தனிமை மரம்

நான் வேலைக்கு செல்லும் வழியில் தான் அவள் வீடு இருக்கும். ஒரு உதிர்ந்து போன ஓலைக் குடிசை வீடு.செல்லரித்துப் போன சுவர்கள் அருகே  திண்ணையில் அவள் கால் நீட்டி அமர்ந்து வெற்றிலையை சுவைப்பாள். மூக்குப் பொடி போடுவாள். தூக்கம் காணாத
அவள் கண்களில் துக்கம் நிரம்பி இருக்கும்.

வழியில் செல்லும் உருவங்கள் ஏதேனும் அரிதாக அவள் கண்களுக்கு புலப்பட்டாள் அவர்களை அழைத்து கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கும் படி கூறுவாள்

இப்படி தான் ஒருமுறை அவளிடம் நான் அகப்பட்டேன்.சுருங்கிய உடலில் கூன் நிமிர்ந்து வளர்ந்திருக்கும் ஆடைகள் அரைகுறையாக அவளுடலில் ஒட்டியிருக்கும். திண்ணை மூலையில் ஒரு கொம்பு வைத்திருப்பாள். அது அங்கு வளரும் நாய் எப்போதாவது அவள் திண்ணையில் இடம் கோரும் போது மிரட்டி விரட்டுவதற்காக

அவள் அன்று என்னை அழைத்தது முதல் ஓயாது அரற்றியபடியே திட்டிக் கொண்டிருந்தாள்

யாரைத் திட்டுகிறாள் என புரியாமல் நான் விழித்தேன்.

அவளுக்கு யாருமில்லை என்று பிறர் நினைக்கக் கூடாதென்பதற்காகவே அவளாகவே சில பெயர்களை உச்சரித்து கொள்கிறாள் என எனக்கு பிறகு தான் தெரிந்தது

அய்யா அந்த பக்கம் விறகொடிக்க போன இராசப்பா வரானு பாரு, மூக்குப் பொடி வாங்கி வரப் போன பொன்னாயி வராளா பாரு பின் அவளாகவே தன்னை சமாதனப்படுத்திக் கொள்ளும் தோணியில் போனது போன இடம் தான்

சொல்லு பாட்டி என்ன செய்யணும்

அவள் உள்ளே பானையிலிருந்து தண்ணீர் மோந்து வரும் படி சொன்னாள்

விளக்கோ ஜன்னலோ இல்லாத அந்த அறையில் அந்த காலைப் பொழுதிலும் இருள் நிரம்பி வழிந்துக் கொண்டிருந்தது.

தட்டு தடுமாறி பானையை கண்டுபிடித்தாலும் டம்ளரை தேடுவதென்பது பார்வை பறிபோகும் அவலம்

பாட்டி இங்க டம்ளர் இல்லையே எதுல மோந்துறது

அவள் பானை பக்கத்திலே ஒரு கொட்டாங் குச்சி வைத்திருப்பதாகவும் அதில் தண்ணீர் மோந்து வரும் படியும் கூறினாள்

நான் கொஞ்சம் தண்ணீரை சிந்தியபடியே அவளிடம் நீட்ட கொட்டாம் குச்சியை கவிழ்த்து அவள் தயார் செய்து வைத்திருந்த ஒரு அலுமினிய தட்டில் ஊற்றி மொடக் மொடக் என குடித்தால் பாதி தண்ணீர் அவள் தொண்டை வழியே வழிந்து அவள் மார்பு குழிக்குள் இறங்கியபடி இருந்தன

மீந்த தண்ணீரை அவள் கீழே வைக்கும் போது தட்டின் ஒரு பாகம் கொஞ்சம் சொட்டை விழுந்து இருந்ததால் நீர் மேலும் கீழும் தள்ளாடியது.

அவள் தண்ணீரை அருகில் வளர்ந்த ஒரு செம்பருத்தி செடிக்கு ஊற்றிவிட்டு தட்டை கவிழ்த்து வைத்துக் கொண்டாள்

நான் கிளம்பட்டுமா பாவனையில் அவளைப் பார்த்தேன்

அவள் அதை உணராதது போல உக்காரு ராசா ஏன் நிக்கற என்றாள்

இல்லப்பாட்டி வேலைக்கு நேரமாவுது நான் கிளம்பணும்

அவள் வாய் விசாரணையில் மூழ்கும்

எங்க வேலை என்பாள்

பக்கத்தில காவிரி ரைஸ் மில்

மாரியம்மா எப்படி இருக்கா

நான் தவிப்பேன் எங்கள் மில்லில் மாரியம்மா பெயரில் குறைந்தது பத்து பேராவது இருப்பார்கள்

ஆனால் அதன் பொருட்டு அவள் கவலை படுவது போல தெரியாது.  அவள் கடந்த காலத்தின் நிகழ்வுகளை கதைகளாக புனைய ஆரம்பிப்பாள். நான் காலம் கடக்கும் அவஸ்தையில் தவித்துக் கொண்டிருப்பேன்.
மாரியம்மா குழந்தையாக இருந்ததிலிருந்து தொடங்கும் கதை அவள் பேத்தியின் வளைகாப்பு வரை நீளும்.ஆனால் அவள் கூறுவதை தவிர்ப்பதற்கும் மனம் சங்கடமாகவிருக்கும். அவள் தனிமையில் சேர்த்து வைத்த சொற்களே தானாக அவள் வாய் வழியாக பொழிந்து கொண்டிருப்பதாக தோணும்.

மில்லில் சங்கு முழங்கும் போது நான் திமிறி எழுவேன் அப்போதும் அவள் வாய் பேசிக்கொண்டு தான் இருக்கும்

நான் திண்ணையில் வைத்த கூடையை எடுக்கும் போது தான் சுயநினைவு வந்து அவள் என்னை பார்ப்பாள்

என்ன ராசா கிளம்பறியா

நான் தலையசைத்து விடைபெறுவேன்

அவள் தலை கவிழ்ந்து போய் பின்னகர்ந்து திண்ணையின் ஒரு மூலையில் அவள் உடலை சுருட்டி படுத்துக் கொள்வாள்

தூசிப் படிந்த அவள் முதுகில் புடைத்திருக்கும் எலும்பின் வழியே எறும்புகள் ஏறிக்கொண்டிருக்கும்

அப்போது அவள் விரட்டிய நாய் வாசலில் வாலை ஆட்டி படுத்துக் கிடக்கும். அதற்கு என் காலை உணவை பரிமாறிவிட்டு வேலைக்கு ஓடுவேன்.

பாதி வழியில் தான் தோன்றும் அவள் சாப்பிட்டு இருப்பாளா?

முற்றும்.

எழுதியவர் : S.Ra (22-Apr-20, 7:15 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : thanimai maram
பார்வை : 171

மேலே