் உனதருகிலென்றாய்
வேறெதுவும் எண்ணாதே
வெறும் பாசம்தானென்றாய்
தினமுன்னை காணாவிடில் ஏதோ கொஞ்சம்
ஏக்கமென்றாய்..

இவ்வளவும் சொல்லிவிட்டு
இப்போதுன்னை வெறுக்கிறேனென்றாய்
குறிப்பாலுணர்த்தும் கலகக்காரி..
கண்ணாடிபோலானதடி
நீ கொண்ட‌ பெருங்காதல்..

Rafiq

எழுதியவர் : Rafiq (28-Jan-20, 8:02 pm)
சேர்த்தது : Rafiq
பார்வை : 93

மேலே