ஏமாறப்பிறந்தவன்

ஏமாறப்பிறந்தவன்
பல வருடங்களுக்கு முன்பு அன்றொரு நாள் நான் காற்றாட கவர்ன்மென்ட் எஸ்டேட்டில் ராஜாஜி ஹால் பக்கமாக ஏதோ ஒரு சிந்தனையில் ஆழ்ந்தவனாக போய்க்கொண்டிருந்தேன்.
அப்பொழுது என் பின்னாலிருந்து “சார், சார்” என்ற ஒரு சத்தம் வந்தது. சரி, யாரோ ஒரு பிச்சைக்காரன் நம் பின்னால் வந்துகொண்டிருப்பவரிடம் பிச்சை கேட்க வேண்டி, குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறான் என்று நான் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டே இருந்தேன். அந்த ஒரு கரகரப்பான குரல் அவன் ஒரு இளம் வயது பிச்சைக்காரனாக இருக்க வேண்டும் என்று தோன்றியது.. சட். பிச்சைக்காரன், குரலைப்பற்றி இப்போ என்ன ஆராய்ச்சி என்று என்மனதை கட்டுப்படுத்திக்கொண்டு தொடர்ந்து நிற்காமலும், திரும்பிப்பார்க்காமலும் போய்க்கொண்டே இருந்தேன். ஆனால் அந்தக் குரலின் அழுத்தம் கொஞ்சம்கூடக் குறைவதாக இல்லை.
என்னைப் பின் தொடர்ந்து கொண்டே வந்தது. என்னை என் நிழல் போல தொடர்ந்து வந்து கொண்டே இருந்தான் அந்தக் குரலுக்கு உரியவன்.
திரும்பிப் பார்க்க என் ஈகோ இடம் தரவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இவன் நாசூக்கான பிச்சைக்காரனாகத்தான் இருப்பான் என்று தோன்றுகிறது.
“நான் என் பர்ஸை கோட்டை விட்டு விட்டேன். ஊருக்குப் போக வழியில்லை. ஒன்றரை நாளாகப் படு பட்டினி. ஏதாவது சிறு ஹெல்ப் செய்தால் நான் வீடு போய்ச்சேர்ந்து என்பிள்ளை குட்டிகளைப் பார்க்க முடியும். ஊர் போய்ச்சேர்ந்தவுடன் முதல் வேலை
ஆக உங்கள் பணத்தை மணி ஆர்டர் செய்துவிடுகிறேன். என்னை நம்புங்கள்” என்று நாடகமாடுவான். அரசியல் வாதிகளைப்போல கண்ணீர் விடுவான்.
ஊரில் இப்போது இந்த மாதிரி “அம்மா, தாயே” என்று பிச்சை எடுக்காமல், “சார், மேடம்”னு என்று மாடர்னாக பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்கள் ரொம்ப பேர் கிளம்பி இருக்கிறார்கள். பத்திரிகைகளில் இந்த மாதிரி நியூஸ்களைத்தான் தினமும் பார்க்கிறோமே. பொய் அட்ரஸ் கொடுப்பார்கள். ஐயோ பாவம் என்று நம்மால் முடிந்ததைக் கொடுத்தால்
“ரயில் டிக்கட் ஒன் வே குறைந்தது இவ்வளவு ஆகும். ஊர் போய்ச்சேருவதற்குள் சாப்பிட இவ்வளவு செலவாகும். தயவு செய்து அந்தத் தொகையைக் கொடுத்தால் நான் கட்டாயம் உங்கள் பணத்தைத் திருப்பி அனுப்பிவிடுவேன். இதுதான் என் அட்ரஸ்” என்று தொந்திரவு செய்து நம்மை ஏமாற்றி பணத்தை வாங்கிக்கொண்டு போயே போய்விடுவார்கள். கொடுத்த பணம் கோவிந்தாதான். இந்த மாதிரி எத்தனை கதைகளை தினமும் பேப்பரில் படிக்கிறோம். நான் என்ன ஏமாந்த சோணகிரியா? இந்தக்கதை எல்லாம் என்னிடம் நடக்காது என்று என்னுள் ஒரு பெரிய டயலாக் ஓட, நான் அந்தக்குரலை சற்றும் லட்சியம் செய்யாமல் போய்க்கொண்டிருந்தேன்.
