45 தன்னைத் தொண்டனாகத் தருபவன் மன்னன் – அரசியல்பு 9
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)
கைப்புரை யேற்றுப் பொய்ப்புக ழேலாக்
..காதின னருள்பொழி கண்ணன்
தப்புரை வழங்கா நாவினன் புவியோர்
..தாசன்றா னெனவுணர் மனத்தன்
செப்பயன் மடவார் காணரு முரத்தன்
..றிருந்தலர் காணரும் புறத்தன்
எப்பொழு தினுஞ்சென் றியாருங்காண் முகத்தன்
..ஈசனன் புடையவ னிறையே. 9
– அரசியல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
“சான்றோர் நல்வழிப்படுத்தக் கூறும் கசப்பான அறிவுரையை விரும்பி ஏற்று, பொய்ப் புகழாகச் சொல்லப்படும் பாராட்டுகளை காதுகளில் ஏற்றுக் கொள்ளாதவன். அருள் நிறைந்த கண்களை உடையவன்.
பொய்யான சொற்களைச் சொல்லாத நாக்கு உடையவன். உலகோர்க்கு உவந்து செய்யும் அடிமை எனத் தன்னை நினைக்கும் மனத்தை உடையவன்.
அயல் மாதர் எண்ணம் சிறிதும் இல்லா நெஞ்சினன். பகைவர் காண்பதற்கு அரிய புறமுதுகு இடாதவன்.
எப்பொழுதும் சென்று யாவரும் காண்பதற்கு இனிய முகம் உடையவன். கடவுளிடம் நீங்காத அன்புடையவன் அரசன்” என்கிறார் இப்பாடலாசிரியர்.