சிகப்பி
==============================
இப்ப விடிகாலே நாலு மணி இருக்கும். அட அஞ்சு மணி கூட ஆகி இருக்கலாம்.
வெள்ளையன் கீச் கீச்னு பசியில் அழுத சத்தம் கேட்டதே... கனகா புது தட்டில ஆவினு பால் வச்சு வெள்ளையனுக்கு இப்போது ஊற்றுவாள்.
அவளோட மடி மீதும் மார் மீதும் அவன் தாவித்தாவி விளையாடும் அழகு என்ன? ஊரார் அதை கண்டு கண்டு மெச்சி களிப்பதென்ன... அவன் என்னை மாதிரி இருக்க மாட்டான். ஒடம்பெல்லாம் ஒரே ரோமம்... வெள்ளையா...பஞ்சு பஞ்சா இருக்கும்.
அப்ப ரெண்டுமணி இருக்கும்னு நெனைக்கேன்.
விலுக்கென்று அடிவயிற்றில் வலி சுருண்டபோது தூக்கி வாரி விழிச்சுக்கிட்டேன். ஊசி வலி நெஞ்சுக்கும் வவுத்துக்கும் மத்திலே பொணங்கனமா நின்னு கெடந்திச்சு. முன்ன பின்ன இந்த வலி வந்தது இல்லை.
நேற்று என்ன சாப்டோம்னு நினைச்சு பார்த்தேன். தெரியவில்லை.
வழக்கம்போல் கவருமெண்ட்டு சாக்கடைக்குள் இறங்கித்தான் வவுறு முட்ட சாப்ட்ட நினைப்பு.
அங்கதான் அறுத்த எல்லா மிச்சமும் கொட்டுவார்கள். அதில் வாய் வைக்க விவரமா இருக்கோணும். என்ன ஏதுன்னு பிரிச்சு பாத்து திங்கோணும்.
போன வருஷம் காடையன் இப்படி இல்லாதைக்கி வெவரெங்கெட்டு விசத்தை தின்னு செத்தே போனான்.
போகப்போக விவரம் பழகி நானும் ஆட்டு எலும்பை கவ்விக்கிட்டு வேக வேகமாக நொறுக்கிட்டே ரோட்டுல ஓடற வண்டில மாட்டிக்கிறாமே லாவகமா ஓடி இன்னொரு சாக்கடைக்குள் புகுந்து அம்புட்டும் முழுங்கிறுவேன்.
ஆனா இந்த நோவு நேத்து வரைக்கும் வந்தது இல்லை.
🍃🍃🍃🍃🍃🍃
சிவப்பினு கருப்பையா என் நெற்றியை நோக்கி சொல்லி சொல்லி கூப்பிட்டு விழி விரிய பொங்கி பொங்கி சிரித்தான்.
மொதமொதலா அவன் பாலாங்காடு குப்பை மேட்டில் இருந்துதான் என்னை அவங்க வீட்டுக்கு தூக்கினு வந்தான்.
என் அம்மாவுக்கு எந்த அப்பா மூலம் பிறந்தேன் என்று தெரியாது. ஆனால் உடல் முழுக்க சிகப்பும் அடிவயிற்றில் சங்கு வெளுப்பும் இருந்துச்சி. அம்மா என்னை நக்கி கொடுக்கும்போதெல்லாம் நீ ரொம்ப அதிர்ஸ்டகாரிடினு சொல்ற மாதிரியே இருக்கும்.
உடன்பிறந்தான் எல்லாம் பால் குடித்துவிட்டு எங்கெங்கோ வழி தவறி போகப்போக அம்மாவுக்கு அதில் பெரிய கவலையெல்லாம் இல்லை. பிழைத்து கொள்வார்கள் என்று நினைத்தாள்.
என்னை விடவே மாட்டாள். எங்கே சென்று எதை திம்பாளோ, வையறு முட்ட பால் கொடுப்பாள்.
அன்றைக்கு அப்படி போகும்போதுதான்
கிரிஷ்ணசாமி காரு அவ்ளோ வேகத்தில் வந்து விட்டது.
