எனக்கும் கவிதை எழுத முடியும்

எனக்கும் கவிதை எழுத முடியும்.

சிலேட்டுகளுக்கிடையிலும், தொலைந்து போன குச்சிகளுக்கிடையிலும்,

ஆசிரியரிடமிருந்து பட்ட அடிகளுக்கிடையிலும்,

அம்மாவின் தொலைந்து போன அன்புக்கிடையிலும்,

தூரத்திலிருந்த அப்பாவின் ஆதங்கத்துக்கிடையிலும்,

என்னாலும் கவிதை எழுத முடியும்.



எனக்கும் கவிதை எழுத முடியும்.

எழுதி முடிக்காமல் விட்ட காதல் கடிதங்களாலும்,

பதிவயதுக் காதலிக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளாலும்,

எங்கோ பேருந்து நிலையத்தில் என் கண் பட்ட பாவையராலும்,

என்னாலும் கவிதை எழுத முடியும்.



எனக்கும் கவிதை எழுத முடியும்.

கல்யாணத்தில் தொலைந்து போன காதல்களுக்கிடையிலும்,

அன்பினால் என்னை ஆழ்த்தும் மழலைகளாலும்,

செலுத்தாமல் போன வங்கிக் கடன்களுக்கிடையிலும்,

முடிக்காமல் விட்ட அலுவலகப் பணிகளுக்கிடையிலும்,

என்னாலும் கவிதை எழுத முடியும்.



என்னாலும் கவிதை எழுத முடியும்.

பல்லில்லாத என் மனைவியின் புன்னகையாலும்,

பல் முளைக்காத என் பேரக்குழந்தையின் புன்னகையாலும்,

நடுங்கும் கைகளால் பேனா பிடித்து,

என்னாலும் கவிதை எழுத முடியும்.

எழுதியவர் : தமிழொளிப்புதல்வன் (16-Sep-11, 7:14 am)
பார்வை : 417

மேலே