பரீட்சை

1987
மூணாம் வகுப்பு "ஏ" பிரிவு, மெயின் ரோட்டை ஒட்டி இருந்த சிதிலமடைந்த மதில் சுவர்களுக்கு மத்தியில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆலம் செடிகள் சுவர்களில் முளைத்த ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் கட்டிடங்கள் வெள்ளை சாயம் போன பழுப்பு நிறத்தில், அந்த கிராமத்தின் அடுத்த தலைமுறைகளுக்கு வெளிச்சம் காட்டிக்கொண்டிருந்தது.நடுவே இருந்த கம்பத்தில் மூவர்ணக் கொடி நிமிர்ந்து பறக்க காற்றை தேடிக்கொண்டிருந்தது. காக்கி டவுசர் பையன்களும், நீல பாவாடை பெண்களும் அங்குமிங்குமாக
முழு ஆண்டுத்தேர்வு மும்முறத்தில் பரபரத்து கொண்டிருந்தனர். தலைமையாசிரியரின் அறைக்கு நேர் எதிராகத்தான் அவனின் மூனாம் வகுப்பு A பிரிவு. வாசலை ஒட்டி இருந்த தூணில் சம்மணங்கால் இட்டு சாய்ந்து அமர்ந்திருந்த அவனின் கண்கள் அடிக்கடி தலைமையாசிரியர் வாசலில் தொங்கிக் கொண்டிருந்த அந்த தண்டவாள துண்டை பார்த்துக்கொண்டிருந்தது. நெற்றியில் வழிந்த வியர்வை துளிகளை அடிக்கடி புறங்கையால் துடைத்துக் கொண்டான் பிளாஸ்டிக் ஒயர் களால் பின்னப்பட்ட கூடையை மடிமீது வைத்து அதன்மீது இருந்த புத்தகத்தை மயங்கிய கண்களால் மேய்ந்துகொண்டிருந்தான்.குனியும் போது எல்லாம் எட்டிப்பார்த்த சளியை முடிந்தவரை தலையை உயர்த்தி மூக்கை உறிஞ்சிக் கொண்டான். அம்மா சட்டையில் குத்தி விட்ட கைக்குட்டை இன்னும் நனையாமல் அப்படியே இருந்தது. பள்ளிக்கூட வாசலில் ப்யூன் சின்னச்சாமி அண்ணனின் சைக்கிளை கண்டதும் மயங்கிய கண்களில் மேலும் இருட்டாக தெரிய ஆரம்பித்தது. சைக்கிளை நிறுத்திவிட்டு சின்னச்சாமி தலைமையாசிரியர் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அப்போதுதான் புறப்பட்டிருந்த ரயில் இன்ஜின் போல அவனது இதயமும் மெல்ல துடிப்பு உயர்த்த ஆரம்பித்தது. அவர் தண்டவாள கட்டையை நெருங்க நெருங்க இவனது இதயத்துடிப்பு பாலத்தின் மீது கடக்கும் ரயில் வண்டியின் ஓசையைப் போல தடதடக்க ஆரம்பித்தது,அப்பாடி அவர் பெல்லை அடிக்காமல் தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழைந்து விட்டார். பொதுவாக பள்ளிகள் துவங்குவதும், பரீட்சைகள் நடப்பதும் பெல்லை அடித்து விட்டு, வினாத்தாளை கொண்டு வந்து கொடுக்கும் இந்த ப்யூன்களால் தான் என்பது அவனது கணிப்பு." சின்னச்சாமி இன்னைக்கு லீவா இருக்கணும் அப்படின்னு முருகர்கிட்ட வேண்டினது வீணா போச்சு". வெளியே வந்த சின்னச்சாமி தண்டவாளத்தை இரும்புக்கம்பியால் அடித்தது இவன் மண்டைக்குள் நங் என்று இடித்தது போல உணர்ந்தான்."அப்ப இன்னைக்கு பரீட்சை கண்டிப்பா எழுதியே ஆகனுமே என்ற எண்ணம் சளியோடு சேர்ந்து இன்னமும் தலையின் எடையை அதிகரித்தது.ஒரு அடி உயரமே உள்ள அந்த பெஞ்சின் ஒரு ஓரத்தில் அமர்ந்து ,கூடைப்பையின் உள்ளே இருந்த பரீட்சை அட்டை ,ஜாமண்டரி பாக்ஸ் யை எடுத்து அருகில் வைத்துக் கொண்டான்.