ஒன்றும் இல்லை
ஒன்றும் இல்லை
மதுரை TVS நகரிலே என் தங்கை வீட்டிலே தங்கி இருந்தேன். அன்று காலை பிரேக்ஃபாஸ்டை நிதானமாக முடித்துக்கொண்டு ஒன்பதரை மணி வெயிலில் நானும் என் மைத்துனரும் அதாவது brother in law ( அப்படிச் சொன்னாத்தான் பல பேருக்கும் புரிகிறது) பழங்காநத்தம் பஸ் ஸ்டாப்பிலே திருப்பரம்குன்றம் போக காத்திருந்தோம். ஒரு 10 நிமிஷம் இருக்கும். பஸ் எதுவும் வந்த பாடில்லை. வெயிலோ சுளீரென்று அடிக்கிறது. மொட்டை வெயில். பக்கத்திலு எங்கேயுமே நிழல் இல்லை. எனக்கு என் கால்கள் இரண்டும் வெலவெலத்துப் போக ஆரம்பித்தது. “கோபால், என்னால் நிற்க முடியவில்லை. இங்கேயே ஓரமாய் உட்கார்ந்து கொள்கிறேன்” என்று கூறியபடி நான் அங்கிருந்த ஒரு கல்லின் மீது உட்கார்ந்தது தான் தெரியும். என்ன ஆயிற்றோ தெரியவில்லை.
கண் விழித்துப்பார்த்த பொழுது நான் ஒரு படுக்கையில் ஆஸ்பத்திரியில் படுத்திருந்தேன். “என்ன ஆயிற்று?” என்று சினிமா பாணியில் என் அருகிலிருந்த கோபாலைக் கேட்டேன். அதற்குள் “உஷ், பேசக்கூடாது. ரெஸ்ட் எடுத்துக்குங்க” என்று அங்குள்ள ஒரு நெட்டை நர்ஸ் கூற நான் அமைதியானேன்.
கோபால் என் அருகில் வந்து மெதுவாக
“ நீ, பஸ் ஸ்டாப்பில் மயக்கம் போட்டு விழுந்துட்டே. உடனே அங்கு இருந்தவங்க உதவியோடு ஒரு ஆட்டோ பிடிச்சு உன்னை இந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்துட்டேன்” என்றான்.
“அப்படியா, இப்ப எனக்கு ஒண்ணும் இல்லை. நான் தெளிவாக இருக்கிறேன். மயக்கம் நன்றாகத் தெளிந்து விட்டது. வீட்டுக்குப் போகலாம்” என்றேன்.
அதற்குள் நர்ஸ் வந்து “ பேசி ஸ்ட்ரெயின் பண்ணிக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு ப்ளட் டெஸ்ட் பண்ணணும். கையைக்காண்பியுங்கள்” என்று சொல்லி என் இடது கை ஜாயிண்டின் நடுவில் ஒரு நரம்பைக் கண்டு பிடித்து ஒரு ஊசியைச் செருகி நான் ஆஆ என்று கத்த ரத்த சாம்பிளைக் கலெக்ட் செய்தார்.
என் மைத்துனன் வீட்டில் கடந்த மூன்று நாட்களாக நான் சாப்பிட்ட சாப்பாட்டில் என் உடம்பில் எவ்வளவு ரத்தம் ஊறி இருக்குமோ அவ்வளவு ரத்தத்தையும் கலெக்ட் பண்ணிவிட்டார். மூணு நாள் சாப்பாடு வேஸ்ட் .
இன்னொரு நர்ஸ் என் B.P யை செக் செய்தார். சுகர் இருக்கா என்று கேட்டார். வேறு நேரமாக இருந்ததிருந்தால் வீட்டில் இருக்கிறது என்று சொல்லி இருப்பேன். இங்கு இந்த நேரத்தில் அதிகப்பிரசங்கித்தனம் வேண்டாம் என்று எண்ணி எனக்கு சுகர் இல்லை என்றேன். பிறகு ஏதேதோ டெஸ்டுகள் செய்ய வேண்டும் என்றார்.