அந்தக்குரல் என்னை நெருங்க ஆரம்பித்தது. நான் என் நடையின் சுருதியைக் கூட்டினேன். இப்படி ஒரு பத்து நிமிடங்கள் அந்தக் குரலுக்கும் எனக்குமான ஓட்டப் பந்தயம் நடந்து கொண்டிருந்தது.
இன்று கட்டாயம் நான் ஏமாறப்போவதில்லை என்ற தீர்மானத்துடன் இன்னும் சற்று வேகமாக நடையைக்கட்டினேன். ஆனாலும் அந்தக் குரல் பலமாகிக்கொண்டே வந்தது. நான் எரிச்சலின் கிளைமாக்ஸைத் தொட்டேன். அந்தக்குரலின் சொந்தக்காரர் இப்போது என் முன்னால் வந்து நின்று இடைமறித்து “என்ன சார், என்னைத் தெரியவில்லையா” என்று கேட்டார்.

ஒரு ஏரியா பிச்சைக்காரனுக்கு இன்னொரு ஏரியா பிச்சைக்காரனைத் தெரிந்திருக்கலாம் என்ற வகையில் இந்த மாடர்ன் பிச்சைக்காரர் ( இப்போது மரியாதை சற்று கூடிவிட்டது. ஏனென்றால் அவர் பேண்ட், சட்டை போட்டு கொஞ்சம் நாசூக்கானவராக தென்பட்டார்) என்னை குசலம் விசாரிக்கிறாரா என்ன? இந்த மாதிரி நான் இதுவரையில் மூன்று நான்கு தடவை ஏமாந்து போயிருக்கிறேன். இந்தத் தடவை நான் நிச்சயம் ஏமாறப்போவதில்லை என்று மற்றும் ஒருமுறை தீர்மானித்தேன்.
இப்போது அவர் என் முன்னால் பாண்ட் ஷர்டுடன் ஒரு டீசண்ட் பிச்சைக்காரனாக நிற்கிறார். இப்போது அவர் மூஞ்சியில் அடித்தவாறு பேசுவது சரியாக இருக்காது, அது வந்தோரை வாழ வைக்கும் தமிழ் நாட்டுக்கு ஏற்ற பண்பாகாது என்ற எண்ணத்தில் என் கோபத்தை அடக்கிக்கொண்டு முகத்தில் தோன்றிய கடுகடுப்பை ஓரளவு மறைத்துக் கொண்டு “என்ன? “ என்று கேட்டேன்.
மறுபடியும் அந்த உருவம் “என்னைத் தெரியலையா சார்” என்று கேட்க,
“நீங்க என்ன ஜவஹர்லால் நேருவா, இல்லை மகாத்மா காந்தியா உங்களைப் பார்த்தவுடன், அட இவரான்னு தெரிஞ்சிக்க” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு என் தமிழ்ப் பண்பு என்னைக் கட்டுப் படுத்த
“ நீங்க யாருன்னு தெரியல்லையே” என்றேன். அவர் உடனடியாக
“நான் தான் சார், 1967 லே உங்க ஸ்டூடண்டா இருந்தேன் சார்” என்றார்.
எனக்குச் சுரீரென்றது.
“அட , நம்ம ஸ்டூடண்டைப் பார்த்து இவ்வளவு கேவலமா நெனச்சுட்டோமே” என்று மனதிற்குள் வருந்தியபடி,
“மன்னிக்கவும். ஒவ்வொரு வருஷமும் புதுசு புதுசா ஸ்டூடண்ட்ஸ் வரதாலே என்னாலே ஞாபகம் வெச்சிக்க முடியல்லே. இதுதான் நிறைய வாத்தியார்களுக்கான சாபக்கேடு” என்றேன்.
“நீங்க சொல்றது உண்மைதான் சார். உங்களாலே அத்தனை பேரையும் நினைவுலே வெச்சிக்க முடியாது தான். ஆனா ஸ்டூடண்ட்ஸ் அப்படி இல்லை. அதுவுமில்லாம உங்களைப்போல நல்ல டீச் பண்றவங்களை நாங்க எப்படி சார் மறக்க முடியும்?” என்றாரே பார்க்கலாம்.
என்நண்பனின் மகன் கல்லூரியில் படிப்பவன், அவனிடம்
“ உன் கெமிஸ்டிரி புரொஃபசர் பெயர் என்ன ?” என்று கேட்டதற்கு, அவன்
“ நாங்கள் இன்னும் அவருக்கப் பெயரிடவில்லை” என்றான்.
அந்த மாதிரி இந்தக் காலத்தில் ஆசிரியருக்குப் பெயர் வைக்கும் மாணவர்கள், மற்றும் ஆசிரியரைப் பார்த்தாலே அவரை தவிர்ப்பதற்காக அடுத்த ரோடு வழியாகப் போகும் மாணவர்கள், பார்க்காதது போல் தலையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு போகும் மாணவர்கள், ஆசிரியரை பார்த்தாலே கல்லை எடுத்து எறியலாமா என்று யோசிக்கும் மாணவர்கள் அல்லது வகுப்பறையிலேயே கத்தியால் குத்தும் மாணவர்கள் நிறைந்த இந்தக்காலத்தில், ஆசிரியர்களைப் புகழும் மாணவர்கள் இருக்கிறார்களா என்று அதிசயித்துப்போனேன். ஒரு மாணவனிடமிருந்து வரும் இத்தகைய வார்த்தைகள் அரசு தரும் நல்லாசிரியர் விருதை விட சிறந்தது அல்லவா?
இப்படிப்பட்ட ஒரு நல்ல மாணவனை பிச்சைக்காரன் என்று நினைத்து தவிர்க்க நினைத்த என் அவசர புத்தியை நான் நொந்து கொண்டேன். அந்த மாணவர் தன் பெயரைச்சொல்ல அந்த நிமிஷமே அதை ஒரு காதில் வாங்கி அது அடுத்த காதால் வெளியேற்ற, அவராகவே முன் வந்து தான் இப்போது என்ன உத்தியோகத்தில், எங்கே வேலை செய்கிறார் என்ற விவரத்தை எல்லாம் சொல்லி
“சார், என் வாழ்நாளில் உங்களை மாதிரி நல்ல ஒரு ஆசிரியரை மறக்கவே முடியாது. இன்று நான் ஒரு நல்ல பொசிஷன்லே இருக்கேன்னா, அது உங்களைப்போன்ற ஆசிரியர்களால்தான்” என்று சொல்லி “உங்களைப்பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். என்னை நீங்கள் வாழ்த்தி அனுப்பணும்” என்று கூறியதுடன் ( சாஷ்டாங்கமாக நடு ரோடு என்று கூடப்பார்க்காமல் விழுந்து கும்பிட்டு விடுவார் போல இருந்தது) என் நலத்தையும், குடும்ப நலத்தையும் விசாரித்து விட்டு
“போயிட்டு வரேன் சார்” என்று பணிவாக விடை பெற்றார்.
எனக்கு அம்மாணவனின் சொல் ஒவ்வொன்றும் உள் மனதில் ஒரு பெருமையைத் தோற்றுவித்தாலும், நான் அவரைப் பற்றி எவ்வளவு கீழ்த்தரமாக நினைத்து விட்டேன் என்பதை நினைத்து அன்று இரவு நிம்மதி இன்றி தூக்கத்தை இழந்தேன். இனி யாரையும் தவறாக எடை போடக்கூடாது என்ற விரதம் மேற்கொண்டேன்.

ஒரு மாதம் கழித்து ஒருநாள் நான் தெருவில் போய்க்கொண்டிருந்த போது ஒரு ஜென்டில்மேன் என்னைப்பார்த்து “சார்” என்று ஒரு பெரிய கும்பிடு போட்டார். கும்பிட்டோடு போனஸாக ஒரு சிரிப்பு, நமக்கு மிகவும் வேண்டியவர்களைப் பார்த்துப் பூக்கும் சிரிப்பு அது. அந்த சிரிப்பில் ஒரு நெருக்கம் தெரிந்தது.
“சரி. இவ்வளவு தூரம் நம்மைப் பார்த்து இவ்வளவு உரிமையோடு சிரிக்கிறார் என்றால் இவரை எனக்குத் தெரியாவிட்டாலும், இவருக்கு என்னை நன்றாகத்தெரிந்திருக்கிறது. ஒரு வேளை இவரும் என் பழைய மாணவராக இருக்கலாம். அதுதான் அந்தக் கல்மிஷமில்லாத சிரிப்பின் காரணம். அவரே அவரை எனக்கு அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு முன் நானே என்னுடைய ஞாபக சக்தியை அவர் மெச்ச வேண்டி “நீங்க என்னோட ஓல்ட் ஸ்டூடண்ட்தானே” என்று கேட்டு நானே என் தலை மேல் அக்ஷதையைப் போட்டுக் கொண்டேன்.
