கவிதை எழுதிகிறேன்

தலைப்பிலா கவிதையை எழுதிடவே
களைப்பின்றி சிந்தித்தேன் கருவினை !
மலைத்துப் போனேன் கண்டவுடன்
மலைப்போல குவிந்த சிதறல்களால் !

சதையிலா பிண்டமும் உள்ளதோ
விதையிலா விருட்சமும் உண்டோ !
கதையிலா காணொளியும் இருக்கும்
பாதையிலா பயணமும் இருக்காது !

பஞ்சமில்லை எவருக்கும் தலைப்பிற்கு
வஞ்சமில்லை வகையாய் வடிப்பதற்கு !
கொஞ்சமில்லை சிந்தனைகள் சேமிப்பில்
கஞ்சனில்லை நானுந்தான் செலவழிக்க !

வளமானோர் கவிதையால் மிகசிலரே
வாய்ப்பின்றி தவிப்பவரோ பலருண்டு !
வாசிப்பவரோ இறங்குமுகம் இன்றளவு
வாதிடுபவரோ ஏறுமுகம் என்றென்றும் !

நினைத்ததை கிறுக்கினேன் நானும்
நிந்திப்பீர் எனைநிச்சயம் நீங்களும் !
வடித்திடுவோம் உள்ளத்தில் படிந்ததை
வாழ்த்திடுவோம் எழுதுகின்ற எவரையும் !

நாளொன்று எழுதி வந்தவன் நானேதான்
தாளொன்று வரும் என்னிடம் தானேதான்
கேளென்று உரைக்கும் மனதும் என்னுள்
எழுதென்று விரட்டும் விரல்கள் என்னை !

காலத்தின் கொடுமை கரோனா வந்தது
ஞாலத்தின் நிலைமை தலைகீழ் ஆனது !
சிந்திக்கும் ஆற்றலும் குறைந்து போனது
சிந்தையுள் எண்ணமும் சற்று வற்றியது !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (5-Jun-20, 9:21 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 260

மேலே