பாவாணரின் தமிழிலக்கிய வரலாற்றுப் பார்வை
பாவாணரின் தமிழிலக்கிய வரலாற்றுப் பார்வை
இருபதாம் நூற்றாண்டுத் தமிழறிஞர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் ஞா. தேவநேயப்பாவாணர் ஆவார்.இவர் பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இவரின் படைப்புகள் மொழி இனம் சார்ந்த அடிப்படையில் அமைந்திருக்கும். இவர் படைத்த நூல்களுள் ஒன்றாகத் திகழ்வது தமிழிலக்கிய வரலாறு என்பதாகும். அந்நூலின் அமைப்பு முறையைப் பற்றி விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.
பாவாணரின் தமிழிலக்கிய வரலாறு
பாவாணர் தமிழ் இலக்கியங்களைப் பற்றி ஆங்காங்கே கட்டுரைகளாக எழுதி இருப்பினும் ஒட்டுமொத்த தமிழ் இலக்கியங்கள் குறித்த தம் திறனுறைகளைத் தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்நூல் 1973 ஆம் ஆண்டு எழுதி முடிக்கப்பட்டது . ஆயினும் 1979ஆம் ஆண்டுதான் வெளியிடப் பெற்றுள்ளது. ஏனைய தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களிலிருந்து இந்நூல் முற்றிலும் மாறுபட்டுக் காணப்படுகின்றது .பாவாணர் தம் நூலின் இயல்பு குறித்து,
‘’இந்நூல் சிறந்த காப்புநூல் ; தமிழாரியப் போராட்டத்தில் இறுதிப் படைக்கலம் ‘’.
எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழுக்கும் தமிழர்க்கும் உரியனவற்றை எல்லாம் ஆரியர் தமக்கே உரியன என்றும் தமிழ் நூல்கள் பல ஆரிய நூல்களின் மொழிபெயர்பே என்றும் கூறி வருவதைச் சுட்டி ,
‘’ ஆனைக்கொன்றான் என்னும் மலைப்பாம்பு ,ஓர் யானை முழுவதையும் விழுங்கினாற் போன்று இனம், மொழி, இலக்கியம் நாகரிகம் பண்பாடு என்னும் ஐங்கூறமைந்த தமிழம் முழுவதையும் ஆரியம் விழுங்கக் கவ்வி விட்டது.சுந்தரம் பிள்ளை ,மறைமலையடிகள் முதலியோர் தமிழைப் பேரளவு மீட்டிருப்பினும் ,மூல வையாபுரியாரும் வழிநிலை வையபுரியாரும் அம்மீட்பின் பயனைப் பெரிதும் கெடுத்துவிட்டனர் .அக்கேட்டை நீக்கவும் இனிமேல் அத்தகைய கேடு என்றேனும் நேராதிருக்கவும் ,வரலாறு ,மாந்தநூல் (anthropology) மொழிநூல் ஆகிய முந்நூல் அடிப்படையில் பட்டுள்ளது.’’
என்று தம் நூலின் தேவையையும் நோக்கத்தையும் நூலின் முகவுரையில் தெளிவு படுத்தியுள்ளார் .
பாவாணரின் இலக்கிய வரலாற்றுப் பார்வை
பாவாணர் இலக்கியங்களை நோக்கும் விதம் ஏனைய இலக்கிய வரலாற்று ஆசிரியர்களிடமிருந்து வேறுபடுகின்றது.பிற ஆசிரியர்கள் தம் நூல்களில் நேரடியாக இலக்கியங்களை அறிமுகப் படுத்தித் தொடங்கியுள்ளனர் .அம்முறையிலிருந்து மாறுபட்டவராக இவர் தமிழ் வரலாற்றையும் ,தமிழர் வரலாற்றையும் கூறி ,அவற்றிலிருந்து இலக்கிய வரலாற்றைக் குறிப்பிட்டுள்ளார் .இதனை ,
‘’பேராசிரியர் கா. சுப்பிரமணியர் தொடங்கி ,முனைவர் தமிழண்ணல் ஈறாகத் தமிழ் அறிஞர்கள் பலர் எழுதிய தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களைப் படித்த எவரும் பாவாணரின் தமிழ் இலக்கிய வரலாற்றைப் பார்த் ததும் வியப்படையவே செய்வர் ‘’.
எனத் திருமாறன் விளக்கியுள்ளார்.
பாவாணரின் தமிழிலக்கிய வரலாற்றின் அமைப்பு முறை
சங்க இலக்கியம் ,பல்லவர் கால இலக்கியம், பிற்காலச் சோழ ,பாண்டியர் கால இலக்கியம், நாயக்கர் கால இலக்கியம், இக்கால இலக்கியம் என்னும் ஒரே வகையான பகுப்பில் அமைந்த தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களுக்கு மாறாக , தலைக்காலம் , இடைக்காலம், இக்காலம் , எதிர்காலம் என்னும் தலைப்புகளில் பாவாணரின் தமிழிலக்கிய வரலாறு அமைந்துள்ளது .இந்நான்கு உள்ளடக்கங்களோடு முதலில் முன்னுரையும் இறுதியில் பின்னிணைப்பும் காணப் படுகின்றன .
பாவாணரின் இலக்கியப் பகுப்பு முறை
இவருடைய இலக்கியப் பகுப்முறை முற்றிலும் புதிதாக அமைந்துள்ளது .இலக்கியங்களை மதவிலக்கியங்கள் , பொதுவிலக்கியங்கள் என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளார் .
மதவிலக்கியங்கள்
மதவிலக்கியங்களைப் பாவாணர் கீழ் வருமாறு பாகுபாடு செய்துள்ளார்.
1.சிவனிய இலக்கியம்
2.மாலிய இலக்கியம்
3.கடவுள் மத இலக்கியம்
4.இரண்டன்மை அல்லது ஒராதன்மை இலக்கியம்
5.சமண இலக்கியம்
6.புத்த இலக்கியம்
7.கிறித்தவ இலக்கியம்
8.இசுலாமிய இலக்கியம்
9.நம்பா மத இலக்கியம்
என ஒன்பது வகைகளாகப் பாகுபடுத்தி விளக்கியுள்ளார் .
பொதுவிலக்கியம்
பாவாணர் பொதுவிலக்கியங்களை ,
1.இலக்கண நூல்கள்
2.இலக்கிய நூல்கள்
என இரண்டாகப் பகுத்துள்ளார் .இலக்கண நூல்களாக த் தொல்காப்பியம் முதல் இலக்கணவிளக்கம் ஈறாக உள்ளவற்றை நிரல் படுத்தியுள்ளார் . இலக்கிய நூல்களாகப் பதினெண் மேற்கணக்கு நூல்கள் ,சிலப்பதிகாரம் முதலியவற்றைக் குறிப்பிட்டுள்ளார் .இவற்றின் பின்னர் உள்ள இலக்கியங்களை நூற்றாண்டு அடிப்படையில் வகைப் படுத்தியுள்ளார் .
இவ்வாறாகப் பிற ஆசிரியர்களிடமிருந்து மாறுபட்ட நிலையில் பாவாணர் தம் இலக்கிய வரலாற்று நூலை வடிவமைத்துள்ளார் .
பார்வை நூல்கள் :
1.ஞா. தேவநேயப் பாவாணர் , தமிழிலக்கிய வரலாறு
2.ஞா. தேவநேயப் பாவாணர், தமிழர் வரலாறு
3.கு.திருமாறன் , தனித்தமிழியக்கம்
4.தமிழண்ணல் , புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு