சிரிப்பதற்கு விலை ஏது

மரத்தடியில் ஜமுக்காளம் விரித்து
நான்கு பக்கங்களிலும் கல்லை வைத்து
தனக்கான இன்றைய வீடு இது என்று
ஒதுங்கிய கூட்டம் கண்டேன்.

நிரந்தர வருமானம் இன்றி,
நிரந்தரமாக வீடு இன்றி,
நிரந்தரம் என்று….ஏதும்,
நிரந்தரமாக இன்றி அவர்கள் வாழும் வாழ்க்கை…
நிரந்தர மற்ற வாழ்கையின் மீது
நிரந்தர தெளிவை தந்தது.

அவர்களுக்கு ஏதும் வருத்தமில்லை
இப்படி பட்ட வாழ்வு அமைந்ததில்.
ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கண்டு
கிடைத்த உணவை சரிபாதியாக பிரித்து
உபசாரங்கள் செய்துக்கொள்ளுகிறார்கள்.

நிச்சயமாக இப்படி பட்ட
உபசாரங்கள் ஒரு போதும் சாத்தியமில்லை,
மேல் மட்ட வீடுகளில்.
பொறாமை படும் அளவிற்கு
அவர்களது அன்பு இருந்தது.

விதியின் சாபத்தால்
வீதியில் இருக்கிறோம் என்று..!
பழி சுமத்தி பட்ட கடனை..என்று வாழ்வை
பாரமாக கருதி ஏதோ என்று இருக்கவில்லை அவர்கள்.

தனக்கு தான் தன் ராஜா என்பது போல்,
தன் வீட்டின் கூரையை வான் நட்சத்திரம்
கொண்டு செய்தது போல்,
இந்த உலகமே தன்னுடைய வீடு
என்று பரந்த பண்பை கொண்டு இருந்தார்கள்.

ஒன்றாய் உணவு உண்ட பின்,
கேளிக்கை ஆரம்பமானது.
அவர்களது சத்தம் விண்ணை கிழித்தது,
அப்படி பட்ட சிரிப்பை இது வரை..
நான் கண்டதில்லை.

அழுக்கேறிய முகத்தில்
இருளில் பளிச்சிடும் ஒளியாய்,
பழுப்பு கரையும் வெண் நிறமும்
ஒன்றாய் கலந்த தன் பல் வரிசையை..!
வானில் விழும் மின்னலாய்
பளிச்சிட சிரித்தார்கள்.

யார் சொன்னது அவர்கள்
இல்லாதவர்கள் என்று…?
எல்லாம் இருந்தவர்கள் கூட
இல்லாதவர்களாக நின்றார்கள்
அந்த சிரிப்பின் முன்பு.

எழுதியவர் : தங்கமாரியப்பன் (25-Feb-20, 3:48 pm)
சேர்த்தது : தங்கமாரியப்பன்
பார்வை : 2653

சிறந்த கவிதைகள்

மேலே