சுடும் நிஜம்

தண்ணீரில் மீன் ஒன்று
தத்தளித்து அழுகிறது
கண்ணீரும் தெரியவில்லை
காரணமும் புரியவில்லை
கடமையை செய்தபோதும்
கண்டுணர்ந்தோர் எவருமில்லை
காலங்கள் மாறுமென்று
கருதியதால் வந்த தொல்லை
வாழ்வதனை சுவைத்திடவே
வரம்தனையே கேட்டிடினும்
வையகத்தில் அதுபோன்ற
வரமின்னும் கிடைக்கவில்லை
சுவையில்லா வாழ்வு இது
சுமையாகவே தோன்றிடுது
சொர்கமும் நரகமும்
சொற்பத்திலே மாறிடுது
சொந்தமும் பந்தமும்
சோதிக்கவே துடிக்குது
சோதனைகள் வென்றிடவே
சோர்வில்லாமல் யோசிச்சு
மூளையெல்லாம் சூடாச்சு
மூச்சு முட்டி நின்னாச்சு
கண் எட்டும் தூரம்வரை
கதிர் வெளிச்சம் காணலையே
கனவென்று நான் நினைத்த
காட்சிகளும் மாறலையே
தினந்தோறும் பொன்மொழிகள்
திசையெங்கும் தத்துவங்கள்
திரும்பிய பக்கமெங்கும்
தீர்க்கத்தரிசிகளின் யோசனைகள்
எவற்றைக் கேட்பது
என்றெதுவும் புரியாமல்
தொடங்கிய இடத்திலேயே
தொடருது பயணங்கள்
இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
இதுநாள்வரை கடந்தபின்னும்
எதுவும் கடக்கவில்லை
எண்ணங்கள் மாறவில்லை
இன்றென்ற நிஜமொன்றே
இப்போதும் சுடுகிறது...

எழுதியவர் : திருமகள் (6-Mar-20, 5:07 pm)
சேர்த்தது : திருமகள்
Tanglish : sudum nijam
பார்வை : 140

மேலே