ஜன்னல் வழியே தெரிந்த தண்டவாளக்கட்டையை பார்த்து கண்களை மூடிக்கொண்டான் "ப்யூன் அண்ணா திரும்பவும் பெல்ல அடிச்சி ஸ்கூலுக்கு லீவு விட்டறனும் முருகா". கண்களை திறந்த போது சண்முகம் சார் எதிரில் நின்றிருந்தார்."துரைக்கு காலைலேயே தூக்கமா?.பரீச்சை பேப்பர் வரட்டும் பாத்துக்கறேன்". சளி ஒழுகுவது நின்று போய், முகம் முழுவதும் ஒழுக ஆரம்பித்தது வியர்வையாய். சண்முகம் சாரோட பிரம்புக்கு படித்தவன், படிக்காதவன் என்கிற வித்தியாசம் தெரியாது ஆன ஒழுக்கமான பசங்க, குறும்பு பண்ற பசங்க என்கிற வித்தியாசம் நல்லா தெரியும்.. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரைக்கும் அந்த பிரம்புக்கு தப்பின bad boys,girls யே கிடையாது.விடைத்தாளை கையில் கொடுத்துவிட்டு அடுத்த ஆளிடம் நடையை கட்டினார்.ஜாமெண்டரி பாக்ஸை மெல்ல திறந்து,நான்காய் மடிக்கப்பட்டிருந்த முருகன் படத்தை எடுத்து கண்களில் ஒத்திக் கொண்டான்.பென்சில்,லப்பர்,ஷார்பினாரை எடுத்து அருகில் வைத்துக் கொண்டான்.கொஸ்டீன் பேப்பர் பார்த்து அரைப்பக்கம் தான் எழுதி இருப்பான்,காதுகளுக்கு பக்கத்தில் அரை டஜன் வண்டுகளின் ரீங்காரம்,கண்களுக்கு முன்னே கலர் கலராய் குட்டிப் பூச்சிகள் நாட்டியம்..திடீரென" என்ரா பண்ணுது கண்ணு ?",என்ற குரல் அவைகளை விரட்டி அடித்தது.அரை மயக்க நிலையில் இருந்த என்னை தண்ணீ பாட்டிலை ஒரு கையில் வைத்துக் கொண்டு, ஒரு கையால் உலுக்கிக் கொண்டிருந்தார் சண்முகம் சார்."காய்ச்சல் சார்" என்று சொல்ல வாய் எடுத்தான்,மேல் எழும்பிய நாக்கு அப்படியே மேல் அண்ணத்தில் ஒட்டிக் கொண்டது,வறண்ட உதடுகள் பிரியமறுத்தன.கழுத்திலும் ,நெற்றியிலும் தொட்டுப் பார்த்தார்,ஏப்ரல் மாத வெக்கையிலும் அவரின் கை ஐஸ் போல சில்லுன்னு அவனுக்கு இருந்தது."சின்னசாமி இங்க வா " என்று கூவி அழைத்தார்."காய்ச்சல் கொதிக்குது,இந்த பயல வீட்டுல விட்டுறு", ப்யூன் அவனை பார்த்தவாறு" சார் இது நம்ம பெருமாள் வாத்தியார் மகனுங்க"..என்றார்.என்ன நினைத்தாரோ சண்முகம்" நானே கொண்டுபோய் விட்டுறேன்,தனலட்சுமி டீச்சர க்ளாஸ பாத்துக்க சொல்லு" என்றவாறே அவனை தூக்கிக் கொண்டார்.பின்னாடி இருந்து முருகேசு கையை உதறி சைகை செய்தான்" பரீட்சை எழுதலனா நீ மறுபடியு மூணாங்கிளாஸ் தான்"..பயம் பற்றிக் கொண்டது."கார்த்தி,அப்துல்,முருகேசு,ரம்யா,தீபா எல்லாரும் நாலாம்பு போயிருவாங்க..நானு...".காய்ச்சலை விட பெயில் என்ற பயமே அவனை மௌன கண்ணீராக்கியது. தனது புதிய டிவிஎஸ் மொபட்டில் உட்கார வைத்து ,வீட்டில் விட்டவர் , "இவ்வளவு காச்சல்ல ஏனுங்க அனுப்புறீங்க,சரியானதுக்கப்புறம் அனுப்புங்க ,பரீச்சையெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்" ..என்றுவிட்டு சென்றார்.