17 பிறப்பு இறப்பு இல்லாப் பெரியோனை வாழ்த்து - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 1

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

ஆதியீ றில்லான் றன்னை
..அமைத்தகா ரணமொன் றில்லான்
கோதிலான் கணத்து ளண்டங்
..கோடிசெய் தழிக்க வல்லான்
ஓதிடு மொப்பொன் றில்லான்
..உருவிலான் இருவிண் டங்குஞ்
சோதிதன் னிழலாக் கொண்ட
..சோதியைத் துதியாய் நெஞ்சே. 1

- தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
-மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

“முதலும் முடிவும் இல்லாதவன். தன்னை உருவாக்கிய காரணம் ஒன்றும் இல்லாதவன். குற்றம் ஏதும் இல்லாதவன்.

நொடிப் பொழுதில் இவ்வுலகில் கோடி உயிர்கள் முதலான அனைத்தையும் படைத்து ஒடுக்கும் வல்லமை உடையவன்;

வேறொன்றுடன் சொல்ல ஒப்பில்லாதவன். உருவில்லாதவன். இருள் நீக்கி பரவெளியில் தங்கும் ஒளி நிழலான பேரொளியை நெஞ்சே வணங்கு” என்கிறார் இப்பாடலாசிரியர்.

கோது - குற்றம். கணம் - நொடி. விண்டு - நீங்கி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Mar-20, 2:46 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே