குமரேச சதகம் - இவர்க்கு இவர் தெய்வம் எனல் – பாடல் 8

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆதுலர்க் கன்னம் கொடுத்தவர்க ளேதெய்வம்;
அன்பான மாணாக்கருக்(கு)
அரியகுரு வேதெய்வம்; அஞ்சினோர்க் காபத்(து)
அகற்றினோனே தெய்வமாம்;

காதலுறு கற்புடைய மங்கையர் தமக்கெலாம்
கணவனே மிக்கதெய்வம்
காசினியில் மன்னுயிர் தமக்கெலாம் குடிமரபு
காக்கும்மன் னவர்தெய்வமாம்

ஓதரிய பிள்ளைகட்கன் னைதந்தை யர்தெய்வம்
உயர்சாதி மாந்த(ர்)யார்க்கும்
உறவின்முறை யார்தெய்வம் விசுவாசம் உள்ளபேர்க்(கு)
உற்றசிவ பக்த(ர்)தெய்வம்

மாதயையி னாற்சூர் தடிந்தருள் புரிந்ததால்
வானவர்க்குத் தெய்வம் நீ
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 8

- குருபாததாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு மலைமேவு குமரேசனே!

இரப்பவர்க்கு உணவு கொடுத்தவர்களே தெய்வம், அன்புடைய மாணவர்க்கு அருமையான ஆசிரியரே தெய்வம்' அச்சமுற்றவர்கட்கு அந்த அச்சத்தை நீக்கியவனே தெய்வம் ஆவான்,

அன்பும் கற்பும் உடைய மாதர்களெல்லோருக்கும் அவரவர்களுடைய கணவரே சிறந்த தெய்வம்; உலகில் நிலையான உயிர்களுக்கெல்லாம் அவர்களுடைய குடியை வழிவழியாகக் காக்கும் அரசர்கள் தெய்வம்,

சொல்லுதற்கு முடியாத (சிறப்புடைய) சிறுவர்களுக்குத் தாயுந் தந்தையும் தெய்வம், உயர்குடி மக்களெல்லோருக்கும் உறவினர்கள் தெய்வம், சிவபிரானிடம் அன்புடையவர்களுக்குச் சிவனார் அடியவர்கள் தெய்வம்,

வானவரிடம் கொண்டுள்ள பேரருளினாலேயே சூரனைப் பிளந்து அருள் செய்ததால் வானவர்க்கு நீயே தெய்வம்

அருஞ்சொற்கள்:

ஆதுலர் - பிச்சையெடுப்பவர்கள்; தடிந்து - பிளந்து, சூர் - சூரபதுமன்.

கருத்து:

பிச்சை யெடுப்பவருக்கு உணவளிப்பவரும்,
மாணவர்கட்கு ஆசிரியரும்,

அச்சமுற்றவர்களுக்கு அந்த அச்சத்தைப் போக்கினவரும்,
பெண்களுக்குக் கணவரும்,

குடிகளுக்கு மன்னவரும், மக்களுக்குப் பெற்றோரும்,
மாந்தர்களுக்கு உறவினரும்,

சிவநெறியிற் செல்வோருக்குச் சிவனடியாரும்,
வானவருக்கு முருகனும் தெய்வமாவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Apr-20, 3:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 45

சிறந்த கட்டுரைகள்

மேலே