நான் “:எனக்கு ஒன்றுமில்லை. வீட்டுக்குப் போகிறேன்” என்றேன்.
நான் மிகவும் நார்மல் ஆகிவிட்டேன். அந்த நேரத்தில் என்னால் எழுந்து ஓடக்கூட முடியும் என்னும் அளவுக்கு நான் உணர்ந்தேன்.
அந்த நர்ஸோ “ மயக்கம் போட்டு விழுந்து கால்மணி நேரம் கழித்து இப்ப தான் கண் விழிச்சி இருக்கிங்க. எழுந்து நடக்கவே கூடாது. சும்மா படுங்க. டாக்டர் இப்ப
உங்களைப் பார்க்க வரப்போறார். அப்பொழுது இந்த மாதிரி எதுவும் ( உளறாமல் என்பதற்குப் பதிலாக நாசூக்காக) பேசாமல் படுங்க,” என்று ஒரே போடாய்ப் போட்டு விட்டார்.
நான் சொல்வதை அங்கே யாரும் காதில் போட்டுக் கொள்வதாயில்லை.
*******
என் நினைவுகள் பின் நோக்கிச் சென்றன.
இதே மாதிரி ஒரு ஆண்டுக்கு முன் பெங்களூரில் ஃபோரம் (Forum) மாலுக்குச் சென்றிருந்த போது வயறு நிறைய மசால் தோசை சாப்பிட்டு நான் என் மகள், மருமகன் ஆகியவர்களுடன் மாலின் ஸ்டால்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எப்படிப் பெண்களுக்கு புடவைக்கடையில் ஒரு புடவையும் வாங்காவிட்டால்கூட அதை வேடிக்கை பார்ப்பதில் ஆர்வமோ அந்த மாதிரி எனக்குப் புத்தகக் கடையில் நின்று புத்தகங்களைப் பார்ப்பதில் அலாதி திருப்தி. ஒரு புத்தகக் கடையிலுள்ள புத்தகங்களைப் பார்த்துக் கொண்டு இருக்கும்போதே எனக்கு கால் துவள ஆரம்பித்தது. நிற்க முடியவில்லை. என்மகளிடம் சொல்லி நான் அந்த இடத்திலேயே உட்காந்துவிட்டேன், இன்று நடந்தது போலவே. அவ்வளவுதான்தெரியும். மயக்கமாகிவிட்டேன். ஒரு பதினைந்து நிமிடம் ஆகி இருக்கலாம் என்று நினைக்கிறேன். மாலின் அந்தப்பகுதியில் ஒரே களேபரம். என் மகள் ஏதோ துணியை வைத்துத்தரையைத் துடைத்துக் கொண்டிருந்தாள். அப்பொழுதுதான் எனக்குத் தெரிந்தது நான் மயக்கமாய் விழுந்த போது வாந்தியும் எடுத்திருந்தேன் என்று. ஃபோரம் மால் ஒலிபெருக்கி அலறியது. சற்று நேரத்திற்கெல்லாம் மால், மற்றும் ஆம்புலன்ஸைச் சேர்ந்த நால்வர் என்னை ஒரு ஸ்ட்ரெட்சரில் போட்டார்கள். முன்னே பின்னே தெரியாத அந்த நாலு பேர்கள் நான் பேந்தப்பேந்த முழித்த என் முழியைப் பற்றி சற்றும் கவலைப் படாமல் ஸ்ட்ரெட்சரோடு தூக்கிக் கொண்டு போய் ஆம்புலன்சில் போட்டார்கள். ( எல்லோருக்கும் “அந்த நாலு” பேர் தூக்கும் வாய்ப்பு அவர்கள் உயிரோடு இருக்கும் போது கிடைக்காது. ஆனால் முழு விழிப்புடன் நான் இருக்கும்போது இதை நான் அனுபவித்தது தான் எனக்கு கிடைத்த பெருமை)
அப்போது எனக்கு மயக்கம் முற்றிலுமாகத் தெளிந்து விட்டது. நான் எழுந்து உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம் என்று நினைத்து எழ முயற்சி செய்தேன். எழுந்திருக்கக் கூடாது என்று அங்கிருந்த அனைவரும், என்மகள் உட் பட, என்னை மிரட்டாத குறையாக உத்தரவிட்டனர். என் அருகில் என் மகள் இருந்தாள். இங்கே எத்தனை நேரம் ஆகுமோ தெரியாது என்பதால் என் மாப்பிள்ளையை அவருக்கு வேறு ஒரு அவசர வேலை இருந்ததால் அனுப்பிவிட்டாள். என்மனைவி வீட்டில் இருந்தாள். அவளுக்கு இங்கு நடந்து கொண்டிருக்கும் சமாசாரம் எதுவும் தெரியாது. நான் தெளிவாகவும் தெம்பாகவும் இருக்கிறேன் என்று எவ்வளவு கரடியாய்க் கத்தியும் சும்மா இருங்கள் என்று என்னை மிரட்டினார்களே ஒழிய ஐயோ பாவம் என்று சொல்ல அங்கு யாருமில்லை. என்பேச்சு சுத்தமாக அங்கு எடுபடவில்லை. ஒரு ஸ்பெஷல் வார்டில் என்னைத் தூக்கிப் போட்டார்கள். என்னை டாக்டரிடம் ஒப்படைத்துவிட்டு என்மகளும்வீட்டிற்குச்சென்று விட்டாள். அவளிடம் “நான் நன்றாகத்தான் இருக்கிறேன். எனக்கு ஒன்றும் இல்லை. யாரும் பயப்பட வேண்டாம்” என்று கூறி “நீங்க யாரும் என்னை பார்க்க இங்கு வந்து சிரமப்பட வேண்டாம் என்று கூறி அனுப்பிவிட்டேன். ( ஆனாலும் என் மகள் தினம் ஒரு தரம் என்னைப் பார்த்து விட்டுப் போனாள்) மூன்று நாள் ஆஸ்பத்திரி வாசம். எல்லாடெஸ்டுகளையும்
செய்ய வேண்டும் என்று ரத்தம், யூரின், மலம் என்று மூன்று நாள் என்னைப் பாடாய்ப். படுத்திவிட்டார்கள். மூளையை ஸ்கேன் எடுத்தார்கள். என்ன கோளாறு என்று அங்கு என்னை அடெண்ட் பண்ணின மூன்று டாக்டர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. மூளையை ஸ்கேன் செய்த டாக்டர் எனக்கு
தலையிலே ஒண்ணுமில்லை என்று தெளிவாகச்சொல்லிவிட்டார். டாக்டர்கள் ஆளாளுக்கு ஒன்று சொன்னார்கள். ஆனால் அத்தனை பேரும் எனக்கு தலையிலே எதுவும் இல்லை என்று சொல்வதில் ஒத்துப் போனார்கள். அத்துடன் ஒரு டாக்டர் எனக்கு இருக்கும் கோளாறு vaso vagal syncop ஆக இருக்கலாம் என்று கூறி “ நீங்கள் சாப்பிட்டவுடன், நிற்பதோ, நடப்பதோ கூடாது “ என்ற அட்வைசுடன் கட்ட வேண்டிய ஃபீஸைக் கட்டச் சொல்லி, கட்டியவுடன் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பினார்கள். வீட்டுக்குப்போய் என்மனைவியுடம் நடந்ததை எல்லாம் ஒன்றுவிடாமல் சொன்னேன். என் தலையை ஸ்கேன் செய்ததில் என் தலையில் எதுவும் இல்லை என்று எல்லா டாக்டர்களும் ஏகோபித்து சொன்ன முடிவையும் சொன்னேன். எல்லாருக்கும் தெரிஞ்ச சமாசாரத்தைக் கண்டுபிடிக்க இத்தனை செலவா என்று சலித்துக் கொண்டாள் என் மனைவி.
*********
இந்த அனுபவத்தினால் எனக்கு இந்த டெஸ்டுகளெல்லாம் தேவையில்லை. ஒரு பத்து நிமிடம் ஓய்வெடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில்தான் “எனக்கு ஒன்றுமில்லை. வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள் என்றால் யாரும் கேட்பதாயில்லை. டாக்டர் வந்தார். கை நாடியைப் பார்த்தார். ஸ்டெதாஸ் கோப்பை வைத்து செக் செய்தார். “மயக்கம் என்பது தலை சம்பந்தப்பட்ட படியால் தலை ஸ்கேன் செய்ய வேண்டும். அதற்கு அப்புறம்தான் என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்பதை தீர்மானம் செய்ய முடியும். இந்த மருத்துவ மனையில் ஸ்கேன் வசதி இல்லாத தால் அருகிலுள்ள ஸ்கேன் சென்டருக்கு இவரை உடனே எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யுங்கள்” என்று நான் சொல்ல வந்ததை சொல்லவிடாமல் டாக்டர் அங்கிருந்து விருட்டென்று வெளியேறினார். “அதெல்லாம் தேவையில்லை” என்று நான் சொல்ல, “சார், டாக்டரே சொல்லிட்டார். அவர் சொன்னா அதுலே பாயின்ட் இருக்கும். இந்த சிகிச்சையை பாதியிலே விட முடியாது. அப்புறம் உங்களுக்கு சீரியஸா எதாவது ஆனா, நீங்க கடைசியிலே எங்க ஹாஸ்பிடலையும், எங்க டாக்டரையும் தான் தப்பு சொல்வீங்க. அதனாலே நீங்க இந்த ட்ரீட் மெண்ட் முடியற வரையிலும் எங்களோட ஒத்துழைச்சுத்தான் ஆகணும்” என்று ஸ்டிரிக்டாகச் சொல்லிவிட்டார் அந்த நர்ஸ்.
அப்ப எனக்கு அந்த ஜோக் ஞாபகம் வந்தது.
டாக்டர் சொல்கிறார் “ இந்த பேஷன்ட் அவுட்.” என்று.
அப்ப அந்த பேஷன்ட் “ டாக்டர் நான் உயிரோடுதான் இருக்கேன்” என்று கத்துகிறார்.
பக்கத்திலிருந்த நர்ஸ்” சும்மா கிட. டாக்டரைவிட உனக்கு ரொம்பத் தெரியுமோ” என்றார்,
தேவை இல்லாமல் அந்த நேரம் அந்த ஜோக் ஞாபகம் வந்தது. சிரித்தேன். என் சிரிப்பைப் பார்த்து அருகிலிருந்த நர்ஸ் கட்டாயம் என் மூளை பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று நினைத்து மேலும் என்னை பேசவிடாமல் அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டார். நானும் வேறு வழியின்றி அமைதி ஆகிவிட்டேன். பத்து நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. உடனே இருவர் ஒரு ஸ்ட்ரெட்சரைத் தூக்கி வந்தார்கள். அந்த ஆம்புலன்ஸ் என் படுக்கையிலிருந்து 15அடி தூரத்தில் இருந்தது. எனக்கு எந்த விதமான சோர்வும் இல்லை. விட்டால் நான் வேகமாக நடந்து போய் வண்டியில் ஏறிக்கொண்டு இருப்பேன். யாரும் விடுவதாக இல்லை. நீங்கள் இந்த நிலையில் ஒரு அடிகூட நடக்கக்கூடாது என்று சொல்லி என்னை ஸ்ட்ரெட்சரில் இழுத்துப்போட்டு அந்த ஸ்ட்ரெட்சரை ஆம்புலன்ஸுக்குள்ளே தள்ளினார்கள். என் மைத்துனனும் ஏறிக்கொண்டான். வண்டி புறப்பட்டது. கொட்டக்கொட்ட விழித்த நிலையில் நிமிர்ந்து உட்கார்ந்து வேடிக்கை பார்க்க அனுமதிக்காததால் நான் படுத்தபடியே பழங்கானத்தம் பைபாஸ் ரோடில் இருந்த ஸ்கேன் சென்டருக்கு எடுத்துச்சென்றார்கள்.
