சின்னஞ்சிறு வயசு நினைவலைகள்

கிரிக்கெட்

அன்று...

தல டோனியை தெரிந்ததில்லை
விராட் கோலியை அறிந்ததில்லை
அன்றைய கிரிக்கெட் நினைவலைகளில்...

அர்ஜுனா ரணதுங்கா தலைமையில்
சிலோன் தட்டிச்சென்ற உலகக்கோப்பையில்
கிரிக்கெட்டை அறிந்தவன் நான்;

நயன் மோங்கியாவும் நவஜோத் சிங் சித்துவும்
துவக்கம் தந்து ஆடும் போட்டிகள் கண்டது;

சச்சினும் சௌரவும் துவக்கம் முதலே
அடித்து துவம்சம் செய்து வெற்றி கொண்டது;

வெங்கடேஷ் பிரசாத் வேகப்பந்தில்
மிடில் ஸ்டிக் தெறிப்பது;

கடைசி ஓவர்களில்
ஜவர்கள் ஸ்ரீநாத்தும் சிக்ஸர்கள் அடிப்பது;

கேட்சுகளை ராபின் சிங் பறந்து பிடிப்பது;

அக்தரின் வேகப்பந்தை
ராகுல் டிராவிட் அப்படியே நிறுத்துவது;

மைதானத்தில் அழகாய் ஜொலிக்கும்
அஜய் ஜடேஜாவை பெண்கள் வெறித்தனமாய் ரசிப்பது;

அவ்வப்போது மேஸ்திரியாய் மாறும்
வி வி எஸ் லக்ஷ்மன் களத்தில் சுவரெழுப்புவது;

காலரை எப்போதும் தூக்கிவிட்டு கம்பீரமாய்
அஸாருதீன் தலைவனாய் கலக்குவது;

என்றோ ஒருநாள் அடித்த மரண அடியை
வினோத் காம்லியும் தினேஷ் மோங்கியாவும்
மீண்டும் மீண்டும் அடிப்பார்கள் என நம்பி இருந்தது;

கபில்தேவ் கவாஸ்கர் ஆட்டங்களை பற்றி
சீனியர் அண்ணன்கள் சொல்ல கேட்டு வியந்தது
என பிம்பங்கள் வரிசையாய் வந்து போகிறது...!

சூதாட்ட புகாரில் அஸாரும் அஜய் ஜடேஜாவும்
அகப்பட்டு போன பின் ஆட்டம் பிடிக்கவில்லை;

அதன்பின் கேப்டனாய் சச்சினும் ஜொலிக்கவில்லை;

கிரிக்கெட் வெறுப்படைந்த நேரத்தில்
அணிக்குள் நுழைகிறார்
கட்டையாய் குள்ளமாய் ஒரு டெல்லி வீரர்;
அவரை எவருக்கும் பிடிக்கவும் இல்லை;
அவர் பெயரையே யாரும் நினைவும் கொள்ளவில்லை;
திடீர் மாற்றம்...!
ஒரு சில காலங்களில் இல்லை;
ஒரு சில ஆட்டங்களிலேயே!
ஆட்டம் ஆரம்பித்து ஐந்து ஓவ்ர்கள்
தாமதமாக பார்ப்பவர்களுக்கு
அவர் அளித்த அதிர்ச்சி வைத்தியம்தான்
எப்போதாவது எல்லைக்கோட்டுக்கு ஓடும் பந்தை
எப்போதும் எல்லைக்கோட்டுக்கே ஓட வைத்தது;
அவர் பெயர் வீரேந்திர ஷேவாக்;
சச்சின் அவுட்டுக்கு டீவியை அனைத்தவர்கள்
அதன் பின் இவருக்கும் அணைத்தார்கள்;


சில காலங்களில் மீண்டுமொரு சீற்றமாய்
கல்கத்தாவின் செல்லப்பிள்ளை கங்குலியின் அவதாரம்அணித்தலைவனாய்!
நேர்கொண்ட பார்வையும் வெறித்தனமும் மட்டும்
ஆடுகளத்தில் தாதாவின் கண்களில்!
அந்த வேகமே அழைத்துச்சென்றது உலகக்கோப்பை இறுதிக்கு;
ஆனாலும் அதிர்ஷ்டமில்லை கோப்பை இவருக்கும் நமக்கும்!

அத்துடன் கிரிக்கெட் என்னும் பொழுதுபோக்கு
விட்டுப்போனது முழுதாய் என்னை போன்றவர்களில்...;

இன்று...

மீண்டும் காலம் களத்துக்கு ஒருவனை
புதுப்பித்து அனுப்பியது
கிரிக்கெட்டில் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும்
ஒவ்வொன்றாய் பூர்த்திசெய்யப்பட்டு
சாதனை மேல் சாதனையாய்
கோப்பைகளை அள்ளித்தந்துவிட்டு
மௌனமாய் ஒதுங்கி நின்று ரசிக்கிறார்
'மஹிந்தர்சிங் டோனி' எனும் பெயர் கொண்ட
அந்த மின்னல் வீரர்...!


-மன்னை சுரேஷ்

எழுதியவர் : (21-Feb-20, 6:57 pm)
பார்வை : 65

மேலே