நோயல்ல மருந்து நீ
இயற்கை மருத்துவரிடம்
முறையிட்டது பூமி..!
புதுவித வியாதி புகுந்து
ஆட்டி வைக்கிறதெம்மை..!
"புதுவித வியாதியா..?"
புருவம் உயர்த்தினார் மருத்துவர்.
"ஆம்..!"
கண்ணீர் கசிந்தது
அந்நீரும் கறுத்திருந்தது.
"வரலாறு கூறு
விடை தேட முயற்சிப்போம்"
மிருதுவாய் மிளிர்ந்த
வெளித்தோளோ இன்று
வெந்து அவிந்து
வெறும் தழும்பானதும்
என் சுவாசக் காற்றெங்கும்
புகையேறிப் போக
மூச்சுமுட்டிக் கொண்டதும்
நீராலான தேகத்தில்
தேக்கிய அசடுகளை
அழிக்கவியலா ஆதங்கமும்
மூச்சே வீச்சமெடுத்த அவலமும்
சின்னஞ்சிறு
விலங்கு உண்ட மிச்சமோ
பறவையின் எச்சமோ
எப்படியோ
நிறைந்த என் கருப்பை
கருவறுக்கப்பட்டதும்
கண் முன்னே என் பிள்ளை
அங்கம் சிதைந்து கிடந்ததும்
பெருமூச்சு...
மூச்சுவழி
தூசுக்கள் பறந்தது..!
"உம்நோயின் காரணி
கண்டறிந்தேன் கேள்..!!!"
அது
நீயிட்ட பிச்சையில் பிறந்தது
நன்றி கெட்ட நல்லவன்
நீ அழகாய் அடுக்கிய அணுக்களில்
அடிவைத்து முளைத்த
மூலக்கூறுகளெனும்
மெல்லிய நூலில்
உயிரணு கோர்த்தே
தைத்த திசுவாகி போர்த்திட
உறுப்பென உயிரெடுத்து
உன் உயிர் குடிக்கும்
உன் பிழையில்
பிழைத்தவன்
சுயநலக்காரன்
உன்னை உறிஞ்சி
தன்னை வளர்த்தவன்
தோல் பொருளுக்கென
உன் தொண்டை சதையை
தோண்டி எடுத்தவன்
அலங்காரத்திற்கு
இறக்கை மயிர்களை
அறுத்து வீசியவன்
தன் இருக்கைக்கு
உன் இருப்பை
கொளுத்தியே அழித்தவன்
தரையில் அமர
சோம்பல்பட்டு
உன் நரம்பெடுத்து
நாற்காலி அமைத்தவன்
அவனை அழிக்க
மருந்தினை
அளிக்கிறேன்
வா..!
இனி..
உன் சுவாசம்
மாசு படுத்தியவன்
சுவாசிக்கும் காற்றெல்லாம்
மருந்து கலந்திருக்கும்
உனை வறண்டிட விட்டவன்
நுரையீரல் வறண்டு
நா பசை வற்றிப் போக
நான் மருந்து தருகிறேன்
வெப்பக் கரத்தால்
உன் தொண்டை
நெறித்தவனின்
தொண்டை கவ்விட
மருந்தளிக்கிறேன்
இரைச்சலால்
உன் செவி அழித்தவன்
இருமியே குரலிழக்க
நான் மருந்து தருகிறேன்
உம் பிள்ளைகளின்
சுதந்திரம் பறித்தவனை
என் மருந்தால்
சிறை பிடிக்கிறேன்
பணத்தை பிரதானமாக்கி
உனை மலடாக்கியவனை
மரணபயத்தில்
மதியிழக்க வைக்கிறேன்
கொஞ்சம் கொஞ்சமாய்
உனைக் கொல்லும்
கொடிய நோய்க்கு
"மனிதனென்று பெயர்"
அந்நோயழிக்க
நானளித்த
மருந்துக்கு
வைரஸென்று பெயர்..!!
அந்நோய்
தனை புதைக்க
உனைத் தேடி வரும்
இனியும்
இடமளிக்காதே..!
மருந்தளித்து
விடைபெற்றது
இயற்கை..!
மரணபயத்தில்
உறைந்தது
மானுடம்..!!