பாவம்... அந்த தொரைக்கு என்ன அவசரமோ தெரிலை. அம்மை தலையை தவிர மொத்த உடம்பும் சள சளன்னு ரோட்லே தண்ணியா ஓடிட்டிருந்துச்சு. அங்கினே ஒரே கூச்சலு குழப்பம்...
என் காதுக்குள்ளே பிய்ங் பிய்ங்னு சத்தம் கேட்டு காது முழுக்க கூச்சமா இருந்திச்சி. ஆனா ஒடம்பு மட்டும் விடாம நடுங்கிட்டே இருந்துச்சு.
கிட்டேக்கபோய் பாக்கிலாம்னா ஒரே கூட்டம்.அம்மையோட ஒடம்பு இல்லியே தவிர தலை அப்டியே முலுசா இருந்துச்சு.
நல்லா கண்ணு விரிச்சி சின்ன ரோஸ் நாக்கு வெளிய அப்பவும் லேஸ் லேஸா நீட்டி நீட்டி உள்ள போச்சு. அம்மை என்னை பாக்குற மாதிரியே இருந்துச்சுன்னா பாருங்க.
கூட்டம் போனபிறவு மெல்ல போனேன். வெயில் காலை பொசுகிச்சு. அம்மே அம்மேன்னு கிட்டக்க போனேன். பால் காம்பு ஒண்ணுமே இல்ல. ஒரே தண்ணி..
ரொம்ப சிவப்பு தண்ணி...கட்டி கட்டியா என்னென்னமோ சுத்தி கெடந்துச்சு. என் நாவால அம்மை தலைய நக்கி விட்டேன்.
அவ எந்திரிக்கவே இல்ல...
பரிதாபம். பரிதாபம் னு ஆரோ சொல்லிட்டே இருக்கரச்ச என்னை ஆரோ வெடுக்குன்னு தூக்கினங்க. கருப்பையா.
கருப்பையா பரிமேலழகர் இஸ்கூலில் ரெண்டாப்பு. அவன் அப்பா ஒரு தச்சு ஆசாரிக்கிட்ட கூலி. அப்படியே என்னை ஒருக்களிச்சு தலையில் சாச்சி அவன் வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டான்.
பொறவு, அம்மையை நான் பாக்கிலை.
நைனா...இந்தா பாரு நாக்குட்டி...பேரு சிகப்பி அப்பிடின்னான். நல்ல செவப்பு கலரு. அதான் சிகப்பி.
நான் என் அம்மையை போல என் குட்டி வாலை விடு விடுன்னு ஆட்டினேன். அல்லாருக்கும் என்னை பிடிச்சி போச்சு.
ஒரு செரட்டைலே கொஞ்சூண்டு தேத்தண்ணி விட்டாக.
அது என்னமோ மாறி இருந்தாலும் அம்மா பால் மாறி இல்ல. கொஞ்சம் வாசனையா இருந்திச்சி. மொத மொதல நான் நக்கி நக்கி குடிச்சேன். யப்பா, அம்மே நெஞ்சுல ஒரு கதகதப்பு இருக்குமே அது இருந்துச்சு.
பின்னாடித்தான் தெரிஞ்சுச்சு அதுப்பெரு
சூடு ன்னு...
ரெண்டு நாள்தான் இருந்தேன். அப்போ பால் என்ன பிசுகோத்து என்ன. அல்லாம் குடுத்தாக.
ரெண்டு நாள் கழிச்சு கருப்பையாவோட நைனா என்கூட தா...பா..ப்ச்..ப்ச் னு கூட்டு கூட்டு வேடிக்கை காட்னாரு. அப்படியே தூக்கி என்னை மடிலே போட்டு கொஞ்சிட்டு பின்னாடி சாஞ்சுக்கிட்டே மார்லே போட்டுக்கிட்டாரு.
என் வாய்க்குள்ள விரல் விட்டு கடிடியோவ் கடிடியோவ் னு சொல்லி என் காதை மெல்லமா நிமிண்டினாரு.
அவ்ளோதான்.
என் காதுக்குள்ளிருந்து வெள்ளையா ரெண்டு புழு வந்திச்சி. பாத்து பதறி சே...புழுத்த களுதே னு சுவராண்டே விசிறிட்டாரு. என்ன நெனச்சாருன்னு தெரிலே. ஒரு சேரட்டைலே ரெம்ப பால் விட்டு குடிக்க வச்சிப்போட்டு என்னை தூக்கிக்கினார். அப்ப நான் ரெண்டு ஏப்பம் வேற விட்டேன்.
அவரு திரும்பவும் பாலங்காடு குப்பை மேட்ல என்னை விட்டுட்டு போயிட்டாரு.
என் அம்மை நெனப்பு நெஞ்சுக்குழிலே கெடந்து அடிச்சிக்குது. அம்மே னு கருப்பையா னு கத்தி கத்தி பாத்தேன்.
தொண்டைதான் வத்திப்போச்சு.
அப்புறம் அந்த கனகா அக்கா ஒரு ஓட்டை பீங்கான் தட்டுலே கொஞ்சூண்டு பால் விட்டிச்சு. அவுங்க வீட்டுல ஒரு பொஸு பொஸு நாய்க்குட்டி இருக்கும். அவனை நான் வெள்ளையன் னு சொல்வேன். அந்த அக்கா சீசர் னு சொல்லும்.
அது பிதுக்கிறி பிசுகொத்து அல்லாம் துன்னும். நெதைக்கும் குளிக்கும். அது மூத்திரம் பீ போக வந்தாக்கூடியும் நான் இருக்கிற எடத்தாண்டே வந்து இருந்துட்டு போகும். அப்பெல்லாம் அது மேல ரெம்ப வாசமா இருக்கும். களுத்திலே டை எல்லாம் கட்டி இருக்கும்.
நானும் வெயிலு மலே குலிரு ன்னு வளந்து நின்னிட்டேன். எந்தாயி கருவாச்சி என்கூடயே இருக்கிரதா நெனச்சி வளந்துட்டேன்.
ஐயோ...அம்மே.. இப்ப இந்த பாழாப்போன வலி உசுரே சுருட்டி சுருட்டி எடுக்குதே.
மூத்திரம் போறே இடத்துல ஒரே அரிப்பா இருந்திச்சி. ரோட்டு லைட்டு வெளிச்சத்தில் பாத்தா பொட்டு பொட்டா ரத்தமா கெடக்கு. என்ன இதுன்னு புரியவே இல்ல... என்னமோ வடியிர மாறி இருக்கு. அப்படியே நிக்கிற மாதிரி இருக்கு. விலாகிட்டே கொருக்கு கொருக்குன்னு சொறிஞ்சேன். நல்லா நின்னுக்கிட்டு படப்படான்னு சிலும்பினேன்.
அம்புட்டுத்தேன்.
பொத்துன்னு சரிஞ்சிட்டேன்.
வவுத்துக்குள்ளே இன்னா போச்சு இன்னா இருக்குன்னு தெரிலே. லெக்கு பாத்து கால எடுத்து வெக்க முடிலே. தலைக்குள்ளே ரொயிங் னு ஒரே குடைச்சல். வால் கிட்டே சொட்டு சொட்டா ரெத்தம் விளுது. மறுக்கா மண்டை சுத்துது. இன்னா செய்வேன் நான்.
பொச்சை தேச்சுட்டே எந்திரிச்சி நிக்க பாக்கேன்... முடிலே. வெசத்துலே வாய வச்சிட்டேனா னு தெரிலே.
கண்ணு ஒளுகுது. பீளைய நகத்துல வழிச்சிப்போட்டு நக்கிட்டு வாலை தரைல போட்டு சடசடன்னு அடிக்கிறேன். எட்டி பாக்க ஈக்குஞ்சு நாதியில்லே.
அம்மே னு கதறணும் போல தவிக்குது மனசு. வாய் வரலியே. என்னமோ வழியுது வாய் வழியா. புகை வாடை வயித்துல இருந்து வருது. ஆத்தி... எலி மருந்தை வச்சிட்டானுவ போல இருக்கே னு திக் திக்குன்னு இருக்கு.
