இதயக்கதவு
ஒற்றைக் குடைக்குள் இருவரும்
தனித்திருக்க செய்வதறியாது
சேயிழையாள் தவித்திருக்க
நேருக்கு நேரான விழிகளோ
பேசவென்றே துடித்திருக்க
மழைத் தூறலின் வேகத்தில் பாவையின்
மேனி அது சிலிர்த்திருக்க ஏனோ...
பாதுகாப்பு இளவரசனாகவே
பக்கத்துணையாகவே நானிருந்தேன்
அவளின் காவலனாகவே நானிருந்தேன்
விட்டு விட்டு வரும் மின்னல்
எங்கும் பட்டுத் தெரித்தபோதும்
பக்குவமாகவே பாதையை
பார்த்துப் பார்த்து நடந்து வந்தாள்
பாதங்கள் நோகாமல் நடந்து வந்தாள்
எதேச்சையாக ஏற்பட்டதுதான்
இந்த நிலை எதிர்பாராமல்
வந்த மழையினால் உண்டான
கணப்பொழுதின் உறவு இது
காலம் முழுதும் தொடர வேண்டும்
கண் முழிக்கும் முன்பே
அவள் வீடோ வந்துவிடும்
அதுவரைக்கும் தான் இந்த
அதிசயப் பயணம் அழகான தருணம்
உவகை தந்து உயிரையே ஊடுருவும்
மனதால் கூட யாரையும் நினைக்காத
கண்ணியமானவன் உண்மையில் நான்
இவளைப் பார்த்த நொடி முதல் மயங்குகிறேன்
சொல்ல முடியாமல் கிறங்குகின்றேன்
இந்த நாளில் மட்டும் ஏன் இந்த தடுமாற்றம்
மழை விட்ட பின்னும் சுருங்காத குடை போல
அவள் வீடு போய் விட்டால் கதவும்
அடைத்துக்கொண்டாள் என் இதயக்
கதவு மட்டும் அவளுக்காய் திறந்து கொண்டது
திறந்த கதவது என்றுமே மூடாது...