குமரேச சதகம் - பயன் இல்லாதவை - பாடல் 27

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கடல்நீர் மிகுந்தென்ன ஒதிதான் பருத்தென்ன
காட்டிலவு மலரிலென்ன
கருவேல் பழுத்தென்ன நாய்ப்பால் சுரந்தென்ன
கானில்மழை பெய்துமென்ன

அடர்கழுதை லத்திநிலம் எல்லாம் குவிந் தென்ன
அரியகுணம் இல்லாதபெண்
அழகாய் இருந்தென்ன ஆஸ்தான கோழைபல
அரியநூல் ஓதியென்ன

திடம்இனிய பூதம்வெகு பொன்காத் திருந்தென்ன
திறல்மிகும் கரடிமயிர்தான்
செறிவாகி நீண்டென்ன வஸ்த்ரபூ டணமெலாம்
சித்திரத் துற்றுமென்ன

மடமிகுந் தெவருக்கும் உபகாரம் இல்லாத
வம்பர்வாழ் வுக்குநிகராம்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 27

- குருபாததாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு மலைமேவு குமரேசனே!

கடலிலே மிகுதியான நீர் இருந்து பயன் என்ன? ஒதியமரம் பருத்திருந்து பயன் என்ன? காட்டிலவு மலர்ந்தால் பயன் என்ன?, கருவேல மரம் பழுத்துப் பயன் என்ன? நாய்க்குப் பால் சுரந்தால் பயன் என்ன? கானில் மழைபெய்தும் என்ன - காட்டிலே பெய்த மழையால் யாருக்குப் பயன்?

மிகுதியாகக் கழுதைச் சாணம் நிலமுழுதும் குவிந்தாலும் பயன் என்ன? நற்பண்பிலாத நங்கை அழகாயிருந்தாற் பயனுண்டோ? அவையிலே பேச அஞ்சுங் கோழை அருமையான பல கலைகளைக் கற்றும் பயனேது?

பேராற்றலுடைய பூதம் மிக்க செல்வத்தைக் காத்திருந்தாலும் அதனால் பயனடையுமோ? வலிமைமிக்க கரடிக்கு அடர்த்தியான நீண்ட மயிரிருப்பதால் ஏது பயன்?, ஆடையும் அணியும் ஓவியத்திற் கிருந்தால் ஏது பயன்? அனைத்தும், அறிவின்றி, மற்றோருக்குப் பயன்படாத வீணரின் வாழ்வுக்குச் சமமாம்.

கருத்து:

பண்பிலாப் பெண்ணின் அழகும் அவைக்கஞ்சுவோரின் கல்வியும் மற்றோர்க்குப் பயன்படாத
பேதையரின் செல்வத்திற்குச் சமம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-May-20, 11:14 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

சிறந்த கட்டுரைகள்

மேலே