இப்படி நான் சொன்னதுதான் தாமதம் அவர் இதை வைத்துக்கொண்டு என்னுடன் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். “உங்களை மாதிரி ஆசிரியர்கள் ( அவரை என் ஸ்டூடன்டா என்று கேட்டதை வைத்து நான் ஆசிரியராகத்தான் இருக்க வேண்டும் என்று துப்பறிந்திருக்கிறார்) இருப்பதால்தான் நாட்டில் மழை பெய்கிறது. இவ்வளவு தூரம் நீங்கள் உரிமையுடன் உங்கள் ஸ்டூடண்டா என்று கேட்டவுடன், அடடா நான் உங்கள் ஸ்டூடண்டாக இருக்கக் கொடுத்து வைக்காதவனாகப் போய்விட்டேனே. “உங்களைப்போல பெரிய மனிதர்களிடம் நான் என்னைப் பற்றிச் சொன்னால் நிச்சயம் நீங்கள் தவறாகப்புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு உங்கள் மனது அவ்வளவு சின்னது இல்லை என்று எனக்குத்தெரியும். என்னுடைய பர்சை நான் தொலைத்து விட்டேன்” என்று அதைத்தொடர்ந்து எப்படி தான் ஒரு வசதியான குடும்பத்தைச்சேர்ந்தவரென்றும் எப்படி இப்போது தன் பர்சு இழந்து இரண்டு நாளாகத் தவிப்பதாகவும், தான் இல்லாத நிலையில் மெத்தப்படித்த இவர்மனைவி, ஒரு ஆசைப்பெண்குழந்தைக்குத்தாயான இவர் மனைவி, கிடைத்த பெரிய வேலையை குழந்தையின் நலனுக்காகத் தியாகம் செய்து விட்டு, இரண்டு நாட்களாக தான் ஊருக்குப் போக முடியாததால் தானின்றி எப்படித் தவிக்கிறாளென்றும், அந்த மூன்றே வயதான அந்தப் பெண்குழந்தை “அப்பா, அப்பா” என்று இரண்டு நாளாகக் கதறுவதையும் அப்படியே படம் பிடித்து என்முன்னால் நடித்துக் காட்ட, என் உள்ள உறுதி குலைந்து, விட்டால் இந்த ஆள் மேலும் ஓயாமல் பேசி அவனுடைய தாய், தந்தை, பாட்டி, தாத்தா என்று தன் குடும்பத்திலுள்ள அத்தனை பேரின் சோகக் கதையையும் சொல்லி என்னை அறுப்பாரோ என்று பயந்து ஓரு நூறு ரூபாயைக்கொடுத்து,
“எனக்கு நேரம் ஆகிறது , நான் வருகிறேன்” என்று சொல்லித் தப்பிப்பதற்குள் போதும், போதுமென்று ஆகிவிட்டது.
“சார், உங்களுக்கு என் அட்ரஸ்?”
“வேண்டாம். உங்கள் கதையைக் கேட்டவுடன் என்மனது கனத்து விட்டது. நீங்கள் இந்தப்பணத்தைத் திருப்பித்தர வேண்டாம்” (எப்படி இருந்தாலும் திருப்பித் தரப்போவதில்லை) என்று சொல்லி அவர் அடுத்த தெருவுக்குப் போகும் வரை காத்திருந்தேன்.
சற்று நேரம் கழித்து நான் அடுத்த தெரு போன போது அதே ஜென்டில்மேன் யாரோடேயோ தன் சோகக் கதையை பேசிக்கொண்டிருந்தார். நான் நெருங்கும் போது அவர் பேசிக்கொண்டிருந்தது என் நண்பன் சோமுவுடன் என்று தெரிந்தது. நான் சோமுவை நெருங்கியவுடன் அந்த ஜென்டில்மேன் பேசிக்கொண்டு இருந்ததை நிறுத்திவிட்டு சிட்டாய்ப் பறந்தார். சோமுவுக்கு அன்று என்னால் நூறு ரூபாய் லாபம்.

சில வருடங்கள் கழித்து அன்றொரு நாள் வடக்கு மாட வீதி, மைலாப்பூரில் சென்று கொண்டிருந்த போது எனக்குத் தெரிந்த முகம் ஒன்றைப் பார்த்தேன். ஆகா இவர் நம்ம. யுனிவர்சிடியிலே வேலை செய்பவராயிற்றே. இவரைத் தெரியுமே என்ற உரிமையில் நம்ம யுனிவர்சிடி இப்பொழுது எப்படி இருக்கிறது?. என் நண்பர்கள் பலரும் ரிடையர் ஆகிவிட்டார்களா, இன்னும் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள் என்ற ஆவலினால் உந்தப்பட்டு என்னைப் பார்க்காமல் போய்க்கொண்டிருந்தவரின் பக்கம் சென்று “என்னங்க, ரொம்ப பிஸியா. என்னைத் தெரிகிறதா?” என்று கேட்டேன். உடனே அவர் திகைத்தவராக என்னைப்பார்த்தபடி
“ புரொஃபர் சார், உங்களை எப்படித் தெரியாமல் இருக்க முடியும்? புரொஃபர் சார்,
நீங்க ரிட்டையர் ஆனப்புறம் எப்படி இருக்கீங்க? உங்க பென்ஷன் செக்‌ஷன்லே தான் நான் இருக்கேன். பென்ஷன் எல்லாம் தவறாம உங்களுக்கு வருதில்லையா. இந்த வருஷம் நீங்க life certificateஐ அனுப்பிச்சிட்டீங்களா?” என்று கேட்டார். அவர் அப்படிக் கேட்பதற்குக்காரணம் இருந்தது.
இப்படித்தான் நான் ஒரு வருஷம் லைஃப் செர்டிஃபி கேட் அனுப்ப மறந்ததால் எனக்கு பென்ஷன் வரலை. இரண்டு மாசம் பொறுத்திருந்து யுனிவெர்சிடி ஆபீசுக்குப்போய் “ஏன் என் பென்ஷனை அனுப்பலை ரெண்டு மாசமான்னு” கேட்டதுக்கு அந்த ஆபீஸுலே இருந்த இன் சார்ஜ் “ நீங்க லைஃப் செர்டிஃபிகேட் அனுப்பல்லே. அதான். அதுமாத்திரம் இல்லே சார். போன வருஷம் கூட நீங்க அந்த செர்டிபிகேட் அனுப்பல்லேங்கறதை இப்பத்தான் கண்டு பிடிச்சோம். அதனாலே தப்பா உங்களுக்குப் போன வருஷம் பென்ஷன் க்ளெய்ம் பண்ணி அனுப்பிச்சுட்டோம். ரெஜிஸ்டிரார் எங்களைக் காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சிட்டார். அதனாலே நீங்க போன வருஷ லைஃப் செர்டிபிகேட்டையும் இந்த வருஷ லைஃப் செர்டிபிகேட்டையும் கொடுத்தாத்தான் உங்களுக்குப் பென்ஷன் கிடைக்கும் என்றார். நான் “இந்த வருஷ செர்டிபிகேட்டைத் தரேன். போதாதா. போன வருஷ செர்டிபிகேட் எதுக்கு ? என்றதுக்கு .
“அதெப்படி சார். நீங்க போன வருஷம் உயிரோட இருந்ததுக்கான ப்ரூஃப் எங்களுக்கு ரெகார்டுலே வேணும்” என்றார்.
இந்த வருஷம் உயிரோட இருக்கேன்னா, போன வருஷமும் உயிரோட இருந்திருக்கேன்னு தானே அர்த்தம்” என்றதற்கு,
“ரூல்னா, ரூல்தான்சார், வீணா பிரச்சினையை உண்டு பணணினா, உங்களுக்குத் தான் பென்ஷன் வராது. அதனாலே போன வருஷ செர்டிபிகேட்டையைம் கொடுத்துடுங்க” என்று சொன்ன பின் நான் அந்த போன வருட செர்டிபிகேட் வாங்கறதுக்குள்ளே பட்ட பாட்டை நினைத்த போது, போன வருடம் உயிரோடு இல்லாமலே இருந்திருக்கலாமே என்ற பைத்தியக்கார எண்ணம் தோன்றியது.
இப்ப அந்தப் பழைய கதை எதுக்கு? அப்போ கண்ணாயிரமும் அந்த செக்‌ஷன்லே தான் வேலை செஞ்சிக்கிட்டு இருந்தார். அதனாலே தான் அவரை எனக்குத்தெரியும். எனக்கும் அவரைத்தெரியும்.
அவரிடம் யுனிவர்சிடியைப் பத்திய விசாரணையைத் தொடர்ந்தேன்.
இப்ப யுனிவர்சிடி ஆபீசிலே யார்யார் இருக்காங்க. வைஸ்சான்சலர் இப்ப எப்படி இருக்கார், வேறு சில புரொபசர்கள் இப்ப என்ன பண்றாங்க என்ற விவரம் எல்லாம் சொல்லித் தீர்த்தார்.
“புரொஃபர் சார், நீங்க இருந்த வரையிலும் யுனிவர்சிடி எவ்வளவு நல்லா இருந்தது தெரியுமா? அதுக்கப்புறம் இப்ப எப்படி இருக்குன்னு நான் என் வாயாலே சொல்லத்தேவை இல்லை. உங்களுக்கே தெரியும்” என்றார்.
அதைக்கேட்டவுடன் எனக்குப்பெருமை தாளவில்லை, ஏதோ அந்த யுனிவர்சிடியே என்னால தான் நல்லா இருந்த மாதிரியும், நான் ரிடையர் ஆனதனால்தான் அது இந்த நிலைக்கு வந்து விட்டதாகவும் அகமகிழ்ந்து போனேன். அதுவுமில்லாம வார்த்தைக்கு வார்த்தை “புரொஃபசர் சார்” என்று இவர் சொன்னதை ரொம்ப நாள் கழிச்சிக் கேட்டதிலே என்னுள் தூங்கிக் கொண்டிருந்த ஈகோ கிளம்பியது. இத்தனை பேர் ரோடுலே போறாங்களே. அதுலே ஒருத்தருக்காவது என்னை புரொஃபசர்னு தெரிஞ்சிதா? ரிடையர் ஆயி இத்தனை வருஷத்துலே யாராவது என்னை புரொஃபசர்னு கூப்பிட்டு கௌரவிச்சதுண்டா? இப்ப என்னை அப்படிக் கூப்பிட்டு கௌரவிக்கிறவர் இங்கே இருக்கிறார் என்ற எண்ணம் என்னை கிளுகிளுக்க வைத்தது.
அப்பொழுது அவர் திடீரென்று
“ புரொஃபசர் சார், தப்பா நெனக்கல்லேன்னா ஒண்ணு கேக்கலாமா?” என்று அவர் பேசி முடிப்பதற்குள், மகாவிஷ்ணு தன் பக்தனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்பது போல்
“ கேளுங்கள். ஏன் தயங்குறீங்க? “ என்று நான் சொல்ல என் பேச்சைக் கேட்டுத் தயக்கம் நீங்கி அவர்
“எனக்கு அர்ஜண்டா ஒரு நூறு ரூபா தேவை. ஒரு முக்கிய வேலை ஒண்ணு முடிக்க வேண்டி இருக்கு. இப்ப இதுக்காக அடையாறுலே இருக்கும் என் வீட்டுக்குப் போய் பணம் எடுத்துக் கிட்டு வரதுன்னா டைம் ஆயிடும். கடையை மூடிடுவான். அதனாலே இப்ப எனக்கு உடனடியா ஒரு 100 ரூபா கொடுத்தீங்கன்னா, வந்த வேலையை முடிச்சிப்பேன். உங்க வீட்டு அட்ரஸ் எனக்குத் தெரியும். நான் நேராகவே நாளைக்கு இதே நேரம் பணத்தை எடுத்துகிட்டு உங்க வீட்டுக்கே கொண்டு வந்து தந்துடறேன். நீங்க இந்தப் பணத்துக்காக என்னைத் தேடி வந்து சிரமப் படவேண்டாம் இந்த வயசுலே” என்றார்.
“இந்த வயசுலே” என்று அவர் சொன்னது எனக்குக் கொஞ்சம் வருத்தத்தை அளித்தது. இருந்தாலும்
“இவ்வளவு தெரிந்தவர், எனக்குப் பென்ஷல்பில் பாஸ் பண்ணி பென்ஷனை மாசாமாசம் தவறாமல் அனுப்புபவர். யார் யாரென்று தெரியாத கண்ட கண்ட மனுஷங்க கிட்டே எல்லாம் ஏமாந்துட்டோம். இவருக்கு ஹெல்ப் பண்ணினா, நமக்கு நல்லது தானே” என்று என் பையில் பார்த்தேன்.
