44 செங்கோல் ஒன்றே வலியினை சேர்க்கும் – அரசியல்பு 8

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

மன்னவன் வலிசெங் கோலினா லன்றி
..வாளினாற் சேனையா லில்லை
நன்னெறி வழுவா மன்னவன் தனக்கு
..நாடெலாம் பேரர ணுலகின்
மன்னுயி ரெல்லா மவன்படை யன்னோர்
..மனமெலா மவனுறை பீடம்
இன்னதன் மைய அரசளிப் பவனை
..இகல்செயுந் தெறுநரு முளரோ. 8

– அரசியல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”மன்னனுக்கு வலிமை தருவது அவன் செங்கோலே அன்றி, வாளினாலும், படை பலத்தாலும் இல்லை. நல்ல நெறிமுறை தவறாத மன்னனுக்கு நாடெல்லாம் பெரிய பாதுகாப்புள்ள கோட்டை யாகும்; நாட்டிலுள்ள குடிமக்களெல்லாம் அவன் படையாகும்;

குடிகள் மனமெல்லாம் அவன் வாழும் இருக்கை யாகும்; இத்தகைய முறையால் அரசாளும் மன்னனுக்குக் கேடு செய்யும் பகைவரும் இருப்பார்களா?’ என்று கேட்டு, செங்கோலுடன் நீதி தவறாது ஆட்சி செய்வதே மன்னனுக்கு வலிமை சேர்க்கும் என்கிறார் இப்பாடலாசிரியர்.

பேரரண் – பெரிய பாதுகாப்புள்ள கோட்டை,
பீடம் - இருக்கை. தெறுநர் - பகைவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Apr-20, 8:24 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே