கடுங்காற்றும் கடுநட்பும்

பிறவாநெறி காட்டியார் என்றொரு தமிழ் அறிஞர். அவரும் காளமேகத்தின் கவித்திறத்தைக் காண எண்ணினார். “கடுங்காற்று மழைகாட்டும்; கடு நட்புப் பகை காட்டும்" என்ற உலக வசனத்தை இறுதியிலே அமைத்து ஒரு வெண்பா சொல்வீராக என்றார்.

நேரிசை வெண்பா

நீரோ பிறவா நெறிகாட்டி யாரெமக்கு
நீரோ சமிசை நிலையிட்டீர் – நீரோயிவ்
விங்களமேன் செய்தீர் விடுங்கடுங்காற் றும்மழைகாட்
டுங்கடுநட் புப்பகைகாட் டும். 42

– கவி காளமேகம்

பொருளுரை:

பிறவாத தன்மைக்கு உரிய வழியினைக் காட்டிய ஞானவான் என்பவர் நீர் தாமோ? எனக்கு இப்படிப்பட்ட சமிசையை ஏற்படுத்தியவரும் நீர்தாமோ? இத்தகைய வேறுபாட்டை எதற்காகச் செய்தீர்? இனியேனும் விட்டுவிடுவீராக; வேகமாக வீசும் காற்று மழையினைக் கொணரும், விரைந்த நட்பு (ஆராயாது விரைந்து கொள்ளும் நட்பு) பகையினைக் கொண்டு வந்துவிடும்.

பிறவா நெறி காட்டியார் என்ற பெயரினைக் கொண்டு அவர் அதற்கேற்ப அகந்தை அற்றவராக விளங்க வேண்டிய தாயிருக்க, சமிசை கொடுத்து அகந்தை கொண்டாராதலினால், இப்படிப் பாடி அவரைத் தலைகவிழச் செய்தனர் கவிஞர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Feb-20, 9:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 88

மேலே