405 தன்பெயர் எழுதாப் பொருள் தனது என்பது எங்ஙனம் - பொருளாசை ஒழித்தல் 1

அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

என்பொருளென் பொருளென்று சீவன்வி டுமனமேயொன்(று)
..இயம்பக் கேளாய்
உன்பொருளால் ஆனதன்மே லுன்னாமம் வரைந்துளதோ
..உன்ற னோடு
முன்பிறந்து வளர்ந்ததுகொல் இனியுனைவிட்(டு)
..அகலாதோ முதிர்ந்து நீதான்
பின்பிறக்கும் போததுவுங் கூடவிறந் திடுங்கொல்லோ
.பேசு வாயே. 1

- பொருளாசை ஒழித்தல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

”நெஞ்சே! என்னுடைய பொருள், என்னுடைய பொருள் என்று உயிர் விடுகின்றாய்! உனக்கு ஒன்று சொல்கிறேன் கேள்.

உன் பொருளானால் அப்பொருளின் மேல் உன் பெயர் எழுதப்பட்டு இருக்கிறதா? நீ பிறக்கும் போது உன்னுடன் பிறந்து வளர்ந்ததா?

இனி மேலும் அது உன்னை விட்டு நீங்காதா? நீ மூப்படைந்து இறக்கும் பொழுது அதுவும் உன்னோடு இறந்திடுமா? என்று சொல்” என்று கேட்கிறார் இப்பாடலாசிரியர்.

பின்பிறக்கும்: பின்பு + இறக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-May-20, 11:32 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

சிறந்த கட்டுரைகள்

மேலே