அப்படின்னா என்ன அர்த்தம்னு புரியலயே..அடுத்து வந்த இரவுகள் எல்லாம் முருகனை கூப்பிடுவதிலேயே போனது.."முருகா முருகா எப்படியாவது பாஸ் ஆக்கிடு"..மே மாத வெய்யிலை விட கடுமையாக சுட்டது முருகேசு சொன்னது" டேய் நாளைக்கு ரிசல்ட்டு டா,எங்கப்பா சொன்னாரு.." அவன் சொன்னா கரக்டா தான் இருக்கும் ஏன்னா அவங்கப்பா தான் ஹெட்மாஸ்டர் ஆச்சே.."டேய் நான் பாஸாடா".."அதெல்லாம் தெரியாதுடா ,ஆன பரீச்சை எழுதலன பெயிலுனு எங்கப்பா சொன்னாரு,வரண்டா..ப்ரூரும்ம்ம்"..வாயால் புல்லட்யை கிளப்பியவாறே மறைந்து போனான்."ப்ரூம்ம்ம்ம்ம்" என்ற சத்தம் இரவு முழுவதும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.காலையிலையே அம்மா " நீயேல்லாம் ஏண்டா ரிசல்ட் பாக்க போற,உனக்கு தெரியாதா??"..அடிவயிற்றில் கடமுடா சத்தம்,மறுபடியும் காட்டுக்கு போகனும் போல இருந்தது,வெளியே முருகேசு " டேய் நாமல்லாம் பாஸூஉஉஉ"..என்று உஊளையிட்டவாறே ஓடிவந்தான்." நிஜமா பாத்தியா?..என்றான் இவன் நம்பாமல்.."அப்படின்னா நீயே போய் பாத்துக்க." என்று மீண்டும் வாயால் புல்லட்டை கிளப்பினான்.ஹெட்மாஸ்டர் அறை முன்னே ஒரே கூட்டம்,அனைவரையும் முண்டிக்கொண்டு தலையை நீட்டிப்பார்த்தான்..ஜன்னலுக்குள்ளே தெரிந்தது முருகனின் பாஸ்.பள்ளி திறந்த முதல் நாள் நாலம்ப்பு C பிரிவின் வாசலில் சண்முகம் சார்.ஆர்வமுடன் அவர் அருகே ஓடினான்,"எப்படிறா கண்ணு இருக்கற? உடம்புக்கு பரவாயில்லயா?"."சார் நான் பாஸாயிட்டேன்".."ஆமாம்டா உன்ற காலாண்டு ,அரையாண்டு மார்க்க கூட்டினா சராசரி தொண்ணூறு வந்துட்டுது அதான் பாஸ போட்டுட்டோம்"..சரி கிளாஸுக்கு கிளம்பு" என்றார்.அது வரைக்கு இருந்த உற்சாகம் புஸ் என வடிந்தது,பஞ்சரான டயர் போல..
"அப்ப பாஸ் வாங்கிக் கொடுத்தது முருகன் இல்லையா"...பிற்காலத்தில் தான் தெரிந்தது..முருகனின் வேறு பெயர்களில் ஒன்று சண்முகம் என்று..
#2020
அந்த பெண்ணுக்கு 102 டிகிரி சுரம் நெருப்பாய் கொதித்தது,மருந்துகளையெல்லாம் எழுதிகொடுத்துவிட்டு
" நாளைக்கு லீவு எடுக்க சொல்லிடுங்க,ரெஸ்ட் எடுக்கட்டும் " என்றேன்..
ஐயோ டாக்டர் நாளைக்கு EXam இருக்கு கண்டிப்பா போகணும்" என்றார் அவள் தாயார் ..
" ஏங்க இன்னைக்கு தான் ஸ்கூல் ஆரம்பச்சிருக்கு அதுக்குள்ள EXAM ஆ???..
"ஆமா சார் Pre Final modal exam ,போகலைணா அப்புறம் Fine போடுவாங்க. .
." ஏங்க school க்கு போணதுக்கு அப்புறம் fever அதிகமான என்னங்க பண்ணுவீங்க??,..
"அதுக்கு தான் SICk room இருக்கு அங்க படுக்க வச்சுடுவாங்க"..வீட்டு இருந்த subject கண்டினியுட்டி போயிடுமில்லே""." "உங்க பொண்ணு என்ன படிக்குதுங்க?
" LkG படிக்கறா...CBSC syllabus.
இது அந்த குழந்தைக்கு தெரியுமா?

எழுதியவர் : Senthilsamrat.Dr (3-Mar-20, 9:32 pm)
சேர்த்தது : Senthilsamrat
Tanglish : pareetchai
பார்வை : 247

மேலே