வண்ணப் பாடல்
தந்ததன தந்ததனத்
தந்ததன தந்ததனத்
தந்ததன தந்ததனத் தனதானா
தண்டையொலி கொஞ்சிவரச்
சங்கொலிமு ழங்கிவரச்
சந்தவொலி யுந்திகழப் பொலிவோடே
தந்ததன தந்தவெனக்
கொங்கைகள சைந்துவரத்
தங்கமுக முங்குளிரப் பதமாடும்
செண்டையிசை யுஞ்செவியிற்
கிண்கிணென வந்துவிழச்
சிந்தைமகி ழும்பொழுதிற் கனிவோடே
தென்றலது நெஞ்சுரசப்
பொங்கிவரு சிந்திசையிற்
செங்கமல மும்விரியத் துடியாதோ
கொண்டையொடு செஞ்சடையிற்
கங்கையுட னம்புலியைக்
கொண்டவனை நம்பியுளத் துறவோடே
கொன்றையணி யுஞ்சிவனைக்
கண்டுமன மின்பமுறக்
கொண்டலென வன்பில்நனைத் திடும்பேறே
பண்புநிறை யம்பிகையைச்
சந்ததமு மன்பொழுகப்
பம்பலொடு கெஞ்சியழைத் திடும்போது
பம்பையுமு ழங்கிவரத்
துந்துபிய திர்ந்துவரப்
பந்தமென வந்தருளைப் பொழிவாளே!
சியாமளா ராஜசேகர்