451 படித்துப் பழகியபின் கைக்கொளல் எளிதாம் - அறஞ்செயல் 3

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

சிற்பநூலி லக்கணநூல் வைத்தியநூல் மரக்கலநூல்
..செருநூ லின்னம்
பற்பலநூ லுணர்வதினும் புண்ணியநூ லரிதாமோ
..பகரந் நூல்கள்
கற்பதன்முன் னரிதெனினும் பின்னெளிதா மதுபோனற்
..கரும மென்னும்
அற்புதநூல் முயலுவோர்க் கெளிதாகு மதையடைவா
..யறிவி னெஞ்சே. 3

- அறஞ்செயல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

”சிற்ப நூல், இலக்கண நூல், மருத்துவ நூல், மரக்கல நூல், போர் நூல் முதலான இன்னும் பல நூல்களை அறிவதை விட புண்ணிய நூல் கற்பது சிரமமானதா, சொல்?

முன்னே சொல்லிய நூல்கள் படிப்பதற்கு முன் சிரமமாக இருந்தாலும் படித்த பின் எளிதாவது போல, பயனுடையது எனப்படும் புண்ணிய நூலும் முயன்று கற்போர்க்கு எளிதாகும்.

அறிவுடைய நெஞ்சமே! அந்த புண்ணிய நூலை வழியாகக் கொண்டு வாழ்வாயாக” என்று அறிவுறுத்துகிறார் இப்பாடலாசிரியர்.

சிற்பம் - கல்தச்சு. வைத்தியம் - மருத்துவம். மரக்கலம் – கப்பல்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-May-20, 11:59 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே