சென்று வா சகோதரா

சொந்த மண் விட்டு
எம் மண் வந்தாய்...
வசதியோடு வாழ வேண்டும்
என்பதற்காகவா?
இல்லை...
கூலித் தொழில் செய்து
வரும் வருமானத்தில்
மூன்று வேளையும்
குடும்ப பசியாற்ற...
கொரோனாவின்
கோரப் பிடியில்
உலகமே தத்தளிக்க!
மக்களைக் காக்க
முழு ஊரடங்கு...
பிழைப்புக்கு வழியில்லை
இவ்வேளையில்
மனைவி மக்களை
அழைத்துக் கொண்டு
சொந்த மண் செல்கின்றாய்..
இங்கேயே இப்படியே இருந்தால்
பசியில் பிள்ளைகள்
மடியும் என்றா?
இல்லை
கொள்ளை நோய்
உன்னைக் கொள்ளை கொண்டால்
அந்நிய மண்ணில்
மனைவி பிள்ளைகள்
அனாதை ஆகும் என்றா?
தோளிலும் மார்பிலும்
சுமந்து செல்கின்றாய்
பட்டினியாய் பயணிக்கின்றாய்...
வழியில் இறைவன்
உன்னைக் காக்கட்டும்...
சென்று வா சகோதரா
மீண்டும் வரும்போது
அன்போடு அரவணைப்போம்...
சென்று வா சகோதரா...
சென்று வா...