உருளும் மக்கள் தலை
=
தலையிலே பொதிசு மந்து
-தான்பெறும் சொற்பக் காசில்
உலையிட அரிசி வாங்கும்
-உழைப்பா ளிக்குடி சையிலே
-சிலையென அசையா திருந்து
-சிரிக்கிற வறுமைப் பேயைக்
கொலையிட தடையைப் போட்டுக்
-கொரோனா ஆடுது ஆட்டம்
**
வண்டிகள் வருகைக் கெல்லாம்
-வழிகளில் தடையைப் போட்டுக்
கொண்டிருக் கின்றக் கொடுமைக்
-குடியிருப் பதனால் விளைச்சல்
கண்டவர் நிலத்தில் பறித்தக்
-காய்கறி யாவும் அழுகி
உண்பவர் கின்றி மண்ணில்
-உரமென மக்கு தங்கே!
**
விதைத்தவன் கண்ட கனவு
-வெறுமையை சுமந்து கொண்டு
பதைத்தொரு பக்கம் நிற்க
-பசியொடு தவித்த வயிறு
சிதைந்திரு கண்கள் மூலம்
-கண்ணீ ரொருபக் கமாக
உதைபடும் ஊரடங் கோடு
-உருளுது மக்கள் தலையே!
**
**