வம்பு வாங்காதே

ஊரடங்கு தளர்த்துகின்ற நேரம்
-உனைநீயே பாதுகாத்துக் கொள்ளு
வீரனையும் நோயென்னும் கோரம்
-விளையாட்டாய்க் குத்துமொரு முள்ளு
ஆரணங்கை கண்டவுடன் ஓரம்
-அழைத்தின்பக் கதைபேசல் தள்ளு
நேரமிது சரியில்லை தூரம்
-நின்றொழுகி வாழுமின்ப மள்ளு
**
பேரூந்தில் பயணிக்கும் போது
-பிறர்தீண்டா தோரிடத்தில் நில்லு
நீரூற்றாய் பாய்ந்துவரும் கூட்டம்
-நீகண்டால் வழிவிட்டுச் செல்லு
வேரூன்று கிறக்கிருமிக் குன்னை
-விளைநிலமா யாக்கியுயிர் கொல்ல
ஊரூர்க்குத் தாவாமல் இந்நாள்
-உன்னூரில் நின்றிந்நோய் வெல்லு
**
சாராயக் கடைப்பக்க முன்னை
-சந்திக்கக் காத்திருக்கும் நண்பர்
தீராத தாகத்தீ மூட்டித்
-தேனாக அழைத்துவிடக் கூடும்
ஆராய்ந்து பாராமல் சென்று
-அகப்பட்டுக் கொள்ளாதே நோயில்
வாராது என்றெண்ணிக் கொண்டு
-வாங்காதே விலைகொடுத்து வம்பு .
**

எழுதியவர் : *மெய்யன் நடராஜ் (9-May-20, 5:53 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 101

மேலே