இந்த உலகத்திலேயே எந்த பயமுமின்றி முழுத்தெளிவாக ஆம்புலன்ஸில் உலா போன ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்.
ஒரு பதினைந்து நிமிடத்தில் என்னை அங்கே இறக்கி அங்குள்ள ஒரு நாற்காலியில் அமர வைத்து அவர்கள் “நீங்க அந்த கௌண்டர்லே சொன்னீங்கன்னா மத்ததெல்லாம் அவங்க பாத்துப்பாங்க” என்று சொல்லிவிட்டு போயே போய்விட்டார்கள். எனக்குத் துணை என் மைத்துனர்தான். ஆம்புலன்ஸுலே ஒருத்தர் வந்திருக்கிறாரே, என்ன ஏது என்று அந்த சென்டரிலிருந்த எந்த ஜென்மமும் கவலைப்படவில்லை. சரி. நம்மை யாரும் விசாரிக்க மாட்டாங்க. நாம தான் யாரையாவது விசாரிக்க வேண்டும் என்று அந்தக் கௌண்டருக்கு கோபால் சென்று “தலை ஸ்கேன் செய்ய எங்கே போகணும். ஆஸ்பத்திரியின் பெயரைச்சொல்லி..இந்த ஆஸ்பத்திரியிலிருந்து இந்த மாதிரி அங்கே உட்கார்ந்திருக்கிறாரே அவருக்கு தலை ஸ்கேன் செய்யணும். இதோ டாக்டர் கொடுத்த விவரம்” என்று அந்த லெட்டரைக் காட்டி “எங்கே போகணும்” என்று கேட்க, கௌண்டரில் இருந்தவர் “ மூன்றாம் மாடிக்குப் போங்க என்று கூறிவிட்டார். சரி என்று சொல்லிவிட்டு லிஃப்டைத் தேடினோம். கண்ணில் படவில்லை. விசாரித்ததில் அங்கு லிஃப்ட் கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். பிறகு எப்படிப்போவது என்று கேட்டதற்கு எங்களை ஒரு மாதிரி பார்த்துவிட்டு, படி ஏறித்தான் போகணும் என்றார்கள். மூணு மாடிப்படியையுமா என்ற என் கேள்விக்கு மூணாம் மாடிக்குப்போகணும்னா மூணு மாடிப் படிகளையும் ஏறித்தான் ஆகணும் என்றார் விஷயம் அறிந்தவர். “ஆனா அவர் மயக்கமாய் கீழே விழுந்தவர். அவரை நடக்கக்கூடாதுன்னு சொல்லித்தான் ஆம்புலன்ஸுலே இங்கே கூட்டிட்டு வந்தாங்க. இப்ப அவரை மூணு மாடி ஏறச்சொல்றீங்களேன்னு கோபால் சொன்னதுக்கு “அதுக்கு நாங்க என்ன பண்ணணுங்கிறீங்க. வேணும்னா நாங்க லிஃப்ட் கட்டற வரையிலும் காத்திருங்க. இல்லை என்னிக்கு உங்களாலே மூணு மாடி ஏற முடியுமோ அன்னிக்கி வாங்கன்னு” மூஞ்சியிலே அடிச்ச மாதிரி சொல்லிட்டாங்க.
