அன்னம் இரங்காமல்

மதுரையிலே ஒரு சமயம் திருவிழா நிகழ்ந்து கொண் டிருந்தது. மீனாட்சியம்மை அன்ன வாகனத்தே பவனி வந்து கொண்டிருந்தனள். அதனைக் கண்டு மிகவும் இன்புற்ற கவிஞர் இப்படிப் பாடுகின்றார்.

“சிவ பெருமான் ஒரு பித்தன். அவன் அப்படிப் பித்தன் ஆயினதனால், அவன் தேவி உணவும் உண்ணாது, வீதியிலே சோகத்துடன் இப்படி வந்து அலைந்து கொண்டிருக்கிறாளே” என்று பரிதாபப்படுகிறார் கவிஞர்.

நேரிசை வெண்பா

மாயனார் போற்று மதுரா புரிச்சொக்க
நாயனார் பித்தே றினாரென்றே - நேயமாம்
கன்ன(ன்)மொழி யங்கயற்கட் காரிகையாள் ஐயையோ
அன்னமிறங் காமலலை வாள். 101

- கவி காளமேகம்

பொருளுரை:

மாயனான திருமாலும் துதிக்கின்ற சிறப்புடையவரான மதுராபுரியிற் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதப் பெருமான் பித்துக்கொண்டவர் ஆயினர் என்று கருதியே அவரிடத்தே அன்புடையவளான, கருப்பஞ்சாற்றைப் போல இனிக்கும் பேச்சும், அழகிய கயல்போன்ற கண்களும் (உடைய) அழகுடையவளான மீனாட்சி அம்மையானவள் அன்ன வாகனத்தைவிட்டு இறங்காமல் (சோறு தொண்டையில் இறங்காமல்) தெருவிலே பவனி வருவாள் (தெருவீதியிலே அலைவாள்);

ஐயோ! (இரக்கக் குறிப்பு) அவள்நிலை இரங்கத் தக்கதே என்பது கருத்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-May-20, 10:58 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

சிறந்த கட்டுரைகள்

மேலே