எப்படி வரவேற்பேன் நான்
============================
நீர் வரி கட்ட முடியாமல்
வரிவரியாய் வழிந்தோடுகிறது
எங்கள் கண்ணீர்.
அதற்குள்
சார்வரி என்று வரும் உன்னை
எப்படி வரவேற்று
ஒரு குவளை தண்ணீர் கொடுப்பேன்.
**
மருத்துநீர் தேய்த்துக்
குளிக்கச் சொல்லும்
ஆகம விதி நடக்காமல்
அரச விதிப்படி வீட்டுக்குள்
அடைந்து கிடக்கும் தலைவிதிக்கும்
கொரோனாவிற்கும் மருந்துதேடி
எல்லாம் விதிப்படியே நடக்குமென
சலித்திருக்கும் வேளையில்
புதுப்பொலிவோடு வருமுன்னை
எப்படி வரவேற்பேன் நான்.
**
அப்பா புதுச்சட்டை என்றழும்
குழந்தைகளின் பிடிவாதம் தெரியாமல்
ஊரடங்கு என்றபோதும்
வாயடங்கா வாழ்த்துகளை வழங்கி
புதுவருடத்தை நினைவுபடுத்தும்
ஊடகங்களுக்கு முன் நின்று
எப்படி வரவேற்பேன் நான்.
.**
எல்லா வருஷப்பிறப்புக் காலங்களிலும்
அண்டப்புளுகுகளை அள்ளிவழங்கும்
சோதிட சிகாமணிகள்
எதுவும் பேசாமல் நாவடக்கம் செய்துகொண்ட
நன்னாளாய் இம்முறை நீ வந்தபோதும்
ஏதேனும் தனிமைப்டுத்தல்
முகாமிலிருந்து தப்பியோடியவன் தும்மலை
சுவாசித்து வந்திருப்பாயோவென
உன்னையும் சந்தேகிக்கத் தோன்றுகிற
மனத்தோடு எப்படி வரவேற்பேன் நான்.
**
அப்புஹாமி வீட்டிலிருந்து வரும்
கிரிபத்(பால்சோறு) பலகாரத் தட்டில்
என் வீட்டுப் பொங்கலோடு
கொண்டுவந்த குழந்தைக்கு
கைவிசேசம் கொடுத்தனுப்பும் வழக்கத்தை
மூட்டைக் கட்டிப் பரண்மேல் போட்டுவிட்டு
உலைவைக்க வழியற்ற
ஒருநாள் கூலி நான்
எப்படி வரவேற்பேன் நான்.
**
கைகுலுக்கும் வழக்கத்தைக்
கைகழுவிவிட்டுவிட்டு
கைகூப்பும் வழக்கத்தைக்
கடைபிடிக்க வேண்டுமென்று
தூரநின்று கைகூப்பும் நான்
புண்ணிய காலமொன்றில்
பூத்துவரும் சார்வரி உன்னை
கண்ணியமாக எப்படி வரவேற்பேன்?
**