“என்னிடம் ஒரு 500 ரூபாய்நோட்டும் கொஞ்சம் சில்லலறையும்தான் இருக்கு” என்றேன்.
“புரொஃபர் சார், நீங்க அந்த 500 ரூபா நோட்டைத்தாங்க. ( பெருந்தன்மையாக) சில்லரையை நீங்களே வெச்சிக்குங்க.
நான் நாளைக்கு உங்க வீட்டுக்கு வந்து கொடுத்திடறேன். என்மேலே நம்பிக்கை இல்லையா உங்களுக்கு, ப்ரஃபசர் சார்”. என்றார்.
“சரி” யென்று 500 ரூபாய் நோட்டை அவரிடம் கொடுத்தேன்.
முதல்நாள் ஆவலுடன் காத்திருந்தேன். பயனில்லை.
இரண்டாம்நாள் பொறுமையுடன காத்திருந்தேன். பயனில்லை.
மூணாம் நாள் மௌனமாகக் காத்திருந்தேன். பயனில்லை.
அந்த ஆள் பேச்சு மூச்சையே காணோம்.

அன்று சாயந்திரம் வாக்கிங் போகும்போது, யுனிவர்சிடி ஆபீசுலே வேலே செய்து கொண்டிருந்த வேறு ஒருவரை தற்செயலாகக் கண்டேன். அப்போது அவரிடம் கேட்டேன்
“ கண்ணாயிரத்தை உங்களுக்குத் தெரியுமா?”
“என்ன சார் அப்படிக் கேட்டுட்டீங்க. நானும் அவரும் ஒரே செக்‌ஷன்லே தானே வேலை செஞ்சிக்கிட்டிருந்தோம்.ஏன்? அவரைப் பத்தி விசாரிக்கிறீங்க?” என்றார் “கண்ணாயிரம் மூன்று நாள் முன்பு 500 ரூபாயைக் கடனா கேட்டார். நானும் கொடுத்தேன் மறுநாளே வீட்டுக்கு வந்து தந்துடறதாச் சொன்னார். ஆனா ஆளே வரல்லை. ஒரு வேளை அவருக்கு உடம்பு சரியில்லையோ? என்னன்னு தெரியுமா உங்களுக்கு? “ என்று கேட்டேன். பிறகு நடந்த சோகக் கதையை அவரிடம் விவரமாகச் சொன்னேன்
“சார், ஏமாந்துட்டீங்களேசார். அவர் ரிடையர் ஆயி ஒரு மாசம் ஆயிடுச்சு. ஃபேமிலியோட நேத்து தான் சொந்த ஊருக்குப்போறார்” என்றார்.
வீதியிலே போன அரணையைக் காதுலே விட்டுக்கிட்டு குடையுதே, குடையுதே என்றானாம் ஒருத்தன். அந்த ஒருத்தன் வேறே யாருமில்லே. அடியேன்தான்.
அது எப்படி ஒரு ஆள் ஒரு தரம் ஏமாறலாம். ஒரு நாள் ஏமாறலாம். ஆனா ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தர் கிட்டே ஏமாறறதுக்குத் தனித்திறமை வேணும். அந்தத்திறமை எங்கிட்டே நிறைய இருக்கு போல இருக்கு. என்னை மாதிரி நாலு பேர் இருக்கிறதாலேதான் ஊரிலே இந்த மாதிரி நாலு பேர் பிழைக்கிறாங்கன்னு நெனக்கிறேன்.
இவ்வளவு அனுபவங்கள் இருந்தும் எப்பொழுது நான் ஏமாறுவதை நிறுத்தப்போகிறேன். தெரியல்லே. நான் ஏமாறப் பிறந்தவன் போல இருக்கு.
அந்நேரத்தில் “ ஏமாறச் சொன்னது நானோ.....” என்ற பாட்டு எங்கிருந்தோ அலறிக் கொண்டிருந்தது.

எழுதியவர் : ரகுருஸ் ( ராகு) (4-May-20, 7:02 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 56

சிறந்த நகைச்சுவைகள்

மேலே