ஒரு இடத்துலே என்னடான்னா என்னை எழுந்திருக்கக்கூட விடவில்லை. ஒரு 15 அடி தள்ளி இருக்கிற ஆம்புலன்ஸுக்கு நடந்து போக க்கூடாதுன்னுட்டாங்க. இங்கே என்னடான்னு மூணு மாடி கூசாம ஏறச்சொல்றாங்க. அப்புறம் என்ன பண்றது? நான் பெருமை அடிச்சிக்கிட்டு இருந்தேன் இல்லையா நான் நார்மலாத்தான் இருக்கேன், ஓடக்கூட ஓடுவேன்னு. அதுக்கு ஒரு சவால் வந்தது இப்ப. “கோபால் சரி வா, மாடிப் படி ஏறிப்போவோம்” என்று கூறி மெதுவாக படியேறி மூச்சிறைக்க ஒரு விதமாக மூன்றாம் மாடி ஏறி பெருமூச்சு நின்றவுடன் என் தலையை ஸ்கேன் செக்ஷனுக்குப் போய் மெஷினுக்குள் தலையை விட்டேன். ஒரு அரைமணி நேரத்தில் ரிசல்டை கொடுத்தார்கள். அதைக்கையில் வாங்கிக்கொண்டு நேராக ஒரு ஆட்டோ பிடித்து ஆஸ்பத்திரிக்குப் போய் டாக்டரிடம் அதைக்காண்பித்தோம். டாக்டர் மறு நாள் என்னை வரச்சொன்னார்.
மறுநாள் போனோம். டாக்டர் “தலையிலேதான் பிரச்சினை இருக்குமோன்னு நெனச்சேன். ஆனால் உங்க தலையிலே ஒண்ணும் இல்லைன்னு” சொல்லி போன வருடம் டாக்டர்கள் பெங்களூரில் சொன்னதை கன்ஃபர்ம் செய்தார். அப்போது டாக்டரிடம் பெங்களூரில் நடந்ததைச் சொன்னேன். அப்பொழுது டாக்டர் “ஏன் இதை எங்கிட்டே இதை எல்லாம் முதலிலேயே சொல்லல்லை” என்று கேட்டார்.
“என்னை யாரும் பேச விடவில்லை, டாக்டர்” என்றேன். இருந்தாலும் மீசையிலே மண் ஒட்டவில்லை என்பது போல டாக்டர் “ இருந்தாலும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா செக் பண்றது நல்லதுதான். அதுலே தப்பில்லை” என்று சமாளித்து “நீங்க ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டவுடன் வெயிலில் நடந்தும் நின்றும் இருந்திருக்கிறீர்கள். அதுதான் பிராப்ளம். இனிமேல் சாப்பிட்டவுடன் நிற்பதையும் நடப்பதையும் தவிருங்கள். அதிலும் குறிப்பாக வெயிலில் நடக்க வேண்டாம்” என்றார். ஏற்கனவே கேட்ட அதே உபதேசங்கள்,
ஆனால் டாக்டர்கள் வெவ்வேறே.
இன்னொரு இடத்தில் வேறொரு காரணத்திற்காக தலை ஸ்கேன் செய்ய வேண்டி வந்தது. அப்பொழுதும் அதே ரிசல்ட் தான். ஆக மூன்று வெவ்வேறு இடங்களிலுள்ள , மூன்று வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் இருந்த மூன்று வெவ்வேறு டாக்டர்கள் “உங்கள் தலையில் ஒன்று மில்லை” என்ற ஒரே உண்மையைச் சொன்னதில் ஒத்துப் போனதில் எனக்கு சந்தோஷம்தான். என் தலையில் கோளாறு ஒன்றுமில்லை என்பதில் “கோளாறு” என்பதைச் சொல்லாமல் விட்டதுதான் கோளாறே தவிர டாக்டர்களிடம் வேறு கோளாறு இல்லை.