காத்திருப்போம் விடைகாண
காத்திருப்போம் விடைகாண !
----------------------------------------------------
இதயத்துக் கரையோரம்
ஒதுங்கிடும் எண்ணங்கள்
தங்கிடும் விருப்பமின்றி
கரைந்துப் போகின்றன
விரைந்து மறைகின்றன ....
உள்ளத்தில் தோன்றும்
வார்த்தைகள் யாவும்
வீணாய்ப் போகின்றன
விழலுக்கிரைத்த நீராக
நொடியில் மடிகின்ற
விட்டில் பூச்சிகளாக ....
நிலவிடும் சூழலால்
உலவிடும் வைரசால்
பரவிடும் வீரியத்தால்
கருப்பொருள் மறக்கிறது
உருத்தெரியாமல் ஆகிறது ....
சோதனைக் காலமென்றும்
வேதனையின் உச்சமென்றும்
ஆய்வுகளின் கசிவென்றும்
ஆயுதமில்லா போரென்றும்
அகிலமெங்கும் பேச்சாகுது ....
முடிவும் வந்திடுமா
தெளிவும் பிறந்திடுமா
இயல்புநிலை திரும்பிடுமா
மானிடம் பிழைத்திடுமா
காத்திருப்போம் விடைகாண !
பழனி குமார்
01.04.2020