ஆயுதம்

ஆயுதம்

என்னை தோற்கடிக்க உன்னிடமுள்ள அனைத்து ஆயுதங்களையும்
கூர் தீட்டுகிறாய்

என்னை அவமானப்படுத்த
உன்னால் இயன்ற அனைத்து வழிகளிலும் முயன்று பார்க்கிறாய்

கோபம் கொண்டு
தீயை உமிழ்கிறாய்

வெறுப்புக் கொண்டு
வெம்மை வேல் பாய்ச்சுகிறாய்

விலக்கி வைத்து
வேதனையை விதைக்க நினைக்கிறாய்

அதிகாரம் கொண்டு அடக்கியாள நினைக்கிறாய்

அகங்கார வாள் கொண்டு
வெட்டி வீழ்த்த
நினைக்கிறாய்

ஆசையைத் தூண்டி அடிமையாக்க நினைக்கிறாய்

உன் வார்த்தைகளைக் கொண்டு
என் மௌனங்களை கொல்ல நினைக்கிறாய்

உன்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும்
அனைத்து உத்திகளையும்
பயன்படுத்திய பின்பும்
உன்னால் என்னை தோற்கடிக்க முடியவில்லை


ஒருமுறையாவது நின்று நிதானமாக
யோசித்திருந்தால் உனக்கு புரிந்திருக்கும்

ஆனால்
கடைசிவரையிலும் உன்னால்
புரிந்துகொள்ளவே முடியவில்லை

என்னை வெல்வதற்கான ஆயுதம்
அன்பு என்பதை.

எழுதியவர் : சூரியகாந்தி (30-May-20, 12:06 am)
சேர்த்தது : சூரிய காந்தி
Tanglish : aayutham
பார்வை : 92

மேலே