காதலர் தினம்
==
மணப்ப தற்கென மாமல ராகிய
குணக்கொ டிக்கொரு காவல னாகிட
இணக்க முற்றவ னாமென தோடுள தொருநாளே!
*
வணக்க முற்றெனை வாமன தோடென
சுணக்க மற்றுட னேவிழி யோடெனை
துணைக்க ழைத்தவ ளாலுரு வாகிய பெருநாளே!
*
எனக்கு மட்டுமு லாவிட லாமென
மனக்க ணக்குட னேயெனை வானென
தனக்கு லிட்டவ ளாளுரு வாகிய புதுநாளே!
*
மனத்தி லற்புத மாமிள மானெனு
மினத்தை யொத்தது போலவ ளாடிய
தினத்தி லிப்புவி யோடுரு வாகிய திருநாளே!
*

