வானமழை நானுனக்கு

வானமழை நானுனக்கு வளரும்பயிர் நீயெனக்கு
தேனமுது நானுனக்கு தீஞ்சுவையாய் நீயெனக்கு
ஊனமுறும் போதிலென்றன் ஊன்றுகோலு மாபவளே!
ஞானமிகு வாழ்கனவே! நல்ல மகவே! கண்ணம்மா!

நீட்டுகரம் நானுனக்கு, நிறைபொருளாய் நீயெனக்கு;
தேட்டமடி நானுனக்கு, திரவியமாய் நீயெனக்கு;
காட்டுமிடந் தோறு(ம்)நின்றன் கண்வழியே காண்பனடி!
பாட்டின் சுவையே! பளிங்கே! பழகுதமிழே! கண்ணம்மா!

வெள்ளியடி நானுனக்கு, வெண்மதியம் நீயெனக்கு;
பள்ளியடி நானுனக்கு, பாடமடி நீயெனக்கு;
கள்ளமறு நகையிலென்றன் கங்குல் களைபவளே!
வெள்ளைமனத்தோய்! வெகுளி! வேதப்பொருளே! கண்ணம்மா!

பாய்மரமாய் நீயெனக்கு, படகதுவாய் நானுனக்கு;
சேய்வரமாய் நீயெனக்கு, தாய்மடியாய் நானுனக்கு;
நோயுணரும் போதிலென்றன் நோய்க்குமருந் தாபவளே!
தாயுமெனக் கானவளே! தாங்கு பலமே! கண்ணம்மா!

~தமிழ்க்கிழவி 🌷

எழுதியவர் : தமிழ்க்கிழவி (29-Jan-20, 1:01 pm)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 2762

மேலே