43 கடவுளை பன்முறை கேட்டு முறைசெயல் பண்பு – அரசியல்பு 7
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
காதிறை வனுக்குக் கண்ணென லான்மெய்
..காண்குறா னெனுமொழி மாற்றி
வாதிகள் சாட்சி சாதக மெல்லாம்
..வகைவகை யினிதுகேட் டமைந்த
மேதினிக் கிழமை நீங்கிடுந் தன்மை
..விளையினு நடுவினீங் காது
பாதியா வணுவும் பகுந்துதீர்ப் பதுவே
..பார்த்திபன் கடமையா மன்றோ. 7
– அரசியல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”காதுதான் இறைவனாகிய மன்னனுக்குக் கண் போன்றது எனப்படுவதால், ஒற்றர் மொழியன்றிப் பிறர்மொழியைக் கேட்டு உண்மை காணான் மன்னன் என்று உலகத்தார் சொல்லும் சொல்லை மாற்றி வாதி, பிரதிவாதி, சாட்சி சொல்வோர் கூறுவனவும், அதன் விளைவாக அவ்வழக்கின் ஆதாரங்களான ஆவணங்களையும் முறையாக கேட்டும் ஆய்ந்தும் முறைசெய்தல் வேண்டும். அரசே தன்னை விட்டு நீங்குமாறு ஏற்பட்டாலும் தான் நடுநிலையிலிருந்து நீங்காமல் அணுவையும் பாதியாகப் பிளந்து தீர்ப்பு தருவதுவே மன்னன் செய்யும் கடமையாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.