வாய் காயுது. நெஞ்சு எரியுது. மெல்ல நவந்து சாக்கடைக்குள்ளாறே போய் விளுந்திட்டா கொஞ்சம் தண்ணிய நக்கி தொண்டையை நனைச்சிப்பிடலாம்னு நினைச்சா காலு நகரலையே ராசா...
என்ன பண்ண போறேன்?
தரை வேற வெளுக்க ஆரம்பிக்கி. எல்லா
நாய்க்கும் ஒரு கருப்பு நாள் இருக்கும் னு அம்மையை அடிச்சிபோட்ட கார்காரரு அன்னிக்கு சொல்லிட்டு இருந்தாரு. எனக்கும் அது வந்திரிச்சி போல இருக்கே.
இந்தா வெயிலு முட்டிக்கிட்டு இருக்கு. நாக்குலே நாலு சொட்டு தண்ணி விலுந்திட்டா ஒரு குலை குலைச்சிட்டு நின்னுக்கிட முடியும்னு தோணுது.
எப்படி கேப்பேன்? ஆருக்கு புரியும்?
பேங் பேங் னு சத்தம் கேக்கி. இஸ்கூல் பஸ்ஸு வந்திரிச்சி. நான் இப்ப நிக்கிறாப்புலே மாதிரித்தான் இருக்குன்னு நெனெக்கேன். ஆனா செவத்த வாழுதான் டொப்புடொப்னு தரேலெ தட்டிட்டு இருக்கு.
ஒம்போது மணிக்கி முனிசிபாலிடி குப்பை வண்டி வந்திரும். ஏத்தி விற்றலாமும்ன்னு கறிக்கடை பாய் சத்தமா சொல்றது எங்காதுலே கேக்குது.
யையா...இம்புட்டு தண்ணிய எம் மூஞ்சிலே சேந்தி விடுங்க ஓடிர்றேன் னு சொல்லிட்டு இருக்கற மாதிரி தோணுது.
சின்ன ஊளை கூட விட முடிலே.
பொறவு பேசாம இருந்துக்கிட்டேன். தொண்டை குழி விக்கி விக்கி எடுக்குது.
நாக்கு ரப்பராட்டம் மேலே ஒட்டிக்கிச்சு. வவுத்துக்குள்ளே வலி நின்னு கட கடன்னு பொறுமிட்டு இருக்கு. பீ வெளியே பிச்சிட்டு போற மாதிரி இருக்கு. வால் முழுக்க ரெத்தம் உறைஞ்சு கிடக்கு.
அம்மே, நான் சடங்காயிட்டேன்னு சொல்லணும் போல இருக்கு. எப்படி ஆருக்கிட்ட சொல்ல.. வண்டித்தெரு ராமர் வீட்டு சிப்பிப்பாறையான் எம்பின்னாடி நின்னு மோந்து மோந்து பாக்கான். வாலை தூக்கி ஒரு தட்டு தட்டினேன்.
ஆரோ உஸு உஸு னு அவனை விரட்டிப்புட்டாக. என்ன செய்யலாம் னு ரோசனை பண்ணிட்டே கெடந்தேன்.
மேலே கொஞ்சம் காகிதமும் வெக்கபிரியும் ஆரோ போட்டாக. புரிஞ்சு போச்சு. முனிசிபாலிடி குப்பை வண்டி வந்துட்டு இருக்கு.
வந்திரிச்சி.
கனகா அக்கா ராசேந்திரனை கூப்பிட்டு கையிலே ருவாய் நோட்டும் ரெண்டு கிலிச துணியும் கொடுத்தாக.
அக்கா அக்கான்னு கூப்பிட்டேன்.
ஆனா, ராசேந்திரன் என்னை சுளுவா தூக்கி ஒரு விஸ்பெர் மூட்டை கிட்டே வச்சிட்டாரு.
நான் உசிரோடத்தானே இருக்கேன்.
உங்களுக்காச்சியும் எங்கொரலு கேக்கா?
=============================